பி.பி.ஜி. சங்கர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான சாந்தகுமார் மரணத்தில் மர்மம் உள்ளதாக அவரது மனைவி தெரிவித்துள்ளார்.
என்ன நடந்தது?
ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வளர்புரம் பகுதியைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவரும் பாஜக நிர்வாகியுமான பி.பி.ஜி சங்கர் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் மரணமடைந்தார். இவர் பூந்தமல்லி அருகே நாட்டு வெடிகுண்டு வீசப்பட்டு சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டு கொல்லப்பட்டார்.
இந்த கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான ஸ்ரீபெரும்புதூர் அடுத்த கச்சிப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒன்றிய கவுன்சிலர் சாந்தா என்ற சாந்தகுமார் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருந்த நிலையில், கடந்த வாரம் நிபந்தனை ஜாமீனில் வெளியே வந்தார்.
சாந்தகுமார் புட்லூர் பகுதியில் உள்ள தனது வழக்கறிஞர் வீட்டில் இருந்து வந்த நிலையில், மற்றொரு வழக்கில் நேற்று காலை ( ஏப்ரல் 13 ) போலீசார் கைது செய்தனர். காவல்துறையினர் அழைத்துச் சென்ற நிலையில், அவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதாகவும், இதையடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதையடுத்து, திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில், சாந்தகுமாரின் மனைவி தெரிவிக்கையில், தனது கணவர் மரணத்தில் மர்மம் உள்ளதாக தெரிவித்துள்ளார். காவல்துறை விசாரணைக்கு அழைத்துச் சென்ற நிலையில், உயிரிழந்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.