விடுதலைக்கு முன்பாக, ஆங்கிலேய ஆட்சிக் காலத்தில் விராலிமலை சுப்பிரமணியசாமி (முருகர்) கோயிலுக்கு, பொட்டுக் கட்டிவிடப்பட்ட 32 சிறுமிகளில் முத்துக்கண்ணம்மாளும் ஒருவர். இப்போது 32 பேரில் தேவரடியார் மரபின் கடைசிப் பெண்ணாக உள்ளார். சதிர் ஆட்டத்தின் நீட்சியாக இருப்பதும் தான் மட்டுமே என்கிறார் முத்துக்கண்ணம்மாள். 


செவ்விந்தியக் கலை வகைகளில் நடனமும் ஒன்று. இது காலத்துக்கு ஏற்றவாறு கூத்து, ஆடல், நாட்டியம், சின்ன மேளம், தாசி ஆட்டம், சதிர், பரதநாட்டியம் எனப் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்டு வந்தது. எனினும் பரதநாட்டியத்துக்கான ஆதிவடிவமே சதிராட்டம் என்று அழைக்கப்படுகிறது. 


தமிழகத்தின் பாரம்பரியக் கலையான சதிராட்டத்தின் அடையாளமாகவும், ஆளுமையாகவும், தேவதாசி மரபின் கடைசிப் பெண்ணாகவும் வாழ்ந்து வரும் முத்துக்கண்ணம்மாளுக்கு நாட்டின் மிக உயரிய விருதான பத்மஸ்ரீ அறிவிக்கப்பட்டுள்ளது. அவரிடம் 'ஏபிபி நாடு' செய்தி நிறுவனம் சார்பில் பேசினோம். 


வயது 84. ஆனால் நடுக்கமில்லாத குரலோடு, தெளிவாகப் பேசுகிறார் முத்துக்கண்ணம்மாள். 


''சந்தோசமா இருக்கு. பிறந்து வளந்தது எல்லாம் வெராலிமலதான் (விராலிமலை). தலைமுறை தலைமுறையா சதிர் ஆடற குடும்பம் எங்களோடது. நானு 7-வது தலைமுறை. அய்யா (அப்பா) ராமச்சந்திர நட்டுவனார் அந்தக் காலத்திலேயே பெரிய ஆளு. கடைசியா இருந்த 32 தேவதாசிகளுக்கும் குரு. அவரோடதான் கோயிலுக்குப் போவோம். வருவோம். ரொம்ப பொறுமையா இருப்பாரு. சதிராட்டம், விராலிமலை குறவஞ்சியை சொல்லிக் குடுத்தாரு. வர்ணம், கும்மி, கோலாட்டமும் தெரியும்.




தெனமும் காலைல 9 மணிக்கு வெராலிமல சுப்பிரமணியசாமி கோயிலுக்குப் போவோம். மலைக்குப் போக 200, வர 200ன்னு 400 படிக(ள்) இருக்கும். ஆனா அப்போ அலுப்பே தெரியாது. புதுக்கோட்டை மகாராஜா கோயிலுக்குப் பச்சரிசி குடுப்பாக. அதை இடிச்சு, அரைச்சு மாவாக்குவோம். அதை பித்தளைத் தட்டுல கொட்டி, 32 பேரும் தனித்தனியா 32 தட்டுல 'ஓம் சரவண பவ'ன்னு எழுதி வைப்போம். 


சாயந்தரமும் கோயிலுக்குப் போவோம். 6 மணிக்கு சாமிக்கு தீபாராதனை காட்டும்போது அப்பா திருப்பம் பாடுவாக. எல்லாம் முடிச்சிட்டு, 8 மணிக்கு ஏகாந்தம் ஓதி சாமி கோயில சுத்தி வரும். பள்ளியறைல சாமியத் தூங்க வைச்சுட்டுத்தான் கீழ இறங்குவோம். கோயில்ல கொலு காலத்துல்ல மட்டுந்தான் சதிராடணும். பொறவு திருவிழாவுக்குதே சதிர் எல்லாம். இப்படித்தான் சாமிய சேவிப்போம்'' என்று பழைய நினைவுகளுக்குள் மூழ்குகிறார். 


அந்தக் காலகட்டத்தில் தமிழகம் முழுவதும் கோயில்களில் தேவரடியார்களாக இருந்தவர்களிடம், செல்வாக்குமிக்க நபர்கள் பாலியல் சுரண்டல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இந்த சூழலில், தொடர் போராட்டங்களின் விளைவாக, 1947-ம் ஆண்டு சென்னை மாகாணத்தில் 'தமிழ்நாடு தேவதாசிகள் ஒழிப்புச் சட்டம்' கொண்டு வரப்பட்டது. இச்சட்டம் தேவரடியார்களுக்குத் திருமணம் செய்யும் உரிமையைத் தந்தது. இந்து கோயில்களுக்குப் பெண்களை நேர்ந்து விடுவதைச் சட்டத்துக்குப் புறம்பானதாக அறிவித்தது.




தேவரடியார் முறை அடியோடு ஒழிக்கப்பட்ட பிறகு, தமிழ்நாடு மட்டுமல்லாமல் கேரளா எனப் பிற மாநிலங்களுக்கும் சென்று சதிர் ஆட்டத்தை ஆடியிருக்கிறார் முத்துக்கண்ணம்மாள்.


சதிர் குறித்தும் பேசுகிறார். ''சதிர்னு சொன்னா நெறைய பேருக்குப் புரியறது இல்ல. ஆடறவங்களுக்கு மட்டுந்தே தெரியும். சதிர் ஆடறவங்க சொந்தமாவே பாடிக்கிட்டே, ஆடுவோம். ஆனா, பரதநாட்டியத்துல வேற ஒரு நட்டுவனார் பாட, அவங்க ஆடுவாங்க. சாமி உலா வருதுன்னா நாங்க வீதில நின்னு சதிரு ஆடுவோம். ஆனா, பரதநாட்டியத்த மேடைல மட்டும்தான் ஆடுவாக. வீதில ஆட மாட்டாக'' என்று விளக்குபவர், ''கோயில்ல இருந்த காலத்துல எனக்கு எந்த பாலியல் ரீதியான சங்கடமும் வந்ததில்ல. கவுரவமாத்தே இருந்துருக்கோம். யாரும் எதுவுஞ் சொன்னதுமில்ல. பேசுனதுமில்ல'' என்கிறார். 


தேவரடியராக பொட்டுக்கட்டி விடப்பட்டதால், நித்திய சுமங்கலிப் பட்டம் பெற்ற முத்துக்கண்ணம்மாள் தனது முதல் கணவரான முருகப் பெருமானையே வரித்துள்ளார். திருமணம் தனியாக நடைபெறாது என்பதால் பிடித்த இணையருடன் வாழ்வது தேவரடியார்களின் வழக்கம். 



''என்னயப் பிடிச்சு ஒருத்தர் கேட்டாரு. நானு சதிராட்டம் ஆடுவேன், சம்மதமான்னு கேட்டேன். சரின்னு சொல்லி, அவுகளும் எங்ககூடவே இருந்தாக. ஆட, பாட எல்லாத்துக்கும் போவோம். ஒன்னும் சொல்லமாட்டாக. ரெண்டு பையன். ஒரு பொண்ணு. ஒருத்தன் தவறிட்டான். இப்போ பொண்ணு கண்ணாமணி கூட இருக்கேன். மகளோட பேத்திகளுக்கு சதிரு சொல்லிக் குடுத்துட்டு இருக்கேன். படிக்கற நேரம் போக அதுகளும் ஆர்வமாக கத்துக்குதுக!'' என்கிறார் முத்துக்கண்ணம்மாள். 


23 ஆண்டுகளுக்கு முன்பு, முத்துக்கண்ணம்மாளின் கணவர் மரணமடைந்துவிட்டார். முதுமைக் காலத்திலும் ஆண்டுதோறும் பொள்ளாச்சி கோயில், பங்குனி மாதம் புதூர் கோயிலுக்குச் செல்வது முத்துக்கண்ணாம்மாளின் வழக்கமாக இருந்திருக்கிறது. விராலூர் பகுதியில் வைகாசி, தை மாதத்தில் நடக்கும் திருவிழாவில் சதிராட்டம் ஆடி வருகிறார்.


இந்தக் கலையை அடுத்தடுத்த சந்ததிகளுக்குக் கடத்த வேண்டும் என்பதே முத்துக்கண்ணம்மாளின் ஆவலாய் இருக்கிறது. ''சதிராட்டக் கலையை முடிஞ்ச வரை காப்பாத்தி, நல்ல பேரு வாங்கி வச்சிருக்கேன். பத்மஸ்ரீ பட்டமும் வாங்கறோம். அறிவிப்பு வந்ததும் விஜயபாஸ்கர் வந்து பார்த்தாரு. ஊர்க்காரங்க, கட்சிக்காரங்க வர்றாங்க. நிறைய பேரு வாழ்த்து சொல்றாங்க. 


எங்க பேத்திகளும் கத்துக்கிட்டு ஆடறோம்னு சொல்லி இருக்குதுக. புதுசா யாராவது கத்துக்க ஆசைப்பட்டாலும் சொல்லிக் குடுக்கத் தயாரா இருக்கேன். இந்தக் கலை என்னோட அழிஞ்சுடக் கூடாது'' என்கிறார் முத்துக்கண்ணம்மாள். 


அவரின் மகள் கண்ணாமணி பேசும்போது, ''அரசு முன்பு கொடுத்த 18 ஏக்கர் நிலமும் கையைவிட்டுப் போய்விட்டது. இப்போது அம்மாவுக்கு ரூ.3,000 உதவித்தொகை வழங்கப்படுகிறது. அது போதவில்லை. அம்மா சார்பாக எங்கள் குடும்பத்தில் யாராவது ஒருவருக்கு அரசு வேலை வேண்டும். இது மட்டுமே நாங்கள் வைக்கும் ஒரே கோரிக்கை'' என்று விடைகொடுக்கிறார்.