திருச்சியில் ரயில் தண்டவாளங்கள் பராமரிப்பு பணி காரணமாக தென் மாவட்டங்களில் இருந்து சென்னை வரும் ரயில்கள் அனைத்தும் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன.


ரயில் சேவை பாதிப்பு:


திருச்சி ரயில்வே கோட்டத்தில் நடைபெற்று வரும் பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில்கள் தாமதமாக இயக்கப்பட்டு வருகின்றன. இதனால், பாண்டியன், நெல்லை, பொதிகை உள்ளிட்ட விரைவு ரயில்கள் 5 மணி நேரம் தாமதமாக இயக்கப்படுகின்றன. சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும், தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கும் இயக்கப்படும் ரயில்கள் தாமதமாகி உள்ளன.  திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்குள் தண்டவாள பராமரிப்பு காரணமாக ஒவ்வொரு ரயிலாக அனுமதிக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இரு மார்க்கத்திலும் ரயில் சேவை தாமதமாகி உள்ள காரணத்தால் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். பணிக்கு செல்வது, அவசர வேலை காரணமாக பயணம் மேற்கொண்ட பலரும், குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடத்திற்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர்.  பராமரிப்பு பணி தொடர்பாக பயணிகளுக்கு ஏற்கனவே உரிய தகவல் எதுவும் கொடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது. 


8 ரயில்கள் முழுமையாக ரத்து:


பராமரிப்பு பணிகள் காரணமாக திருச்சி வழியாக செல்லும் 8 ரயில் சேவைகள் முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, திருச்சியில் இருந்து இன்று காலை புதுக்கோட்டை செல்லவிருந்த முன்பதிவில்லா விரைவு ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோன்று, திருச்சி - தஞ்சாவூர், திருச்சி - மயிலாடுதுறை, மயிலாடுதுற - விழுப்புரம் மற்றும் திருச்சி - கரூர் ஆகிய 8 முன்பதிவில்லாத விரைவு ரயில் சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே, திருச்சி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் ரயில் திருச்சியில் இருந்து 7.20 மணிக்கு பதிலாக 09.20க்கு புறப்படும் எனவும்,  சோழன் எக்ஸ்பிரஸ் ரயில் சென்னையில் இருந்து காலை 7.15 மணிக்கு பதிலாக 9.15 க்கு புறப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


சீரமைப்பு பணிகள்:


தென்னக ரயில்வேயில் திருச்சி கோட்டத்துக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தண்டவாளம் பராமரிப்பு மற்றும் மேம்பாட்டு பணிகள் நடைபெற்று வருகிறது. குட்ஷெட் பாலப் பகுதியில் உள்ள ரயில்வே வழித்தடத்தில் ரயில்வே ஊழியர்கள் பழைய தண்டவாள பாதையை சீரமைத்து வருகின்றனர்.  இந்த ரயில்வே வழித்தடத்தை சீரமைக்க நவீன இயந்திரங்களை கொண்டு ரயில்வே ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். இதனால் ரயில் சேவையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.  அதன்படி, திருச்சியில் இருந்து காரைக்காலுக்கு செல்லும் முன்பதிவில்லாத விரைவு ரயில் இன்று வரை தஞ்சை - காரைக்கால் இடையே தற்காலிகமாக ரத்து செய்யப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த 10 நாட்களாக நடைபெற்று வரும், இந்த தண்டவாள சீரமைப்பு பணிகள் இன்றுடன் முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.