செந்தில் பாலாஜி வழக்கில் தினமும் ஆதார அழிப்பு நடப்பதாக உச்சநீதிமன்றத்தில் பகிரங்கமாக அமலாக்கத்துறை குற்றம்சாட்டியுள்ளது.


கடுமையான குற்றச்சாட்டு வைத்த அமலாக்கத்துறை


அரசு போக்குவரத்துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி மோசடி செய்த ஊழல் குற்றச்சாட்டில் கைதாகி இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறார். அவரது இதயத்தில் இருந்த அடைப்புக்காக பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.


மருத்துவமனையில் செந்தில் பாலாஜி சிகிச்சை எடுத்து வரும் நிலையில் அவரின் வழக்கு மீதான விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த மாதம் அமலாக்கத்துறை கைது செய்ய முயன்ற போது நெஞ்சு வலியால் துடித்த செந்தில் பாலாஜி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கிருந்து அவர் காவிரி மருத்துவமனைக்கு  மாற்றப்பட்டார். இந்த சூழலில் செந்தில் பாலாஜி தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டதை எதிர்த்தும், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டதை கண்டித்தும் அவரது மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு எதிராகவும் உச்சநீதிமன்றத்தில் அமலாக்கத்துறை மேல்முறையீடு செய்தது. அதன் மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நீதிபதி சூரிய காந்த் அமர்வில் தொடங்கியது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில், செந்தில் பாலாஜிக்கு எதிராக கடுமையான குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டன. 


தினமும் ஆதார அழிப்பு நடக்கிறது


செந்தில் பாலாஜி மருத்துவமனையில் இருப்பதாலும், அவர் மீதான வழக்குகள் நிலுவையில் இருப்பதாலும் தங்களின் கடமையை செய்யமுடியாத சூழலில் இருப்பதாக அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது. செந்தில் பாலாஜி செல்வாக்குமிக்க நபராக இருப்பதால் விசாரணையை தாமதப்படுத்தினால், வழக்கின் தன்மை நீர்த்து போகும் என்ற அமலாக்கத்துறை, செந்தில் பாலாஜி வழக்கில்  தினமும் ஆதார அழிப்பு நடப்பதாக பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளது. காலம் தாழ்த்தும் ஒவ்வொரு மணித்துளியும் வழக்கையின் தன்மையை வீணாக்கி விடும் என்றும் கூறியுள்ளது. 


ஒருவாரத்தில் 3வது நீதிபதியை அமைக்க வேண்டும்


மேலும் செந்தில் பாலாஜி ஏற்கெனவே நீதிமன்ற காவலில் இருப்பதால் அவர் மீது ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்வதற்கு சட்டத்தில் இடம் இல்லை என சுட்டிக்காட்டியதுடன், செந்தில் பாலாஜி மனைவி தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவுக்கு நீதிமன்றம் தான் தீர்வு காண வேண்டும் என முறையிடப்பட்டுள்ளது. அதேநேரம், செந்தில்  பாலாஜி தரப்பில் முன் வைக்கப்பட்ட வாதத்தில், சென்னை உயர்நீதிமன்றதில் இரு நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டியதுடன், 3வது நீதிபதியின் தீர்ப்புக்கு பிறகு அமலாக்கத்துறையின் மேல்முறையீட்டை விசாரிக்கலாம் என்ற வாதத்தை முன்வைத்தனர். 


இருதரப்பு வாதத்தையும் கேட்ட பிறகு, ஒரு வார காலத்திற்குள் 3 நீதிபதிகள் கொண்ட அமர்வை அமைக்க சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. இதுமட்டுமில்லாமல், வழக்கை மெரிட் அடிப்படையில் விரைந்து விசாரித்து முடிக்கவும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. உச்சநீதிமன்றத்தின் இந்த அறிவுறுத்தலால் செந்தில் பாலாஜி வழக்கில் விரைவில் 3வது நீதிபதியின் தீர்ப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.