சேலம் மாவட்டம் மேட்டூர், பாலமலை, எடப்பாடி, காடையாம்பட்டி பகுதியில் உள்ள சேர்வராயன் மலைத்தொடரை ஒட்டிய பகுதியில், கடந்த 6 மாதத்திற்கும் மேலாக ஒரு சிறுத்தை நடமாட்டம் இருந்து வருகிறது. இந்த சிறுத்தை, கடந்த 3 மாதமாக மலைப்பகுதியை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடு, நாய், கோழிகளை வேட்டையாடி வந்தது.
குறிப்பாக, கடந்த 20 நாட்களாக மேட்டூர் பாலமலையை ஒட்டியிருக்கும் கொளத்தூர், குரும்பனூர், வெள்ளக்கரட்டூர், புதுவேலமங்கலம், கருங்கரடு உள்ளிட்ட பகுதியில் பதுங்கியிருந்து, இரவு நேரத்தில் கிராமங்களுக்குள் புகுந்து வேட்டையாடியது. மேட்டூர், கொளத்தூர், எடப்பாடி, காடையாம்பட்டி, டேனிஷ்பேட்டை ஆகிய பகுதியில் இதுவரை 15க்கும் மேற்பட்ட ஆடு, மாடுகளையும், 10 கோழிகளையும், 5 நாய்களையும் அந்த சிறுத்தை வேட்டையாடியுள்ளது.
இந்த பகுதிகளில், மாவட்ட வனத்துறை அதிகாரிகள் முகாமிட்டு, சிறுத்தையை கண்காணித்து பிடிக்க பல்வேறு நடவடிக்கையை எடுத்தனர். தற்போது, கொளத்தூர், வெள்ளக்கரட்டூர், கருங்கரடு பகுதியில் 4 கூண்டுகள் மற்றும் 15க்கும் மேற்பட்ட இடங்களில் சிசிடிவி கேமராக்களை காட்டிற்குள் வைத்து, கண்காணித்து வந்தனர். தர்மபுரி மற்றும் ஈரோடு, சத்தியமங்கலத்தில் இருந்து சிறப்பு வனக்குழுவினர் வந்து, சிறுத்தையை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், அந்த சிறுத்தை, கூண்டில் சிக்காமல் இருந்தது.
இந்நிலையில், மேட்டூர் பகுதியில் தற்போது மக்களை அச்சுறுத்தி வரும் சிறுத்தை உள்பட சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி வனப்பகுதியில் 10 சிறுத்தைகள் சுற்றி வருவதாகவும், இவை வனத்தை ஒட்டிய கிராமங்களுக்குள் புகுந்து ஆடு, மாடுகளை வேட்டையாடுவதாகவும் மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இந்த 10 சிறுத்தைகளும், கடந்த ஓராண்டிற்கு முன்பு, மேட்டூர் அடுத்துள்ள பாலமலையில் தமிழக-கர்நாடக வன எல்லைப்பகுதியில் கர்நாடக வனத்துறை அதிகாரிகளால் விடப்பட்டவை என்றும், மேட்டூர் பகுதி மலைக்கிராம மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். மேட்டூர் பாலமலை பகுதியில், பாலாறு வழியாக கர்நாடக வனத்திற்குள் வேட்டைக்காரர்கள் ஊடுருவி, சந்தன மரங்களை வெட்டுவது, யானையை வேட்டையாடி தந்தம் கடத்துவது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுகின்றனர். வேட்டைக்காரர்கள் ஊடுருவலை தடுக்க கர்நாடக வனத்துறையினர், மாநில எல்லையில் 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டு விட்டார்கள். அந்த குட்டிகள் பெரிதாகி, தற்போது தமிழக வனத்தில் உலா வருவதோடு, அவ்வப்போது ஊருக்குள் புகுந்து மக்களை அச்சுறுத்துகிறது என மக்கள் புகார் தெரிவித்துள்ளனர். இதற்கு காரணம் முன்பு, பாலமலை மற்றும் சேர்வராயன் மலைத்தொடரில் சிறுத்தைகள் இல்லை. இங்கு யானை, காட்டுமாடு, கரடி உள்ளிட்ட விலங்குகள் தான் அதிகளவு உள்ளன. தற்போது சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், ஒருவேளை மக்கள் கூறும் குற்றச்சாட்டுப்படி, கர்நாடக வனத்துறையினர், 10 சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து தமிழக வனப்பகுதியில் விட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது.
கர்நாடகா வனத்துறை மீதான இக்குற்றச்சாட்டு தொடர்பாக தமிழக வனத்துறை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். மேட்டூர் பகுதியில் தற்போது பதுங்கியிருக்கும் சிறுத்தையை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள மாவட்ட வன அலுவலர் காஸ்யப் ஷஷாங் ரவி தலைமையிலான அதிகாரிகள், இப்புகார் பற்றி தனியாக விசாரிக்கின்றனர். ஆனால், கர்நாடகா வனத்துறையினர் சிறுத்தை குட்டிகளை கொண்டு வந்து விட்டார்கள் என்பதற்கு எவ்வித ஆதாரங்களும் இல்லை. சிறுத்தையை பொறுத்தவரை அது ஒருநாளைக்கு 50 கி.மீ., தூரம் வரை பயணிக்கும். அதனால், அதுவாகவே பாலமலையின் மறுபக்கத்தில் கர்நாடகா பகுதியில் இருந்து வந்திருக்க வாய்ப்பிருக்கிறது. அதனால், மக்கள் தெரிவித்துள்ள புகார் குறித்து, தீவிர கள விசாரணையில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த 27 ஆம் தேதி காலை வெள்ளக்கரட்டூர் வனப்பகுதியில் உள்ள முனியப்பன் கோவில் அருகே சிறுத்தை மர்மமான முறையில் செத்து கிடந்தது. தகவல் அறிந்த வனத்துறையினர் சேர்த்து கிடந்த சிறுத்தையை பார்வையிட்டனர். இதைத் தொடர்ந்து சம்பவ இடத்திலேயே சிறுத்தைக்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு பின்னர் அதே இடத்தில் எரிக்கப்பட்டது.
சிறுத்தையை கல்லால் தாக்கி பின்னர் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டு இறந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக சிறுத்தையை சுட்டது யார் என வனத்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.