அதிமுக - தவெக கூட்டணி இருக்குமா இருக்காதா என்பது குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு பதிலளித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”எங்க ஆட்சியில் என்ன சட்ட ஒழுங்கு கெட்டு போய் இருந்துச்சு. சொல்லுங்க ஆர்.எஸ்.பாரதி அண்ணா. ஏதாவது சொல்லனும்னு சொல்லக்கூடாது. அவர் சொல்வதையெல்லாம் கணக்கில் வச்சிக்க கூடாது. யார் முதலமைச்சர் ஆக வேண்டும் என்று மக்கள் சொல்ல வேண்டும். அவங்களுக்கு அவங்களே சொல்லிக்கொள்ள கூடாது.
எந்த கொம்பனும் ஆட்சியை குறை சொல்ல முடியாதுன்னு முதலமைச்சர் சொல்கிறார். ஆனால் நீதியரசர் சொல்லிவிட்டாரே. ஒரு நடிகையை பிடிப்பதற்கு எதற்கு இரண்டு தனிப்படை. அவர் பேசியது சரி, தவறு என்பதற்கு நான் பேசவரவில்லை.
உடல்நிலை சரியில்லாத பிள்ளையை கவனித்து கஸ்தூரி மட்டுமே உள்ளார். ஒரு வருஷத்துக்கு மேல செந்தில்பாலாஜியை பிடிக்க முடியல இந்த அரசாங்கத்தால. இந்த அரசை மாற்ற வேண்டும் என்பதில் மக்கள் தெளிவாக இருக்கிறார்கள்.
தேர்தல் ஆரம்பித்ததும் திமுகவை வீட்டிற்கு அனுப்பிவிடுவார்கள். திமுகவுடன் சேரும் கட்சியையும் வீட்டிற்கு அனுப்பி விடுவார்கள். என்னதான் பேரம் பேசி கூட்டணி கட்சியை தக்க வைத்து கொண்டாலும் நிலைக்காது.
நான் சொல்றதை கேளுங்க. கூட்டணியில் இருக்கிறோம் என்று எங்க பொதுச்செயலாளர் சொன்னாரா? விஜய் சொன்னாரா? ஏற்கெனவே கூட்டணியில் இருக்கிறேன் என்று சொல்லிவிட்டு இப்போது இல்லை என்று சொன்னாரா? நான் கேட்கிறேன். நானே பல தடவை சொல்லியிருக்கிறேன்.
விஜய் கட்சி ஆரம்பிப்பதில் எங்களுக்கு மகிழ்ச்சி. அவர் ஏற்கெனவே புரட்சித்தலைவர் செய்வது போன்று சில காரியங்களை செய்கிறார். புரட்சித்தலைவரோடு ஒன்றுபடுத்தவில்லை. அவரிடம் இருக்கும் குணம் இவரிடம் இருக்கிறது என்று சொல்கிறோம். அதனால் அரசியல் கட்சி ஆரம்பிப்பதற்கு வாழ்த்துகள் சொன்னோம்” எனத் தெரிவித்தார்.