அமைச்சர் செந்தில் பாலாஜியை காவேரி மருத்துவமனைக்கு மாற்ற சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கியது. காவேரி மருத்துவமனைக்கு சென்று அமலாக்கத்துறை குழுவும் ஆராயலாம் எனத் தெரிவித்துள்ளது. 


நீதிபதிகள் உத்தரவு:


உயர்நீதிமன்ற உத்தரவையடுத்து ஓமந்தூரார் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக செந்தில்பாலாஜி மாற்றப்படுகிறார். செந்தில் பாலாஜியின் மனைவி தொடர்ந்த ஆட்கொணர்வு மனு மீதான விசாரணையின் போது, நீதிபதிகள் நிஷா பானு, பரத சக்ரவர்த்தி உத்தரவு பிறப்பித்துள்ளனர். அரசு மருத்துவமனையில் கொடுத்த அறிக்கையை நம்ப முடியாது என்பதையும், காவலில் இருப்பவர்கள் அரசு மருத்துவமனையில் தான் சிகிச்சை பெற வேண்டும் என்ற அமலாக்கத்துறையின் கோரிக்கையையும் நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தொடர்ந்து, வழக்கு தொடர்பாக விளக்கம் அளிக்குமாறு உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை ஜுன் 22ம் தேதிக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதேநேரம், வரும் 28ம் தேதி வரை அமைச்சர் செந்தில் பாலாஜி நீதிமன்ற காவலில் நீடிப்பார், அவரது உடல்நிலையை அமலாக்கத்துறை ஏற்பாடு செய்யும் மருத்துவக் குழுவும் ஆராயலாம் என நீதிபதிகள் தெரிவித்தனர்.


ஜாமின் மனு விசாரணை:


இதனிடையே, அமைச்சர் செந்தில் பாலாஜி தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட ஜாமின் மனுவையும், அவரை விசாரணை காவலில் எடுக்க அமலாக்கத்துறை சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவும், ஆட்கொணர்வு மனு மீதான உயர்நீதிமன்ற உத்தரவிற்கு பிறகு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என, சென்னை மாவட்ட முதன்மை நீதிமன்ற நீதிபதி அல்லி தெரிவித்து இருந்தார். இப்போது, உயர்நீதிமன்ற உத்தரவு வெளியானதை அடுத்து, விரைவில் கீழமை நீதிமன்றத்தில் விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் கிடைக்குமா அல்லது அவரை விசாரணை காவலில் எடுக்க அமலாக்கத்துறைக்கு அனுமதி கிடைக்குமா என்பதை பொருத்து இருந்து தான் பார்க்க வேண்டும். அதேநேரம், உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை மேற்கோள் காட்டி, அமலாக்கத்துறையின் மனுவை தள்ளுபடி செய்வதோடு, அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இடைக்கால ஜாமின் கோரும் மனுவை நிராகரிக்கவும் வாய்ப்பு உள்ளது. 


அனுமதியுடன் சந்திக்கலாம்..


அமைச்சர் செந்தில் பாலாஜியை அவரது குடும்பத்தினர் தவிர வேறு யாரும் உரிய அனுமதியின்றி சந்திக்கக் கூடாது. அமைச்சர்கள் உள்ளிட்ட அனைவருமே உரிய அனுமதி பெற்று தான் சந்திக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


அமைச்சருக்கு அறுவை சிகிச்சை:


இதனிடையே, உயர்நீதிமன்ற உத்தரவை தொடர்ந்து அமைச்சர் செந்தில் பாலாஜி, அறுவை சிகிச்சைக்காக காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட உள்ளார். இதற்கான நடவடிக்கைகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கடந்த அதிமுக ஆட்சியின் போது போக்குவரத்து அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி, அரசு வேலை வாங்கித்தருவதாக கூறி பணம் பெற்ற வழக்கில் இரண்டு தினங்களுக்கு முன்பாக அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.