அதானியை தன்னுடைய குடும்பத்தை சேர்ந்த யாரும் சந்திக்கவில்லை என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியாக சொல்ல வேண்டும் என தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் வலியுறுத்தியுள்ளார். 


மேலும், தமிழகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் அதிகரித்து வருவதாகவும் அவர் குற்றச்சாட்டு சுமத்தியுள்ளார். 


மகாகவி பாரதியாரின் 143ஆவது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை காமராஜர் சாலையில் உள்ள அவரது திருவுருவ சிலை அருகில் வைக்கப்பட்டிருந்த படத்திற்கு தமிழக பாஜகவின் முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் தலைமையில் பாஜகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


வேதனையாக பேசிய தமிழிசை:


இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன், "பாரதியாரின் புகழை பாடுவதில் பாரதிய ஜனதா கட்சி பெருமை கொள்கிறது. ஏனென்றால், பெண்கள் முன்னேற்றத்திற்காக பாடுபட்டவர் அவர். ஆனால், துரதிஷ்டவசமாக பாரதி தமிழக அரசால் அந்த அளவிற்கு கொண்டாடப்படுவது இல்லை. 


பாரதியாருக்கு பெரிய விழா எடுக்க வேண்டும். பெண்களுக்காகவும் பெண் விடுதலைக்காகவும் பாரதியார் பாடி இருக்கிறார். ஆனால், பெண் விடுதலைக்காக பெரியாருக்கு அங்கீகாரம் கொடுக்கும் இந்த அரசு பாரதியாருக்கு அந்த அங்கீகாரத்தை கொடுப்பது இல்லை.  


தமிழக அரசு பெண்களுக்கு எதிரான அரசாக உள்ளது என்ற குற்றச்சாட்டை நான் முன் வைக்கிறேன். பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தமிழகத்தில் அதிகரித்துள்ளது. பெண் குழந்தைகள் மனநலம் பாதிக்கப்பட்டு இருந்தாலும் கூட அவர்கள் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். அந்த குற்றவாளிகளை கண்டுப்பிடிக்க முடியாத ஒரு சூழல் தமிழகத்தில் நிலவி வருகிறது" என்றார்.


"தம்பி உதயநிதி"


தொடர்ந்து பேசிய அவர், "மத்திய தணிக்கை குழு ஒரு அதிர்ச்சிகரமான தகவலை நமக்கு சொல்லி இருக்கிறார்கள். பட்ஜெட் ஒதுக்கீடு செய்யும் பொழுது பெண்களுக்கு என பிரத்தியேக ஒதுக்கீடுகள் இருக்க வேண்டும். அது தமிழகத்தில் பல துறைகளில் ஏற்படுத்தவே படவில்லை. 


இந்தியாவில் அதிகளவில் பெண்கள் கைத்தறி துறையில் வேலை செய்கிறார்கள். ஆனால், அவர்களுக்கு நீதி பகிர்வு கொடுக்கப்படவில்லை. பெண்களுக்கான நிதி ஒதுக்கீட்டில் இந்த அரசு முற்றிலுமாக தோல்வி அடைந்துள்ளது.


போக்குவரத்து துறை நஷ்டத்தில் இயங்குகிறது என கூறுவது அதிர்ச்சி அளிக்கிறது. பாரதிய ஜனதா கட்சியில் பெண்களுக்கென 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்படுகிறது. அதன் அடிப்படையில் நாங்கள் வேலை செய்து வருகிறோம்.


மற்ற கட்சியிலும் நிர்வாகத்தில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது எங்களது கோரிக்கை. அதானியை முதலமைச்சர் நான் சந்திக்கவில்லை என்று தான் கூறுகிறார். முதலமைச்சர் என் குடும்பத்தை சார்ந்த யாரும் அதானியை சந்திக்க வில்லை என்பதை உறுதியாக சொல்ல வேண்டும். 


தம்பி உதயநிதி அதானிக்கும் தமிழக அரசுக்கும் சம்பந்தமில்லை என்று சொல்கிறார். அதானிக்கும் தங்களுடைய குடும்பத்திற்கும் சம்பந்தமில்லை என்று அவர் சொல்ல வேண்டும்" என்றார்.