அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், அவருக்கு புழல் சிறை கைதிக்கான பதிவேடு எண் கொடுக்கப்பட்டுள்ளது. 


மின்சாரம் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சராக உள்ள செந்தில் பாலாஜி வீடு உள்ளிட்ட தொடர்புடைய இடங்களில் நேற்று முன்தினம் அமலாக்கத்துறையினர் சோதனை செய்தனர். அதேபோல் அவரின் தலைமைச்செயலகத்தில் உள்ள அறையில் சோதனை நடைபெற்றது. இந்த சோதனையானது சுமார் 17 மணி நேரம் நீடித்த நிலையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் செந்தில் பாலாஜியை கைது செய்து அமலாக்கத்துறையினர் அழைத்து சென்றனர். 


அப்போது அவர் அதிகாரிகளிடம் நெஞ்சுவலிப்பதாக கூறியுள்ளார். உடனடியாக செந்தில் பாலாஜி ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செந்தில் பாலாஜியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கூட்டணி கட்சி தலைவர்கள் என அனைவரும் சென்று பார்த்து நலம் விசாரித்தனர். 


அதேசமயம் செந்தில் பாலாஜிக்கு 3 இடங்களில் அடைப்புகள் இருப்பதால் உடனடியாக இதய அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். இதனிடையே மருத்துவமனைக்கு வந்த சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி, இருதரப்பு வழக்கறிஞர்களின் வாதங்களைக் கேட்டு விட்டு, ஜூன் 28 ஆம் தேதி வரை செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டார். 


இதனை ரத்து செய்யக்கோரி அளிக்கப்பட்ட மனுவை இன்று நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. நீதிமன்ற காவல் வழங்கப்பட்டுள்ள நிலையில் நேற்று இரவு 10 மணி முதல் 10க்கும் மேற்பட்ட காவல்துறையினர் செந்தில் பாலாஜி சிகிச்சை பெற்றுவரும் வார்டு முன்பு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதிகளுக்கான அனைத்து விதிமுறைகளும் செந்தில் பாலாஜிக்கு பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


அவரை சந்திக்க அனுமதி பெற வேண்டும் என கூறப்பட்டுள்ளது. இன்றைய தினம் செந்தில் பாலாஜியை சந்திக்க சென்ற அமைச்சர் சேகர் பாபுவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், குடும்பத்தினர் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். இப்படியான நிலையில் புழல் சிறையில் இருந்து விசாரணை கைதிக்கான பதிவேடு எண் வழங்கப்பட்டுள்ளது.  அவருக்கு 1440 என்ற எண் கொடுக்கப்பட்டுள்ளது. 


இதற்கிடையில் அமைச்சர் செந்தில் பாலாஜி சுயநினைவுடன் உள்ளார். மருத்துவர்கள் பரிந்துரைக்கும் உணவுகளும், மருத்துவர்கள் வழங்கும் மருந்து மற்றும் மாத்திரைகளும் செந்தில் பாலாஜி எடுத்துக்கொண்டார் என  ஓமந்தூரார் மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 


மேலும் படிக்க: Senthil Balaji: செந்தில் பாலாஜிக்கு நீதிமன்ற காவல் உறுதி .. நிராகரிக்கக்கோரிய மனுவை தள்ளுபடி செய்து நீதிமன்றம் உத்தரவு