சிவகங்கை திருப்புவனம் இளைஞர் அஜித்குமார் காவல்துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு தற்போது சிபிஐ-க்கு மாற்றப்பட்டுள்ளது. இது குறித்து அறிவிப்பு வெளியிட்ட முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், காவல்துறையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அவர் கூறியது என்ன.? பார்க்கலாம்.
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் - முதலமைச்சர்
திருப்புவனத்தில் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட காவலாளி அஜித்குமார், போலீசாரால் அடித்துக் கொல்லப்பட்ட வழக்கு சிபிஐ-க்கு மாற்றம் செய்யப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான சிபிஐ விசாரணைக்கு, தமிழ்நாடு அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும் எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், விசாரணையின் போது காவலர்கள் நடத்திய தாக்குதல்தான் அஜித் மரணத்திற்கு காரணம் என்பதை அறிந்து வேதனை அடைந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், காவல்துறையினர் விசாரணையின் போது மனித உரிமையைக் காக்கும் வகையில் நடந்திட, தான் பலமுறை வலியுறுத்தி இருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அதோடு, இதுபோன்ற மனித உரிமை மீறல் சம்பவங்களை தான் எப்போதும் ஏற்றுக்கொள்வது இல்லை எனவும் கூறியுள்ளார்.
காவல் துறையினருக்கு எச்சரிக்கை
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், தனது அறிக்கையின் வாயிலாக காவல்துறையினருக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளார். அது குறித்து குறிப்பிட்டுள்ள அவர், திருப்புவனத்தில் சில காவலர்கள் செய்த செயல், மன்னிக்க முடியாதது என்றும், இனி இதுபோன்ற செயல் எக்காலத்திலும் எங்கும் யாராலும் நடந்துவிடக் கூடாது என்பதை எச்சரிக்கிறேன் என தெரிவித்துள்ளார்.
அஜித்குமார் குடும்பத்தினருடன் பேசிய முதலமைச்சர்
முன்னதாக, இன்று மாலை அஜித்குமாரின் குடும்பத்தினருடன் பேசி அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அவர்களுக்கு தேவையான உதவிகளை வழங்குவதாக உறுதி அளித்தார்.
இன்று மாலை, அமைச்சர் பெரிய கருப்பன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பொற்கொடி ஆகியோர், அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தனர். அதோடு, அரசின் நிவாரணங்கள் உடனடியாக கிடைக்க ஏற்பாடு செய்வதாக அமைச்சர் உறுதி அளித்தார்.
அதைத் தொடர்ந்து, தொலைபேசி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அஜித்குமாரின் தாயார் மற்றும் சகோதரனுடன் பேசினார். அப்போது, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்ததுடன், அஜித்குமாரின் சகோதரருக்கு நிரந்தர வேலை வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
இந்த உரையாடலை தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், திருப்புவனம் இளைஞருக்கு நடந்த கொடுமை யாருக்கும் நடக்கக் கூடாதது, யாராலும் நியாயப்படுத்த முடியாத தவறு என்று குறிப்பிட்டிருந்தார்.
கடமை தவறி குற்றம் இழைத்தவர்களுக்கு நிச்சயம் இந்த அரசு தண்டனை பெற்றுத் தரும் என்றும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு ஆறுதலாக நிற்கும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த நிலையில் தான், தற்போது இந்த வழக்கு சிபிஐ-க்கு மாற்றப்படுவதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.