அமைச்சர் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 


தமிழ்நாடு அரசின் மின்சாரத்துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களில் கடந்த ஜூன் 13 ஆம் தேதி சுமார் 17 மணி நேரம் அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஜூன் 14 ஆம் தேதி அதிகாலை அவர் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜூன் 28 ஆம் தேதி வரை நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து செந்தில் பாலாஜி வகிந்து வந்த மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறைகள் மற்ற அமைச்சர்களுக்கு பிரித்துக் கொடுக்கப்பட்டது. 


அதன்படி, நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசுவிடம் மின்சாரத் துறையும், வீட்டுவசதி மற்றும் நகர்ப்புர வளர்ச்சித்துறை அமைச்சர் முத்துசாமியிடம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையும் பிரித்து வழங்கப்பட்டது. அதேசமயம் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தெரிவிக்கப்பட்டது. இதுதொடர்பான பரிந்துரை ஆளுநர் ஆர்.என்.ரவியின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டது. 


ஆனால் குற்ற வழக்குகளை எதிர்கொள்வதால் செந்தில் பாலாஜி அமைச்சராக தொடரக்கூடாது என ஆளுநர் ஆர்.என்.ரவி தெரிவித்தார். அதேசமயம் மற்ற அமைச்சர்களுக்கு துறைகள் பிரித்து வழங்கப்பட்டதற்கு ஒப்புதல் அளித்தார். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்வார் என தமிழ்நாடு அரசு அரசாணை பிறப்பித்துள்ளது.