ரேஷன் கார்டு e-KYC என்பது, ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள், தங்களுடைய ஆதார் அட்டையைப் பயன்படுத்தி தங்கள் அடையாளத்தை சரிபார்க்கும் முறையாகும். இது ரேஷன் கார்டு மூலம் வழங்கப்படும் சலுகைகளைப் பெறுவதற்கு முக்கியமானது. சரிபார்க்கப்படாத ரேஷன் கார்டுகள் ரத்து செய்யப்படலாம், அதனால் e-KYC-ஐ உடனடியாக செய்து முடிப்பது அவசியம்.
ரேஷன் கார்டு வைத்திருக்கும் அனைவரும் e-KYC சரிபார்க்கப்பட வேண்டும்
தமிழகத்தில் உள்ள 2.26 கோடி ரேஷன் கார்டுதாரர்களின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தும் பணியின் ஒரு பகுதியாக, முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டுகளில் உள்ள உறுப்பினர்களின் விரல் ரேகையை பதிவு செய்வதற்கான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், வெளிநாடுகளுக்கு நிரந்தரமாகச் சென்றவர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் பெயர்கள் பல குடும்ப அட்டைகளில் இருந்து இன்னும் நீக்கப்படாமல் இருப்பது மத்திய அரசின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால், அவர்களுக்குரிய உணவுப் பொருட்கள் தொடர்ந்து ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.
இந்த முறைகேடுகளைத் தடுக்கவும், பயனாளிகளின் உண்மைத் தன்மையை உறுதிப்படுத்தவும், முன்னுரிமை மற்றும் அந்தியோதயா கார்டில் உள்ள ஒவ்வொரு உறுப்பினரின் கைரேகையையும் 'ஆதார்' சரிபார்ப்பு மூலம் உறுதி செய்யுமாறு மத்திய அரசு தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இதன்படி, தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் விற்பனை முனையக் கருவிகள் (பாயின்ட் ஆஃப் சேல் - POS) மூலம் கார்டுதாரர்களின் விரல் ரேகை பதிவு செய்யப்பட்டு, ஆதார் சரிபார்ப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணி கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.
முன்னதாக , இந்த பணியை கடந்த மார்ச் மாதம் 31-ம் தேதிக்குள் முடிக்க கெடு விதிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது வரை பல லட்சத்துக்கும் மேற்பட்ட பயனாளர்கள் தங்களது விரல் ரேகையை பதிவு செய்யாமல் உள்ளனர். இந்நிலையில் ரேஷன் கார்டு eKYC-க்கான காலக்கெடு ஜூன் 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
எனவே, இன்னும் விரல் ரேகை பதிவு செய்யாத பயனாளர்கள் உடனடியாக தங்கள் அருகிலுள்ள ரேஷன் கடைகளுக்குச் சென்று கைரேகையை பதிவு செய்து, அரசின் இந்த திட்டத்தின் பலனை தொடர்ந்து பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. குறித்த தேதிக்குள் விரல் ரேகை பதிவு செய்யாதவர்களின் பெயர் ரேஷன் கார்டுகளில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
AAY / PHH-குடும்ப அட்டையில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தாங்கள் வசிக்கும் ஊரில் உள்ள நியாய விலைக் கடையில் அல்லது வெளிமாவட்டம் / வெளிமாநிலத்தில் வசிப்பின் அருகில் உள்ள நியாய விலைக் கடையில் விரல்ரேகை / கண்கருவிழி சரிபார்ப்பு மூலம் e-KYC மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
எனவே, இந்த வாய்ப்பைத் தவறவிடாமல், காலக்கெடுவுக்குள் உங்கள் ரேஷன் கார்டு eKYC-ஐ முடித்து, உங்கள் ரேஷன் பயன்களைத் தொடர்ந்து பெறுவதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
e-KYC செய்வது எப்படி?
- e-KYC-ஐ ஆன்லைன் மூலமாகவோ அல்லது ரேஷன் கடைகளுக்கு நேரடியாகச் சென்றோ செய்து கொள்ளலாம்.
- ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஒருமுறை கடவுச்சொல்லை (OTP) பயன்படுத்தி சரிபார்க்கலாம்.
- விரல் ரேகை அல்லது கருவிழி ஸ்கேன் மூலமாகவும் e-KYC செய்யலாம்.
- NPHH (Non-Priority Household) அட்டைகளுக்கு e-KYC தேவையில்லை