டிட்வா புயல் மற்றும் கனமழை எச்சரிக்கை காரணமாக நாளை கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். 

Continues below advertisement

டிட்வா புயல்: 

தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைக் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடக்கு வடமேற்கு திசையில் நகர்ந்து புயலாக உருவெடுத்துள்ளது. இந்த புயலுக்கு டிட்வா என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது இந்த புயலானது சென்னைக்கு தென்கிழக்கே 500  கி.மீ. தூரத்திலும், புதுச்சேரிக்கு 430 கி.மீட்டர் தொலைவிலும் நிலைக்கொண்டுள்ளது. முதலில் 10 கி.மீ வேகத்தில் நகர்ந்த நிலையில் தற்போது 4 கிமீ வேகத்தில் நகர்ந்து வருகிறது.

ரெட் அலர்ட்: 

இந்த புயல் காரணமாக நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இன்று கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும் தூத்துக்குடி, விருதுநகர், மதுரை, பெரம்பலூர், கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மற்றும் புதுவையில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.

Continues below advertisement

பள்ளிகளுக்கு விடுமுறை: 

கனமழை எச்சரிக்கையை அடுத்து திருவாரூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை மாவட்டங்களில் இன்றைக்கு அரை நாள் (மதியம்) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டுள்ளனர்.

அதேப் போல் நாளையும் கனமழை எச்சரிக்கையை அடுத்து  கடலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு நாளை(29-11-25) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 

எங்கெல்லாம் ரெட் அலர்ட்: 

வடதமிழகத்தில் பெரும்பாலான இடங்களிலும், தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்கள், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில், ஒருசில இடங்களில் கன முதல் மிக கனமழையும், ஓரிரு இடங்களில் அதி கனமழையும் பெய்யக்கூடும்.

மீனவர்களுக்கான எச்சரிக்கை:

27-11-2025: காலை முதல் சூறாவளிக்காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்திலும், அதன் பிறகு, மதியம் முதல் காற்றின் வேகம் உயர்ந்து, மணிக்கு 60 முதல் 70 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 80 கிலோ மீட்டர் வேகத்திலும், மேலும் காற்றின் வேகம் உயர்ந்து 28-11-2025 காலை முதல் மணிக்கு 70 முதல் 80 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 90 கிலோ மீட்டர் வேகத்திலும் 29-11-2025 காலை முதல் 30-11-2025 வரை மணிக்கு 80 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும். 01-12-2025 முதல் காற்றின் வேகம் படிப்படியாக குறையக்கூடும்.