நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் 3,49, 691 பேருக்கு கோவிட் 19 பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, தமிழகத்தில் கடந்த 24 மணிநேரத்தில் 14,842 பேருக்கு புதிதாக கொரோனா நோய்த் தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோவிட் 19 காரணமாக தொடர்ந்து இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது.  


இந்நிலையில், பொது நல மருத்துவர், சிவகங்கை  Dr.A.B.ஃபரூக் அப்துல்லா தனது ஃபேஸ்புக் தளத்தில் கட்டுரை ஒன்றைப் பதிவிட்டுள்ளார். அதிகம் கேட்கப்படும் கேள்விகளும், பதில்களும் என்ற தலைப்பில் இக்கட்டுரை வெளியிடப்பட்டது.


  1. கொரோனா  பாதிப்பால் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டவர்களை குடும்ப உறுப்பினர்கள் எவ்வாறு கண்காணிக்க வேண்டும்?


விடை:   கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சாதாரண அறிகுறிகள் இருப்பவர்  வீட்டில் கழிப்பறையுடன் கூடிய அறையில் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும்.


தனிமைப்படுத்திக்கொள்ளும் காலம் 14 நாட்கள்.


தனிமைப்படுத்திக்கொண்டவரிடம் ஃபிங்கர் பல்ஸ் ஆக்சிமீட்டர் இருக்கவேண்டும். அவரது ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும்.  அது எப்போதும் 94-95% க்கு மேல் இருக்க வேண்டும்.


தினமும் மூன்று வேளை 
காலை மதியம் இரவு 
ஆறு நிமிடம் நடந்துவிட்டு 
ஆக்சிஜன் அளவுகளை சோதிக்க வேண்டும் 


நடப்பதற்கு முன்பு இருந்த ஆக்சிஜன் அளவை விட நடைக்கு பிறகு ஆக்சிஜன் அளவு 5% குறைந்தால் நுரையீரலில் நிமோனியா பாதிப்பு இருக்கிறது என்று பொருள். "ப்ரோனிங்" எனும் குப்புறப்படுத்தல் முறையில் நுரையீரலுக்கும் உடலுக்கும் அதிக ஆக்சிஜன் கிடைக்கச் செய்யமுடியும். கொரோனா பாதித்தவர்கள் தங்களைத் தாங்களே பார்த்துக்கொள்ள இயலாத முதியோர்களாகவோ அல்லது சிறியோர்களாகவோ இருப்பின்  அவர்களைப் பார்த்துக் கொள்பவர்கள், சர்ஜிக்கல் மாஸ்க் அணிய வேண்டும். தொற்றடைந்தவர்களும் மாஸ்க் அணிய வேண்டும். தொற்றடைந்தவர்கள் இருமல், தும்மல் போன்ற அறிகுறிகளை வெளிப்படுத்தினால் 
சர்ஜிகல் முகக்கவசத்துக்கு மேல் துணிக்கவசம் அணிந்து பராமரிப்பாளர் சேவகம் செய்யலாம். அவர்களுக்கென பிரத்யேகமாக உணவுப்பரிமாறும் தட்டுகள், கரண்டிகள் கொடுக்கப்பட வேண்டும். 


அவர்களது துணியை டெட்டால் போட்டு ஒரு மணிநேரம் வெந்நீரில் ஊற வைத்து பிறகு பாதுகாப்பாக துவைக்கலாம்.  கொரோனா தொற்றாளர்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருக்கும் அறையின் ஜன்னல்களை திறந்து வைத்திருக்க வேண்டும். அவர்கள் அறையில் தனியாக ஒரு குடம் தண்ணீர் வைத்திருக்க வேண்டும். தேவைப்படும் போது தண்ணீர் அருந்திக்கொண்டே இருக்கலாம். அதற்காக பிறரை கேட்டுக்கொண்டிருக்கத் தேவையில்லை 


காய்ச்சலுக்கு பாராசிட்டமால் மாத்திரை ஆறு மணிநேரத்திற்கு ஒரு முறை போடலாம். 


உணவைப்பொருத்தவரை 


எளிதில் செரிமானம் ஆகும் உணவுகளான


இட்லி / இடியாப்பம் / கஞ்சி / குழைத்த சாதம் /ரசம் / மசாலா இல்லாத குழம்பு என்று இருப்பது சிறந்தது 


டீ/காபி / பால் கொடுக்கலாம். 



2. கொரோனா நெகட்டிவ் வந்தவுடன் குடும்ப உறுப்பினர்களுடன் சகஜமாக இருக்கலாமா?


சாதாரண கொரோனா தொற்று ஏற்பட்டவருக்கு அறிகுறிகள் தோன்றிய நாளில் இருந்து பதினைந்து நாட்கள் தனிமைப்படுத்துதல் போதுமானது. 


கொரோனா "நெகடிவ்" என்று பரிசோதனை செய்யவேண்டிய தேவையில்லை. 


அவர்களுடன் எப்போதும் போல சகஜமாக பழகவேண்டும். எந்த அருவருப்போ ஒதுக்குதலோ கூடாது. 


3. அவர்கள் இருந்த அறையை எப்படி சுத்தம் செய்வது? படுக்கை, உடைகளை  சுத்தம் செய்து திரும்பவும் பயன்படுத்தலாமா? அல்லது டிஸ்கார்டு செய்வது சிறந்ததா?!


அவர்கள் தனிமைப்படுத்திக்கொண்டிருந்த அறையை ஐந்து நாட்கள் அப்படியே உபயோகிக்காமல் விட்டு, அதன்பிறகு சென்றால் அங்கு துணிகளில் பொருட்களில் இருந்த வைரஸ்கள் அனைத்தும் இறந்து போயிருக்கும். இப்போது பெட் ஷீட்/ தலையணைக் கவர்/ தலையணை விரிப்பு போன்றவற்றை எடுத்து ஒரு மணிநேரம் டெட்டால் கலந்த வெந்நீரில் ஊற வைத்து வழக்கம்போல் துவைத்து உபயோகிக்கலாம். அந்த அறையில் உள்ள மேஜை நாற்காலியை டெட்டால் தோய்த்த துணி கொண்டு துடைத்துவிட வேண்டும்.
தற்போது அந்த அறை பொது உபயோகத்துக்கு தயாராகிவிடும். 


ஒருவேளை அந்த அறையை இன்னொருவருக்கு உபயோகிக்கும் நிலை ஐந்து நாட்களுக்குள் ஏற்பட்டால்  அந்த அறைக்குள் முகக்கவசம் மற்றும் கிளவுஸ் அணிந்து சென்று மேற்சொன்ன துணிகளை எடுத்து ஒரு மணிநேரம் டெட்டால் ஊற்றி வெந்நீரில் ஊறவைத்து துவைக்க வேண்டும். அந்த அறையின் மேஜை நாற்காலி தரையை டெட்டால் போட்டு சுத்தம் செய்துவிட்டு இன்னொருவர் தனிமைப்படுத்திக்கொள்ள கொடுக்கலாம்.