தமிழநாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திரபாபு ஐபிஎஸ் நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதற்கான அறிவிப்பு வரும் 28ம் தேதி வெளியாக உள்ளதாகவும் தெரிகிறது. தமிழ்நாடு தலைமைச் செயலாளர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்ளும் மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணைய கூட்டம் நடக்க உள்ளது. ஏற்கெனவே தமிழ்நாடு அரசு சார்பில் அனுப்பப்பட்டுள்ள 11 பேர் கொண்ட பட்டியலில் மாற்றங்கள் செய்யப்பட்டு மீண்டும் ஒரு பட்டியல் அனுப்பப்பட்டது.


தமிழ்நாடு அரசு அனுப்பிய பட்டியலில் இரண்டு பேருக்கு இடையே கடும் போட்டி இருந்ததாக தெரிகிறது. ஒருவர் கரண் சின்ஹா ஐ.பி.எஸ்., மற்றொருவர் சைலேந்திரபாபு ஐபிஎஸ். இவர்களில் சைலேந்திராபு மூத்தவர் மற்றும் தமிழ்நாட்டை சேர்ந்தவர். அதோடு கரண் சின்ஹாவுக்கு தமிழ் தெரியாது. இதனடிப்படையில் தலைமைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த இறையன்பு உள்ளதால் சட்டம் ஒழுங்கு உயர் பதவியிலும் தமிழ்நாட்டைச் சேர்ந்தவரை நியமிக்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.




பட்டியலில் இடம் பெற்றுள்ளவர்கள் யார் யார் ?


பட்டியலை பொறுத்தவரை டிஜிபி அந்தஸ்தில் உள்ள சைலேந்திரபாபு, கரன்சின்ஹா, சஞ்சய் அரோரா, சுனில் குமார் சிங், கந்தசாமி, சகில் அக்தர், ராஜேஸ்தாஸ், பிரமோத் உள்ளிட்டோரும், தற்போது ஏடிஜிபி அந்தஸ்தில் இருந்தாலும், 30 ஆண்டுகளுக்கு மேல் காவல் பணியாற்றியுள்ள சங்கர் ஜிவால், ஏ.கே.விஸ்வநாதன், சீமா அகர்வால் ஆகியோரின் பெயர்களையும் சேர்த்து, மொத்தம் 11 பேர் இடம்பெற்றுள்ளனர்.


டிஜிபி தேர்வு எப்படி நடைபெறும் ?


இந்த 11 பேர் கொண்ட பட்டியலில் 3 பேரை தேர்ந்தெடுத்து, தமிழக அரசுக்கு மத்திய பணியாளர் தேர்வாணையமும், உள்துறை அமைச்சகமும் கொடுக்கும். அதில் ஒரு நபரை டிஜிபியாக தமிழ்நாடு அரசு நியமித்துக்கொள்ளலாம். இந்த தேர்வின்போது ஒவ்வொரு ஐபிஎஸ் அதிகாரியின் PAR (Performance Appraisal Report)  ஆய்வுக்கு உட்படுத்தப்படும். அதன் அடிப்படையில் UPSC விதிகள் படி மூன்று பேரையோ அல்லது தமிழ்நாடு காவல்துறை சிறப்பு சட்டத்தின்படி 5 பேர் கொண்ட பட்டியலோ மாநில அரசுக்கு தரப்படும்.




பொதுவாக அந்த பட்டியலில் நம்பர் 1ஆக உள்ள நபர்தான் டிஜிபியாக தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், மாநில அரசு தங்களுக்கு தோதாக, பட்டியலில் இருக்கும் 5வது நபரைக் கூட டிஜிபியாக தேர்வு செய்துக்கொள்ளும் நடைமுறைகள் இருக்கின்றன. கடந்த அதிமுக ஆட்சியில் கூட டிஜிபியாக இருந்த டி.கே.ராஜேந்திரன்,  பட்டியலில் 5வது இடத்தில் இருந்தார். ஆனால் அவர்தான் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக தேர்வு செய்யப்பட்டார்.


மாநிலத்தின் டிஜிபியாக ஒருவரை நியமிக்க பல்வேறு நடைமுறைகளும் சிக்கல்களும் உள்ள நிலையில், தமிழ்நாட்டின் அடுத்த டிஜிபியாக யார் வரப்போகிறார்கள் என்ற ஆவல் காவல்துறை வட்டாரத்தில் மட்டுமின்றி பொதுமக்களிடையேயும் வெகுவாக எழுந்துள்ளது. அப்படி, வரும் ஜூலை 1, 2021ல் நியமிக்கப்படும் டிஜிபி, 2023ஆம் வருடம் ஜூன் 30ஆம் தேதி வரை 2 வருடங்களுக்கு பதவியில் இருப்பார்