இஸ்ரோவின் பிஎஸ்எல்வி சி56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 7 செயற்கைக்கோள்களில்,  3 செயற்கைக்கோள்களை அரியலூரைச் சேர்ந்த சண்முகசுந்தரம் வடிவமைத்துள்ளார்.


பிஎஸ்எல்வி சி56:


சிங்கப்பூரின் புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான டிஎஸ் – சார் உட்பட 7 செயற்கைக்கோள்களை சுமந்துக்கொண்டு பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் நேற்று காலை விண்ணில் செலுத்தப்பட்டது. இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்கு சொந்தமாக, ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்தில் இருந்து, இந்த ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட்டது.   பிஸ்எல்வி-சி56 இஸ்ரோவின் 90வது விண்வெளி திட்டமாகும். வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதை தொடர்ந்து, 535 கிமீ உயரத்தில் உள்ள பூமத்திய ரேகைக்கு அருகில் உள்ள சுற்றுப்பாதையில் (NEO) 7  செயற்கைக்கோள்களும் நிலைநிறுத்தப்பட்டன. 


செயற்கைகோள்களின் விவரங்கள்:


டிஎஸ்-சார், வெலாக்ஸ்-ஏஎம், ஆர்கேட், ஸ்கூப்-2, நியூலயன், கலாசியா, ஆர்ப்-12 ஸ்டிரைடர் ஆகியவை தான், பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட சிங்கப்பூர்ன் 7 செயற்கைக்கோள்கள் ஆகும். அதில்,  ஆர்கேட், ஸ்கூப்-2, வெலாக்ஸ் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களை தமிழ்நாட்டின் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த சண்முகசுந்தரம் என்பவர் தான் வடிவமைத்துள்ளார்.


யார் இந்த சண்முக சுந்தரம்:


அரியலூர் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள அய்யப்ப நாயக்கன்பேட்டை கிராமத்தைச் சேர்ந்த செல்வதுரை-அறிவழகி தம்பதியின் மகன் தான் சண்முகசுந்தரம். தற்போது அவருக்கு 30 வயதாகிறது. பன்னிரெண்டாம் வகுப்பு வரை அங்குள்ள அரசுப் பள்ளியில் பயின்ற சண்முகசுந்தரம், இளநிலை பொறியியல் படிப்பை சென்னை ஹிந்துஸ்தான் பொறியியல் கல்லூரியில் நிறைவு செய்தார். அதைதொடர்ந்து தற்போது சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகத்தில் செயற்கைக்கோள்களின் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் ஆராய்ச்சியில் முனைவர் பட்டப் படிப்பை மேற்கொண்டு வருகிறார்.


செயற்கைக்கோள்கள் வடிவமைப்பு:


ஆராய்ச்சி படிப்பின்போதே, அதே பல்கலைக்கழகத்தில் சிறிய, பெரிய வகை செயற்கைக்கோள்களின் கட்டமைப்பு மற்றும் வடிவமைப்பு குழு தலைவராகவும் பணிபுரிந்து வருகிறார். இந்த நிலையில் தான், பி.எஸ்.எல்.வி-சி 56 ராக்கெட் மூலம் விண்ணில் செலுத்தப்பட்ட 7 செயற்கைக்கோள்களில் ஆர்கேட், ஸ்கூப்-2 மற்றும்  வெலாக்ஸ் ஆகிய மூன்று செயற்கைக்கோள்களுக்கும் வடிவமைப்பாளர், திட்ட மேலாளர் மற்றும் முதன்மை பொறியாளராகவும் சண்முகசுந்தரம் பணியாற்றியுள்ளார்.


”மாணவர்களுக்கு கற்பிப்பேன்”


தனது பணி அனுபவம் தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு சண்முகசுந்தரம் அளித்த பேட்டியில் “ஸ்கூப் என்பது சிறிய வகை செயற்கைக்கோள். இந்தச் செயற்கைக்கோள் தொலைதூர தகவல் தொடர்பு சம்பந்தமான ஆராய்ச்சிக்காக பயன்படுத்தப்படுகிறது. இரண்டாவதாக வெலாக்ஸ்-ஏஎம் என்ற செயற்கைக்கோள் விண்வெளியில் பயன்படுத்தப்படும் சில பொருள்களை பற்றி ஆராய்வதற்காக உருவாக்கப்பட்டுள்ளது. 


இன்னொரு சிறிய வகை செயற்கைக்கோளான ஆர்கேட் செயற்கைக்கோள், மிகக் குறைந்த உயரத்தில் பயணித்து வளிமண்டலத்தின் மேலடுக்கை ஆய்வு செய்யவும், பூமத்திய ரேகை பகுதியின் இயக்கவியலை புரிந்து கொள்ள ஏதுவாக புதிய தகவல்களை வழங்கும் வகையிலும் உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வகை ஆய்வு இதுவே முதல்முறை. எனது ஆராய்ச்சியை முழுமையாக முடித்த பிறகு தமிழகத்திலுள்ள பள்ளி, கல்லூரி மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில் பல்கலைக்கழகங்கள் வாயிலாக கற்பிக்க முயற்சிகளை மேற்கொள்வேன்”  என சண்முகசுந்தரம்  தெரிவித்துள்ளார்.