தமிழ்நாடு முதலமைச்சரின் செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாமல் அமலாக்கத்துறை ரெய்டை ஏவிவிட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார்.


பதிலடி கொடுத்த செந்தில் பாலாஜி:


டாஸ்மாக்கில் ரூ. 1000 கோடிக்கு மேல் முறைகேடு நடந்ததாக அமலாக்கத்துறை பரபரப்பு குற்றச்சாட்டு சுமத்தியது. மதுபான கொள்முதல் மூலம் தனியார் நிறுவனங்கள் முறைகேட்டில் ஈடுபட்டதாகவும் அமலாக்கத்துறை இயக்குநரகம் தெரிவித்தது.


இதுகுறித்து அமைச்சர் செந்தில் பாலாஜி கூறுகையில், "தொகுதி மறுசீரமைப்பு என்பதை மறைக்க தமிழக முதலமைச்சரின் செயல்பாடுகளை பொறுத்து கொள்ள முடியாத மத்திய அரசு அமலாக்க துறையை ஏவி ரெய்டு நடத்தி உள்ளனர். எந்த முதல் தகவல் அறிக்கை, எந்த விவரங்கள் அடங்கிய அறிக்கை என்ற விவரம் இல்லை.


எந்த முறைகேடும் மாற்றும் கருத்தும் இல்லாத அளவில் வெளிப்படையாக நிர்வாகம் நடைபெற்று உள்ளது. பார் டெண்டர் கூட ஆன்லைன் டென்டராக மாற்றபட்டு உள்ளது. 1000 கோடி முறைகேடு என்பது முகாந்திரம் இல்லாத பொத்தாம் பொதுவானது.


"மக்களிடையே விஷம பிரச்சாரம்"


இதில் உள்ள உள்நோக்கம் மக்களுக்கு புரியும். கடந்த காலங்களில் அவர்கள் ஆட்சியில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் மெருக்கேற்றபட்டு, கொள்முதலுக்கான உத்தரவுகள் வழங்கபட்டு வருகிறது. இதில், யாருக்கும் சலுகைகள் வழங்கபடுவதில்லை.


அமலாக்க துறை நடவடிக்கைகளை சட்ட ரீதியாக தமிழக அரசு எதிர் கொள்ளும். குறிப்பாக, நேற்று மாலை அமலாக்க துறை இதுதொடர்பாக அறிக்கை வெளியிட வேண்டிய அவசியம் என்ன? மக்களிடையே விஷம பிரச்சாரத்தை மேற்கொள்ள அவசர அவசரமாக இதை வெளியிட்டு உள்ளனர்.


மும்மொழி கொள்கை, தொகுதி மறுசீரமைப்பு விவகாரத்தில் மக்கள் மத்தியில் ஆதரவு பெற்று வரும் நிலையில், அவற்றை திசை திருப்பவும் அதை பொறுத்த கொள்ள முடியாமல் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர்.


அரசின் மீது அவதூறு ஏற்படுத்த வேண்டும் என்கிற குறுகிய மனப்பான்மையில் செயல்பட்டு வருகின்றனர். புதிய ஆலைகள் திறக்கவும் புதிய கடைக்கள் திறக்கவும் எந்த கொள்கை முடிவும் அரசு எடுக்கவில்லை 500 கடைகளை தான் மூடி உள்ளோம்.


கடைநிலை ஊழியர் செய்யும் தவறுகளுக்கு நிர்வாகம் பொறுப்பாகுமா? இதை எப்படி ஏற்று கொள்ள முடியும்?சட்ட ரீதியாக இவற்றை எதிர்கொள்ள தயாராக இருக்கிறோம். சரி தவறு என்பதை நீதிமன்றம் முடிவு செய்யும்" என்றார்.