சட்டப்பேரவை கேள்வி நேரத்தின்போது சுற்றுலாத்துறை குறித்து முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ எழுப்பிய கேள்விக்கு தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பதிலால் அவையில் சிரிப்பலை ஏற்பட்டது.
மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர்: மதுரை மாரியம்மன் தெப்பக்குளத்தை சுற்றுலாத்தலமாக அறிவித்து கூடுதல் வசதிகள் செய்யும் கருத்துரு ஏதும் அரசின் பரிசீலனையில் தற்போது இல்லை.
செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே...! கடந்த 3 ஆண்டுகளாக மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிறைந்துள்ளது. இனி வைகை ஆற்றில் எப்போதெல்லாம் தண்ணீர் வந்தாலும் மாரியம்மன் கோயில் தெப்பக்குளம் நிறைகின்றதுபோல் தடுப்பணை கட்டப்பட்டு கடந்த ஆட்சியில் ஒரு கோடி செலவில் பனையூர் வாய்க்கால் மூலம் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வர செய்துள்ளோம். மதுரை மக்களுக்கு மெரினாவாக காட்சி அளிக்கும் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில் லேசர் ஷோ நடத்தி கொடுத்தால் மிக அருமையாக இருக்கும்.
அப்பாவு, பேரவை தலைவர்: 3 வருஷமா முடியல, செய்து தர முடியுமான்னு கேக்குறீங்க...!
செல்லூர் ராஜு, எம்.எல்.ஏ: இப்போதானே தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கு, அதுக்கு வழிவகை செய்துள்ளோம். மதுரைக்கு ஒரு நல்லதை செய்து தருவார், இளைஞராக இருக்கிறார் அமைச்சர், டாக்டர் வேற, விஞ்ஞான ரீதியாக இன்றைக்கு இருக்கும் நவீனத்தில் லேசர் ஷோ நடத்தினால் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும்.
மதிவேந்தன், சுற்றுலாத்துறை அமைச்சர்: மதுரை தெப்பக்குளத்தில் பொதுமக்கள் வசதிக்காக திருக்கோயில் மூலம் நபர் ஒன்றுக்கு 20 ரூபாய் கட்டணத்தில் படகு சவாரி விடப்பட்டுள்ளது. இந்து சமய அறநிலையத்துறையின் தடையில்லா சான்று பெற்று, ஆட்சியரின் கருத்துரு பெற்று வருங்காலத்தில் பரிசீலிக்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - நீங்களும் காலேஜ் நடத்துறீங்க; நானும் நடத்துறேன்.. கஷ்டம் உங்களுக்கு தெரியும்! - பொன்முடியை கோர்த்துவிட்ட அதிமுக எம்.எல்.ஏ
செல்லூர் ராஜூ, எம்.எல்.ஏ: பரிசீலிப்பதாக சொன்ன அமைச்சருக்கு நன்றி, 20 லட்சம் மக்கள் வசிக்கும் மதுரையில் எந்த பொழுதுபோக்கு வசதிகளும் இல்லை .
தங்கம் தென்னரசு, தொழில்துறை அமைச்சர்: மதுரைக்கே சிறந்த பொழுதுபோக்கு அண்ணன் செல்லூர் ராஜூ என்பது நாட்டிற்கே தெரிந்த விஷயம். (பேரவையில் சிரிப்பலை)
சட்டப்பேரவையில் நடந்த செய்திகளை தெரிந்து கொள்ள இந்த லிங்கை க்ளிக் செய்யவும்: - கலை கல்லூரி நிரம்பி வழியுது.. இன்ஜினியரிங் காத்து வாங்குது.. MLAவுக்கு அமைச்சர் சொன்ன பதில்!