டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் முனைவர் பட்டம் பெறக் காத்திருந்த பின்னணிப் பாடகி பி.சுசீலா, தடுமாறி நாற்காலியிலேயே சாய்ந்த நிலையில், அவரின் கைகளை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.


டாக்டர் ஜெயலலிதா இசை மற்றும் கவின் பல்கலைக்கழகத்தின் 2ஆவது பட்டமளிப்பு விழா இன்று சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்றது. விழாவில் பல்கலைக்கழகத்தின் வேந்தரும் முதலமைச்சருமான ஸ்டாலின் முதன்மை விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கினார்.


3,229 மாணவர்களுக்குப் பட்டங்கள்


பட்டமளிப்பு விழாவில் பல்கலைக்கழகம் மற்றும் உறுப்புக் கல்லூரிகளைச் சேர்ந்த 3,229 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கப்பட்டன.


முன்னதாக, விழாவில் பின்னணிப் பாடகி பி.சுசீலாவுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. இதை பல்கலைக்கழக வேந்தரான முதல்வர் ஸ்டாலின் வழங்கினார். முன்னதாக பட்டத்தைப் பெறுவதற்காக பி.சுசீலா எழுந்து நின்றார். வயது முதிர்வு காரணமாக அவரால் நேராக நிற்க முடியவில்லை. தடுமாறிய அவர், முதல்வரின் கைகளைப் பிடித்துக்கொள்ள முயன்றார்.


நிற்க முடியாமல், நாற்காலியிலேயே சாய்ந்தார். அவரின் கைகளை முதல்வர் ஸ்டாலின் தாங்கிப் பிடித்துக் கொண்டார்.  தொடர்ந்து அவருக்கு முனைவர் பட்டம் வழங்கப்பட்டது. 


புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்


தொடர்ந்து மாணவர்களுக்குப் பட்டங்களை வழங்கிய முதல்வர் விழாவில் பேசினார். அவர் கூறும்போது, ‘’பாடகி சுசீலாவைத் தெரியாதவர்கள் இருக்கவே இருக்க முடியாது. தமிழ்நாட்டில்‌ மட்டுமல்ல, இந்தியா முழுவதும்‌ அப்படிப்பட்ட புகழைப்‌ பெற்ற பாடகி அவர்‌. அவருக்கு விருது வழங்குவதில் பெருமை கொள்கிறேன். 


நல்ல இசை என்பது, எல்லா நன்மைகளுக்கும்‌ காரணமாக இருக்கிறது. இசைக்‌ கலையை சிறப்பாக வளர்த்து வரும்‌ பல்கலைக்‌ கழகமாக தமிழ்நாடு டாக்டர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்கலைப்‌ பல்கலைக்‌ கழகம்‌ அமைந்திருக்கிறது.


* முதன்முறையாக இந்த பட்டமளிப்பு விழாவில்‌, ஆராய்ச்சிப்‌ பட்டங்கள்‌ வழங்கப்பட்டிருக்கிறது.


* இந்தப்‌ பல்கலைக்கழகத்தின்‌ இணைப்பு கல்லூரியான டாக்டர்‌ எம்‌.ஜி.ஆர்‌ திரைப்பட மற்றும்‌ தொலைக்காட்சி நிறுவனத்தில்‌ முதன்முறையாக B.V.A பட்டம்‌ வழங்கப்பட்டிருக்கிறது.


* ஏறத்தாழ 3500 மாணவர்களுக்கு Ph.D., M.Phil., P.G., U.G., Diploma சான்றிதழ்கள்‌ வழங்கப்பட்டிருக்கிறது.


* நாட்டார்‌ கலைகள்‌, வில்லுப்பாட்டு, சவுண்ட்‌ இன்ஜினியரிங்‌, மியூசிக்‌ தெரபி மறறும்‌ வாய்ஸ்‌ ரிலேட்டட்‌ கோர்ஸ்கள்‌ என்று புதுமையான படிப்புகள்‌தொடங்கப்பட்டிருக்கிறது.


* தமிழ்நாடு டாகடர்‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்கலைப்‌ பல்கலைக்கழத்திற்கான அரசு மானியம்‌ 3 கோடி ரூபாயாக உயர்த்தி அடுத்த நிதியாண்டில் இருந்து வழங்கப்படும்‌.


* தமிழ்நாடு‌ ஜெ.ஜெயலலிதா இசை மற்றும்‌ கவின்கலைப்‌ பல்கலைக்கழத்தின்‌ ஆராய்ச்சி மையம்‌, நூலகம்‌ மற்றும்‌ கற்றல்‌ மேலாண்மை அமைப்புமுறை அமைக்க 1 கோடி ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்படும்‌’’ என்று முதல்வர் அறிவித்தார்.