முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி சந்திப்பு இன்று நடைபெற்றது. இந்தச் சந்திப்பின்போது, ஆளுநர் பன்வாரி லால் புரோகித்திடம் அளித்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல்கள் புகார்கள் மீது நடவடிக்கைகள் எடுப்பது குறித்து ஆலோசனை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. டெல்லியில் வரும் 28ஆம் தேதி தமிழ்நாட்டின் டிஜிபியை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் நடைபெறுகிறது. இதில், டிஜிபி கந்தசாமி இடம்பெற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது. டி.ஜி.பி., ஜே.கே. திரிபாதி ஜூன் 30 அன்று ஓய்வு பெற உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. சிஏஜி அறிக்கையில் கடந்த ஆட்சியில் நடந்த பல குறைகள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அவற்றின் பின்னணியில் மாஜி அமைச்சர்கள் சிலர் இருப்பதாக கூறப்படுகிறது. எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக இந்த சந்திப்பு நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. குறிப்பாக, முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணி மீதான புகார்களை விசாரிக்க இந்த ஆலோசனை முக்கியத்துவம் பெறுவதாக கூறப்படுகிறது. 


சென்னை, கலைவாணர் அரங்கில் கடந்த 21-ந் தேதி தொடங்கிய சட்டப்பேரவை முதல் கூட்டத்தொடரின் கடைசி நாளான நேற்று சி.ஏ.ஜி. அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது,


“ அ.தி.மு.க. ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்த காரணமாக ரூபாய் 13 ஆயிரத்து 176 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மத்திய மின் உற்பத்தி திட்டங்களில்  ஏற்பட்ட தாமதங்கள் காரணமாக டான்ஜெட்கோவிற்கு கூடுதல் செலவாக ரூபாய் 2 ஆயிரத்து 381 கோடி ஏற்பட்டுள்ளது, உரிய காலத்தில் திட்டம் நிறைவேறாததால் பற்றாக்குறையை சமாளிக்க மின்சாரம் வாங்கியதில் கூடுதல் செலவாக ரூபாய் 2 ஆயிரத்து 99 கோடியே 48 லட்சம் ஏற்பட்டுள்ளது.


தகுதி அடிப்படையில் கடைநிலையில் இருந்து மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்த மின் உற்பத்தி நிறுவனத்திடம் இருந்து மின்சாரம் கொள்முதல் செய்ததில் ரூபாய் 493.74 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. குறைந்த விலையில் பெற வேண்டிய மின்சாரத்தை பெறாமல் கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்ததில் டான்ஜெட்கோவுக்கு ரூபாய் 349.67 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. ஒப்புக்கொண்ட அளவில் மின்சாரத்தை வாங்காததால் டான்ஜெட்கோ கூடுதலாக அளித்த தொகை ரூபாய் 122.8 கோடியாக உள்ளது.


மின்கொள்முதல் ஒப்பந்தங்களை முறையாக புதுப்பிக்காததால் ஏற்பட்ட நஷ்டம் ரூபாய் 39.48 கோடி ஆகும். சூரிய ஒளி மின்திட்டங்களை தொடங்காத நிறுவனங்களுடன் செய்த ஒப்பந்தத்தால் டான்ஜெட்கோவிற்கு ரூபாய் 605.48 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது. நீண்டகால ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டு குறுகிய கால ஒப்பந்தம் செய்ததால் ரூபாய் 93.4 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. 2015-18ம் ஆண்டில் அதிக விலையில் மின்சாரம் வாங்கியதில் டான்ஜெட்கோவிற்கு ரூபாய் 544.44 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.




வெளிமாநிலங்களில் இருந்து கிடைக்க வேண்டிய மின்சாரத்தை பெறாமல் உள்ளூரில் மின்சாரம் கொள்முதல் செய்ததால் ரூபாய் ஆயிரத்து 55.8 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. ஒப்பந்தப்படி செயல்படாத நிறுவனங்களிடம் இருந்து அதிக விலைக்கு மின்சாரம் வாங்கியதில் ரூபாய் 712 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. மின்வாரியத்திற்கு வந்து சேராத மின்சாரத்திற்கு பணம் கொடுத்த வகையில் ரூபாய் 242.9 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது' எனத்தெரிவிக்கபட்டுள்ளது. கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் மின்சாரத்துறை  அமைச்சராக தங்கமணி பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 


மேலும், அ.தி.மு.க. ஆட்சியில் 2013ம் ஆண்டு முதல் 2018ம் ஆண்டு வரை கூடுதல் விலைக்கு மின்சாரம் கொள்முதல் செய்த காரணமாக ரூபாய் 13 ஆயிரத்து 176 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது.






 


இந்நிலையில், லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்புத் துறை டிஜிபி கந்தசாமி முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை இன்று திடீர் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்புபோது, அதிமுக முன்னாள் அமைச்சர்கள் செய்த ஊழல் தொடர்பாக விவாதிக்கப்பட்ட்டதாக கூறப்படுகிறது. இதனால், முன்னாள் அமைச்சர்கள் கலக்கத்தில் உள்ளனர்.