தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு டிஜிபியாக பதவி வகித்தவர் சங்கர் ஜிவால். இவர் நேற்றுடன் பணி ஓய்வு பெற்றார். இதையடுத்து, பொறுப்பு டிஜிபியாக டிஜிபி அலுவலக நிர்வாக பிரிவு டிஜிபி-யாக இருந்த வெங்கட்ராமனை தமிழக அரசு நியமித்தது. 

பொறுப்பு டிஜிபி பதவியேற்பு:

புதியதாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்ட வெங்கட்ராமனிடம் நேற்று டிஜிபி அலுவலகத்தில் வைத்து ஓய்வு பெற்ற சங்கர்ஜிவால் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார். அவருக்கு காவல்துறை அதிகாரிகள் பூங்கொத்து அளித்து வாழ்த்து தெரிவித்தனர். 

புறக்கணித்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள்:

அவரது பதவியேற்பு விழாவில் டிஜிபி அந்தஸ்தில் உள்ள மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் 8  பேர் மற்றும் சென்னை காவல் ஆணையர் அருண் பங்கேற்கவில்லை. வெங்கட்ராமனுக்கு பொறுப்பு டிஜிபி வழங்கப்பட்டதால் ஏற்பட்ட அதிருப்தி காரணமாகவே அவர்கள் பங்கேற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. 

ஏனென்றால், சங்கர்ஜிவாலுக்கு பிறகு டிஜிபி-யாக பதவியேற்பார்கள் என்று ஒரு பட்டியல் கணிக்கப்பட்டிருந்தது. அந்த பட்டியலில் முதன்மையான இடத்தில் தற்போது தீயணைப்பு மற்றும் மீட்புபணிகள் துறை டிஜிபி-யாக பதவி வகிக்கும் சீமா அகர்வால் உள்ளார். அவருக்கு அடுத்தபடியாக ஆவின் விஜிலென்ஸ் முதன்மை அதிகாரி டிஜிபி ராஜீவ்குமார், போலீஸ் அகாடமி இயக்குநர் டிஜிபி சந்தீப்ராய் ரத்தோர் உள்ளனர். 

காரணம் என்ன?

இந்த 3 பேரில் ஒருவரையே தமிழக அரசு டிஜிபியாக நியமிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், திடீரென பொறுப்பு டிஜிபியாக வெங்கட்ராமன் நியமிக்கப்பட்டார். ஆனால், டிஜிபி-யை தேர்வு செய்யும் நடைமுறை முடியாத காரணத்தால் பொறுப்பு டிஜிபி-யை தமிழக அரசு நியமிக்கும் முடிவுக்கு வந்தது. அதில் இவர்கள் 3 பேரில் ஒருவர் நியமிக்கப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ஆனால், யாரும் எதிர்பாராத விதமாக வெங்கட்ராமன் ஐபிஎஸ் டிஜிபியாக நியமிக்கப்பட்டார். இதனால், டிஜிபி-யாவோம் என்ற கனவில் இருந்த மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது. புதியதாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் டிஜிபிக்காக பரிந்துரைக்கப்பட்ட பட்டியலில் உள்ள 11 பேரில் 9வது இடத்தில் இருப்பவர் என்பது குறிப்பிடத்தக்கது. அதுவே மற்ற மூத்த ஐபிஎஸ் அதிகாரிகளின் அதிருப்திக்கு முக்கிய காரணமாக கருதப்படுகிறது.

ஸ்டாலின் இல்லாத நேரத்தில் இப்படியா?

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொழில் முதலீடுகள் ஈர்ப்பதற்காக வெளிநாடு சென்றுள்ள நிலையில், பொறுப்பு டிஜிபி பதவியேற்பு விழாவை மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் புறக்கணித்து இருப்பது பெரும் பரபரப்பை உண்டாக்கியுள்ளது. காவல்துறையினர் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ள நிலையில், தற்போது பொறுப்பு டிஜிபி பதவியேற்பு விழாவில் மூத்த ஐபிஎஸ் அதிகாரிகள் பங்கேற்காதது பேசுபொருளாகியுள்ளது. 

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை திரும்பியதும் இதுதொடர்பாக அவர் ஆலோசிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், காவல்துறையின் உள்ளே நடக்கும் விவகாரங்கள் பொதுவெளியில் வராமல் இருக்கவும் மூத்த அதிகாரிகளை கண்டிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

யார் இந்த வெங்கட்ராமன்?

புதியதாக பொறுப்பு டிஜிபியாக நியமிக்கப்பட்டுள்ள வெங்கட்ராமன் 1994ம் ஆண்டு ஐபிஎஸ் அதிகாரியாக தேர்வானவர். சென்னை சிபிஐ-யில் எஸ்பியாக பணியாற்றிய அனுபவம் உள்ளவர். பின்னர் சென்னை சிபிஐ-யிலே 2008ம் ஆண்டு டிஐஜியாக பொறுப்பேற்றார். சிபிசிஐடிக்கும் டிஐஜியாக பதவி வகித்த வெங்கட்ராமன் 2012ல் ஐஜியாக பொறுப்பேற்றார்.

கடந்த 2019ம் ஆண்டு ஏடிஜிபியாக பதவி உயர்வு பெற்ற வெங்கட்ராமன், கடந்த 2024ம் ஆண்டு டிஜிபியாக பதவி உயர்வு பெற்றார். சட்டம் ஒழுங்கு கூடுதல் டிஜிபியாக பணியாற்றிய அனுபவமும் அவருக்கு உண்டு. தமிழ்நாட்டின் பல மாவட்டங்களில்  காவல்துறையின் முக்கிய பொறுப்புகளை வகித்துள்ளார்.