இன்று கோவை சென்ற தமிழக வெற்றிக் கழக தலைமை ஒருங்கிணைப்பாளர் செங்கோட்டையன், விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, விஜய்க்கு இருக்கும் சக்தியால், 2026-ல் அவர் வெற்றி பெற்று முதலமைச்சராவத உறுதி என அவர் தெரிவித்தார். அவர் எதைப் பற்றி பேசினார் என்பதை தற்போது பார்ப்போம்.

Continues below advertisement


“மக்கள் சக்தியால் விஜய் முதலமைச்சராவது உறுதி“


எத்தனை தடைகள் வந்தாலும், மக்கள் சக்தியால் அதை உடைத்து, வரும் 2026-ல் தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக அரியணையில் அமர்வார் என்று கூறினார். வெற்றி என்பது உறுதி செய்யப்பட்ட ஒன்று என்று கூறிய செங்கோட்டையன், மக்கள் சக்தியின் மூலம், தமிழகத்தில் ஒரு மாற்றத்தையும், ஒரு புதிய சமுதாயத்தையும் உருவாக்குவதற்கு, ஒரு நேர்மையான ஆட்சியை வழங்குவதற்கு, புனிதமான ஆட்சியை தமிழகத்தில் உருவாக்குவதற்கு விஜய் புறப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.


அந்த பயணத்தில், மக்கள் சக்தியோடு, 2026-ல் தமிழ்நாட்டின் முதலமைச்சராக அவர் அமர்வார் என்றும், மக்கள் சக்தியை வீழ்த்த எந்த சக்தியாலும் முடியாது எனவும் கூறினார். மேலும், மக்களுக்காகவே விஜய்யின் பயணம் இருப்பதாகவும், மக்கள் சேவைக்காகவே ஆண்டிற்கு 500 கோடி ரூபாய் வருமானத்தை தூக்கி எறிந்துவிட்டு, புனித ஆடசியை தமிழகத்தில் கொண்டுவருவதற்காக துணிந்து இந்த இயக்கத்தை விஜய் உருவாக்கியிருப்பதாக செங்கோட்டையன் தெரிவித்தார்.


தவெகவில் பிடித்த கொள்கை என்ன.?


தவெகவின் எந்த கொள்கை பிடித்திருக்கிறது என்ற கேள்விக்கு பதிலளித்த செங்கோட்டையன், எம்ஜிஆர் ஆட்சி தொடங்கியபோது இப்படித்தான் கேட்டார்கள் என்றும், அதாவது அண்ணாயிஸம் என்றால் என்ன என்று கேட்டதாகவும், அதற்கு, ஒழுகாத வீடு, கிழியாத உடை, ஆறாத சோறு என்று சொன்னார்.


அதேபோல், இன்று விஜய், எல்லோருக்கும் வீடு வேண்டும், பொருளாதாரத்தில் உயர்த்தப்பட வேண்டும், எல்லோரும் இரண்டு சக்கர வாகனத்தில் பயணம் செய்ய வேண்டும் என்றும் மனித நேயத்தோடு அறிவித்துள்ளார் என்று அவர் தெரிவித்தார்.


அதிமுகவை விமர்சித்ததாக கூறியதற்கு விளக்கம்


தொடர்ந்து பேசிய அவர், இன்றைய அதிமுகவைத் தான் தான் விமர்சனம் செய்ததாகவும், அன்றைய ஆட்சியை, அதாவது எம்ஜிஆர், ஜெயலலிதா காலம் வரை புனித ஆட்சி தான் நடைபெற்றதாகவும், அதற்குப் பின் தான் இந்த இரண்டு ஆட்சியும் அகற்றப்பட வேண்டும் என்று கூறியதாகவும் விளக்கமளித்தார்.


அவருக்கு பின்னால் மக்கள் இல்லை என்ற எடப்பாடி பழனிசாமியின் விமர்சனத்திற்கு பதிலளித்த  செங்கோட்டையன், 9 முறை தான் எம்எல்ஏ-வாக தேர்ந்தெடுக்கப்பட்டவன் என்றும், அதில் 3 முறை வாக்கு கேட்காமலேயே மக்கள் வெற்றி பெற வைத்தார்கள் என்பதால், மக்கள் என் பின்னால் இல்லை என்று அவர் சொல்லலாம், ஆனால் மக்கள் அதை பார்த்துக் கொள்வார்கள் என்று தெரிவித்தார். மேலும், ‘நான்‘ என்று ஒருவன் நினைத்தால், ‘தான்‘ என்று ஆண்டவன் காட்டிவிடுவார் என்று கூறிவிட்டுச் சென்றார் செங்கோட்டையன்.