சாலையில் நடந்து சென்ற பெண் - செயின் பறிப்பு
சென்னை கொளத்தூர் பூம்புகார் நகர் பகுதியில் வசித்து வரும் வளர்மதி (வயது 52) என்பவர் அஞ்சுகம் நகர் 17 வது தெருவில் நடந்து சென்ற போது அவருக்கு பின்னால் இருசக்கர வாகனத்தில் வந்த அடையாளம் தெரியாத நபர் வளர்மதியின் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் செயினை பறிக்க முயன்றபோது, வளர்மதி சுதாரித்து கொண்டு சத்தம் போட்டதும் , செயின் பறிக்க முயன்ற நபர் அங்கிருந்து தப்பிச் சென்றார்.
சிசிடிவி கேமிரா காட்சியில் சிக்கிய நபர்
இதுகுறித்து வளர்மதி V-6 கொளத்தூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். V-6 கொளத்தூர் காவல் நிலைய குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்தும் , சம்பவயிடத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமரா பதிவுகளை வைத்து மேற்படி குற்ற வழக்கில் சம்பந்தப்பட்ட நபர் காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த முகமது அன்சாரி ( வயது 30 ) என்பவரை கைது செய்தனர்.
உணவு டெலிவரி நிறுவனத்தில் பணிபுரியும் நபர்
அவரிடமிருந்து குற்ற செயலுக்கு பயன்படுத்திய இரு சக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில் முகமது அன்சாரி சென்னையில் தனியார் உணவு டெலிவரி நிறுவனத்தில் வேலை செய்து வருவது தெரிய வந்தது. கைது செய்யப்பட்ட முகமது அன்சாரி விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.
மெத்தபெட்டமைன் போதைப்பொருள் வைத்திருந்த 2 நபர்கள் கைது. 14.2 கிராம் மெத்தபெட்டமைன், ரூ.12,000/- , 2 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் பறிமுதல்.
போதைப் பொருள் தடுப்பு நுண்ணறிவுப் பிரிவு (ANIU) தனிப்படையினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் , ANIU தனிப்படையினர் மற்றும் K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் வள்ளவன் ஓட்டல் அருகே கண்காணித்து , அங்கு சந்தேகப்படும்படி நின்றிருந்த 2 நபர்களை விசாரணை செய்து , சோதனை செய்து சட்டவிரோதமாக மெத்தபெட்டமைன் போதைப் பொருள் வைத்திருந்த அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 1.அந்தோணி ரூபன் (வயது 29 ), 2.தீபக்ராஜ் ( வயது 25 ) ஆகிய இருவரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 14.2 கிராம் மெத்த பெட்டமைன், பணம் ரூ.12,000/-, 2 செல்போன்கள் மற்றும் 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது. கைது செய்யப்பட்ட இருவரும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.