தவளை தன் வாயால் கெடும் என்பது போல் அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் கெட்டார் என்று விமர்சித்துள்ளார் அதிமுக முன்னாள் அமைச்சரும் மூத்த தலைவருமான செல்லூர் ராஜூ.
சில தினங்களுக்கு முன் பிடிஆர் ஆடியோ வெளியானது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பிடிஆர் மற்றும் முதலமைச்சர் விளக்கம் அளித்தனர். இந்த சூழலில் அவரிடம் இருந்த நிதி துறை தங்கம் தென்னரசுக்கு வழங்கப்படும் என பேச்சுக்கள் அடிப்பட்டது. அதைத்தொடர்ந்து அமைச்சரவையில் டி.ஆர்.பி.ராஜாவுக்கு இடம் கொடுப்பதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியானது. இதனால் கண்டிப்பாக அமைச்சரவை மாற்றம் இருக்கும் எனவும் பிடிஆர் பதவி மாற்றப்படும் எனவும் தொடர்ந்து செய்திகள் கசிந்தன.
இந்நிலையில் அண்மையில் அமைச்சரவை மாற்றம் நடைபெற்றது. இது தொடர்பாக எதிர்க்கட்சிகள் குறிப்பாக அதிமுக மிகக் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகிறது. அந்த வகையில் தான் செல்லூர் ராஜூவும் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனை விமர்சித்துள்ளார்.
ஏற்கெனவே, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசிய ஆடியோ விவகாரம் உண்மை என்பதால் தான் அவருக்கு டம்மியான இலாகா கொடுக்கப்பட்டுள்ளது. இதுதான் திராவிட மாடல் ஆட்சி திமுகவின் லட்சணம் என அதிமுக செய்தி தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான வைகைசெல்வன் காஞ்சிபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்த பொழுது கூறியிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், அமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜனிடம் இருந்து நிதித்துறை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முழுக்க முழுக்க அவர் குரல் அடங்கிய ஆடியோ வெளியானது தான் காரணமாகும். தவளை தன் வாயால் கெடும் என்பது போல அமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜனும் கெட்டுள்ளார். இப்போது அவரது துறையை மட்டும் பறித்துள்ளனர். எங்கே அவரை அமைச்சரவையில் இருந்து நீக்கினால், ஆடியோ விவகாரம் உண்மையாகி விடுமோ என்ற அச்சத்தால் துறையை மாற்றி நிதித்துறைக்கு பதிலாக ஒரு சாதாரண துறையைக் கொடுத்துள்ளனர் என்றார்.
இருவருமே எங்கள் நண்பர்கள் தான்:
தொடர்ந்து தேர்தல் கூட்டணி பற்றிப் பேசிய செல்லூர் ராஜூ, "பாஜக.வும், காங்கிரஸும் எங்கள் நண்பர்கள் தான். எப்போது வேண்டுமானாலும், யாரை வேண்டுமானாலும் கூட்டணியில் சேர்த்துக் கொள்வோம். எங்களுடைய ஒரே அரசியல் எதிரி திமுக மட்டும் தான்" என்று கூறினார்.
விஜய் என்ன யார் வேண்டுமானாலும் வரலாம்..
நடிகர் விஜய் அரசியலுக்கு வருவாரா என்று கேட்கிறீர்கள். நம் நாடு ஜனநாயக நாடு. இந்த ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம். நடிகர் விஷாலை எடுத்துக் கொள்ளுங்கள். அவர் ஒரு சில படங்கள் ஹிட் கொடுத்தார். விஷாலே அரசியலுக்கு வருகிறேன் என்று சொல்லும்போது, பல படங்கள் ஹிட் கொடுத்த நடிகர் விஜய் தாராளமாக அரசியலுக்கு வரலாம். நடிகர் விஜய் அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அதன் பின்னரே அவருடைய செயல்பாடுகள் குறித்தும், அவருடன் கூட்டணி வைப்பதா என்பது குறித்தும் சொல்ல முடியும்.
மய்யம் போன இடம் தெரியவில்லை..
நடிகர் கமல் கூட மக்களுக்கு நல்லது செய்ய போவதாக சொல்லித்தான் மக்கள் நீதி மய்யம் என்ற கட்சியை ஆரம்பித்தார். இப்போது நீதியும், மய்யமும் எங்கே போனது? என்று தெரியவில்லை என்றார்.