சிவகங்கை மாவட்டம் சாலைப் பாதுகாப்பு விதிகளை முறையாக பின்பற்றாமல், விதிகளை மீறும் வாகன ஓட்டுநர்கள் மீது, விதி மீறல்கள் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் -மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தகவல்.
சிவகங்கையில் அதிகரித்த சாலை விபத்து
சிவகங்கை மாவட்டத்தில் சமீபத்தில் ஏற்பட்ட சில சோகமான சம்பவங்கள், சாலைப் பாதுகாப்பு விதிகளைப் பின்பற்ற வேண்டியதன் அவசியத்தை மீண்டும் உணர்த்துகின்றன. மேலும், பொதுமக்களின் பாதுகாப்பினை முதன்மைப்படுத்தும் வகையில், சாலைப் பாதுகாப்பு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
சாலை விதிகளை மீறும் நபர்களுக்கு அபராதம்
அதன்படி, தலைக்கவசம் அணியாமல் இருசக்கர வாகனத்தினை இயக்கும் ஓட்டுநர்களின், ஓட்டுநர் உரிமத்தின் மீது மூன்று மாத தற்காலிக தடையுடன் மத்திய மோட்டார் வாகனச் சட்டம் 1988, பிரிவு 129-ன் படி ரூ.1,000 அபராதம் விதிக்கப்படும் எனவும், மது போதையில் வாகனத்தினை இயக்குதல், சீல் பெல்ட் அணியாமல் வாகனத்தினை இயக்குதல், செல்போன் பயன்படுத்தி கொண்டே வாகனத்தினை இயக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுவோர்களின் ஓட்டுநர் உரிமங்களின் மீது தற்காலிக தடை நடவடிக்கை செய்யப்படுவதுடன், அசல் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்படும். ஆட்டோ ரிக்சா வாகனதாரர்கள் தங்களது வாகனத்திற்கென அனுமதிக்கப்பட்ட பயணிகளுக்கு மேல் கூடுதலாக நபர்களை ஏற்றக்கூடாது. அதனை தவறும் பட்சத்தில், தனியர்களது வாகனம் சிறைபிடிக்கப்பட்டு, அனுமதிச் சீட்டும் இரத்து செய்யப்படும்.
வாகனமும் சிறைபிக்கப்படும்
மேலும், மினிப்பேருந்துகள் மற்றும் தடப்பேருந்து வாகனங்களினை இயக்கும் அனுமதிதாரர்கள் தங்களது வாகனங்களின் படிகளில் பொதுமக்கள், குறிப்பாக பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும். இதில், குறைபாடுகள் கண்டறியப்படும் பட்சத்தில், பேருந்தின் முதன்மை அனுமதிச் சீட்டின் மீது தற்காலிக தடை நடவடிக்கை மேற்க்கொள்வதுடன், வாகனமும் சிறைபிக்கப்படும். அதேபோன்று, பள்ளி வாகனங்களின் ஓட்டுனர்கள் நிர்ணயிக்கப்பட்ட வேக அளவிலேயே பேருந்துகளை இயக்கிட வேண்டும். அதிவேகமாக பள்ளிப் பேருந்துகளை இயக்கும் ஓட்டுநர்களது ஓட்டுநர் உரிமமானது தற்காலிக தடை செய்யப்படுவதுடன், பள்ளிப் பேருந்தின் அனுமதிச் சீட்டும் இரத்து செய்யப்பட்டு, வாகனம் சிறைபிடிக்கப்படும் என சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவர் கா.பொற்கொடி, தெரிவித்துள்ளார்.