SETC: நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களில் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தனி அறையில் உணவு வழங்கக்கூடாது என தமிழ்நாடு விரைவு போக்குவரத்து கழகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
பொதுமக்களிடம் இருந்து வந்த புகாரினை அடுத்து அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாகவே அரசு விரைவுப் பேருந்தில் நெடும் பயணம் மேற்கொள்ளும் போது நெடுஞ்சாலையில் நிறுத்தப்படும் ஓட்டல்களில் பேருந்தின் ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு தனி அறையில் உணவு வழங்கப்படும். ஆனால் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகளுக்கு வழக்கமான இடங்களில் உணவு வழங்கப்படும். நெடுஞ்சாலை ஓட்டல்களில் உணவு தரமற்றதாகவும், விலை அதிகமாகவும் இருக்கின்றது என ஏற்கனவே புகார்கள் எழுந்தது. மேலும், ஓட்டுநர் மற்றும் நடத்துனருக்கு மட்டும் தனி அறையில் சிறப்பு கவனிப்பு கொடுக்கப்படுவதாகவும் கூறப்பட்டது. இந்நிலையில் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளது.
இதற்கு முன்னர், நெடுஞ்சாலையில் உள்ள ஓட்டல்களில் அரசுப் பேருந்துகள் நிறுத்தப்படுகின்றன. அங்கு விநியோகிக்கப்படும் உணவு தரமானதாக இல்லை என்று ஏற்கனவே புகார்கள் எழுந்தது. இந்த புகார்களுக்கு தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், ''டெண்டர் விடப்பட்டு தான் நெடுஞ்சாலைகளில் ஓட்டல்கள் நடத்த அனுமதிக்கப்படுகின்றன. அரசிடம் டெண்டர் எடுத்த ஓட்டல்களில் தான் பேருந்துகள் நிறுத்தப்படும். பணம் கட்டும் ஓட்டலில்தான் முதலில் நிறுத்த வேண்டும். வேறு இடத்தில் நிறுத்த கூடாது. அவர்கள் அரசாங்கத்திற்கு பணம் கட்டுகிறார்கள் என கூறியிருந்தார்.
மேலும், ”ஓட்டல்களுக்கு அரசு தரப்பில் இருந்து கொடுக்கப்பட்டுள்ள வரையறை என்னவென்றால், உணவு தரமாக இருக்க வேண்டும், அதேபோல் உணவின் அளவும் சரியாக இருக்க வேண்டும். அதேபோல் கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் இருந்ததை விடவும் விலையும் குறைவாக இருக்க வேண்டும் என்பதுதான். அரசின் வரையறைப்படி ஓட்டல்கள் செயல்படாத பட்சத்தில் இதுகுறித்து புகார் இருந்தால், பொதுமக்கள் அதனை தெரிவித்தால் உடனே நடவடிக்கை எடுக்க அரசு தரப்பில் தயாராக இருக்கிறோம். அதில் எந்தவிதமான ஆட்சேபனையும் இல்லை” என அமைச்சர் தெரிவித்திருந்தார்.
மேலும், ”இந்த உணவகங்களில் வழங்கப்படும் உணவின் தரம் குறித்து ஆராய உணவுப் பாதுகாப்புத்துறை என்ற துறை உள்ளது. புகார்கள் அளிக்கபடும் ஓட்டல்களில் உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அந்த ஓட்டலுக்குச் சென்று உணவுத் தரம் குறித்து ஆய்வு செய்வார்கள். குறிப்பிட்ட நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்கள் மீதுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இல்லை. தமிழ்நாடு முழுவதும் உள்ள சாலைகளான பெங்களூரு, மதுரை, சென்னை, தஞ்சாவூர் உள்ளிட்ட மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள ஓட்டல்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது” என அவர் கூறினார்.
மேலும், “பேருந்துகளை எந்தெந்த ஓட்டல்களில் நிறுத்தவேண்டும் என அதிகாரிகள் ஏற்கனவே போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கு தெரிவித்துள்ளனர். அதேநேரம் டெண்டர் எடுத்து விட்டார்கள் என்பதற்காக மோசமான உணவு அளிப்பதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. உணவின் தரம் குறைந்தால் உடனே அந்த ஓட்டல்களின் டெண்டர் ரத்து செய்யப்படும். ஏதாவது புகார் இருந்தால் அரசிடம் தெரிவியுங்கள். நிச்சயம் தரமற்ற உணவு வழங்கும் ஓட்டல்களுக்கு எதிரான நடவடிக்கை மேற்கொள்கிறோம்'' என அமைச்சர் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.