Tamil Nadu Budget 2025: தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ள மாநிலத்தின் வரவு மற்றும் செலவு விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


தமிழ்நாடு பட்ஜெட் 2025:


தமிழ்நாடு அரசின் 2025-26 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். சுமார் 2 மணி நேரம் 40 நிமிடங்கள் உரையாற்றிய அமைச்சர் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், தொழில் திட்டங்கள், நலத்திட்டங்களை அறிவித்தார். இறுதியில் அடுத்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசின் மொத்த வருவாய், செலவு, கடன் நிலுவை, வரி வருவாய் மற்றும் வரி பற்றாக்குறை தொடர்பான கணிப்புகளையும் அமைச்சர் தெரிவித்தார். அவற்றின் விவரங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.


தமிழ்நாடு அரசின் வரவு:


2025-26 நிதியாண்டில் மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ரூ.2,20,895 கோடி இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதில் வணிக வரிகளின் கீழ்  ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 930 கோடி ரூபாயும், முத்திரைத்தாள் மற்றும் பத்திரப்பதிவு கட்டணங்களின் கீழ்  26 ஆயிரத்து 109 கோடி ரூபாயும், வாகனங்களின் மீதான  வரிகளின் கீழ் 13 ஆயிரத்து 441 கோடி ரூபாயும், மாநில ஆயத்தீர்வையின் கீழ் 12 ஆயிரத்து 944 கோடி ரூபாயும் வரி வருவாய் அடங்கும் என தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரி அல்லாத வருவாயாக 28 ஆயிரத்து 819 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக அடுத்த நிதியாண்டில் மாநிலத்தின் மொத்த வருவாய் 75.31 சதவிகிதம் வளர்ச்சி கண்டு, 2 லட்சத்து 49 ஆயிரத்து 713 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மத்திய அரசின் உதவி மானியங்கள் 23 ஆயிரத்து 834 கோடி ரூபாயாகவும், மத்திய அரசு வரி பங்கீடு 58 ஆயிரத்து 22 கோடியாகவும் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, 12.81 சதவிகித ஏற்றத்துடன் மொத்த வருவாய் 3 லட்சத்து 31 ஆயிரத்து 569 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. 


தமிழ்நாடு அரசின் செலவு:


அடுத்த நிதியாண்டில் மொத்த வருவாய் செலவினங்கள் 3 லட்சத்து 73 ஆயிரத்து 204 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. இது நடப்பு நிதியாண்டிற்கானதை காட்டிலும் 9.65 சதவிகிதம் அதிகமாகும். மூலதன பணிகளுக்கான செலவினங்கள் 57 ஆயிரத்து 231 கோடி ஆகும். நிகரக்கடன் உட்பட மூலதன செலவினங்களுக்கான மொத்த நிதி 65 ஆயிரத்து 328 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


வருவாய் பற்றாக்குறை


நடப்பு நிதியாண்டில் திருத்த மதிப்பீடுகளின்படி, மொத்த வருவாய் பற்றாக்குறை 46 ஆயிரத்து 467 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது. அடுத்த நிதியாண்டில் இந்த வருவாய் பற்றாக்குறை 41 ஆயிரத்து 635 கோடியாக குறைந்து இருக்கும் என பட்ஜெட்டில் மதிப்பிடப்பட்டுள்ளது. இதன் மூலம் 2015-16 ஆண்டுக்கு ஈடாகவும் வகையில், வருவாய் பறாக்குறையானது 1.17 சதவிகிதம் அளவிற்கு சரியும் என மதிப்பிடப்பட்டுள்ளது. 


கடந்த நிதியாண்டின் மொத்த நிதிப்பற்றாக்குறை திருத்தப்பட்ட மதிப்பீடுகளின்படி, ஒரு லட்சத்து  ஆயிரத்து 698 கோடியாக உள்ளது. 2025-26 நிதியாண்டில் இந்த நிதிப்பற்றாக்குறை ஒரு லட்சத்து  ஆறாயிரத்து 963 கோடியாக மதிப்பிடப்பட்டுள்ளது.


தமிழ்நாடு அரசின் கடன் விவரம்:


நிகரக் கடன்கள் குறைந்துள்ளபோதிலும், 2024-25 ஆம் ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் 26.41 சதவீதமாக மதிப்பிடப்பட்ட மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் ஒட்டுமொத்தக் கடன் விகிதமானது தற்போதைய மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பின் அடிப்படையில், 2024-25 ஆம் ஆண்டிற்கான திருத்த மதிப்பீடுகளில் சற்றே அதிகரித்து 26.43 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இது 2025-26 ஆம் ஆண்டிற்கான வரவு- செலவுத் திட்ட மதிப்பீட்டில் இவ்விகிதம் 26.07 சதவீதமாக மேலும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15வது நிதிக்குழு 2025-26 ஆம் ஆண்டிற்கு நிர்ணயித்துள்ள 28.70 சதவீதத்திற்குள்ளாகவே உள்ளது.