குளித்தலை அருகே மாயனூரில், மேகதாதுவின் காவிரி ஆற்றின் குறுக்கே கர்நாடக அரசு அணை கட்டுவதை தடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி  ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்ற விவசாயிகள் தடுத்து நிறுத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.


 





கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மாயனூர் ரயில் நிலையத்தில் கர்நாடக அரசு மேகதாதுவில் காவிரி ஆற்றின் குறுக்கே அணை கட்ட முயற்சிப்பதை தடுக்க வேண்டும் என்றும், தமிழகத்திற்கு தரவேண்டிய காவிரி நீரை திறந்து விட வேண்டும் என்றும் காவிரி நடுவர் மன்ற தீர்ப்பினை மதிக்காத கர்நாடக அரசின் மீது சட்டப்படி நீதிமன்றத்தை அணுகி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய அரசின் கவனத்தை இருக்கும் பொருட்டு விவசாய முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட முயன்றனர்.


 




மாயனூர் பேருந்து நிலையத்திலிருந்து சுமார 500 மீட்டர் தூரம் வரை கையில் கரும்பு ஏந்தி ஊர்வலம் ஆக வந்து அவர்களை ரயில் நிலையம் முன்பு நின்ற காவல்துறையினர் அவர்களை ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட அனுமதி இல்லை என்று கூறி தடுத்து நிறுத்தினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட அனுமதி அளிக்காதால் ரயில் நிலையம் முன்பு விவசாயிகள் கையில் கரும்பினை ஏந்தி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு ஒன்றிய அரசுக்கும், கர்நாடக அரசுக்கு எதிராகவும் கண்டன கோஷங்களை முழக்கமிட்டனர். சுமார் நூற்றுக்கு மேற்பட்ட விவசாயிகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணிக்காக அங்கு குவிக்கப்பட்டனர்.


 




ABP Nadu செய்திகளை டெலிகிராம் செயலி மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள https://t.me/abpnaduofficial என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.