நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை காணொலி கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ளலாம் என்று யுஜிசி அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. கடந்த 24 மணிநேரத்தில் 3,275 பேருக்குப் புதிதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 55 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் தற்போதைய மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 19,719 ஆக அதிகரித்துள்ளது.
அண்மையில் உலக சுகாதார நிறுவனம் வெளியிட்ட அறிக்கையில், கொரோனா வைரஸ் மற்றும் அதனால் ஏற்பட்ட சுகாதாரப் பிரச்சினைகளால் கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 1.5 கோடி மக்கள் உயிரிழந்திருக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான இறப்புகள் தென் கிழக்கு ஆசிய, ஐரோப்பிய மற்றும் அமெரிக்க நாடுகளில் ஏற்பட்டிருக்கின்றன.
இதற்கிடையே சீனா உள்ளிட்ட உலக நாடுகளில் மீண்டும் கொரோனா தொற்று மெல்ல அதிகரித்து வருகிறது. இதனால் ஆசிய விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையில் நாடு முழுவதும் உள்ள கல்லூரிகள், பல்கலைக்கழகங்களுக்கு பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ள யுஜிசி அனுமதி அளித்துள்ளது.
இதுகுறித்து யுஜிசி எனப்படும் பல்கலைக்கழக மானியக் குழு அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் கல்லூரிகளின் முதல்வர்களுக்கும் சுற்றறிக்கையை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
''முன்னதாக கொரோனா தொற்று ஊரடங்குக்கு மத்தியில் பல்கலைக்கழகங்களுக்கான தேர்வுகள் மற்றும் கல்வி கால அட்டவணை குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை யுஜிசி வெளியிட்டது. அப்போது, பிஎச்.டி., எம்.ஃபில். ஆகிய படிப்புகளுக்கான வாய்மொழித் தேர்வை காணொலிக் கருத்தரங்கு மூலம் நடத்திக்கொள்ளலாம். இவற்றை இணையம் மூலம் கூகுள், ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளின் மூலம் நடத்தலாம்.
எனினும் இணையம் மூலம் இத்தகைய தேர்வுகளை நடத்தும்போது, அனைத்துத் தரப்பினரும் அந்த இணைப்பைப் பார்க்க முடியும் என்பதை உறுதி செய்ய வேண்டும். அதாவது, ஆய்வு ஆலோசனைக் குழு, துறை சார் ஆசிரியர்கள், ஆய்வு அறிஞர்கள், ஆர்வமுள்ள ஆராய்ச்சியாளர்கள், நிபுணர்கள் உள்ளிட்ட அனைவரும் வாய்மொழித் தேர்வைக் காணும் வகையில் இணைய இணைப்பு இருக்கவேண்டும் என்று யுஜிசி தெரிவித்திருந்தது.
கடந்த பிப்ரவரி மாதம் யுஜிசி வெளியிட்ட சுற்றறிக்கையில் உயர் கல்வி நிறுவனங்கள் வளாகங்களைத் திறந்து செயல்படலாம். ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் முறையில் வகுப்புகளை நடத்தி, தேர்வுகளை வைக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாடு முழுவதும் உள்ள உயர் கல்வி நிறுவனங்கள்,கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் பிஎச்.டி., எம்.ஃபில். வாய்மொழித் தேர்வை கூகுள், ஸ்கைப், மைக்ரோசாஃப்ட் உள்ளிட்ட தொழில்நுட்ப சேவைகளின் உதவியோடு காணொலிக் கருத்தரங்கு மூலமாகவோ அல்லது நேரடியாகவோ நடத்திக்கொள்ளலாம்''.
இவ்வாறு பல்கலைக்கழக மானியக் குழு தெரிவித்துள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்