திருச்சி டிஐஜி வருண் குமார் சீமான் மீது தொடர்ந்த வழக்கில் திருச்சி நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இன்று மாலை 5 மணி வரைதான் சீமானுக்கு நீதிபதி டைம் கொடுத்துள்ளார். 

இன்று மாலைக்குள் சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். 

தனது பெயருக்கு கலங்கம் விளைவிப்பதாக திருச்சி டிஐஜி வருண்குமார் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு ஜே எம் 4 நீதிமன்றத்தில் வந்தது. மாலை 5 மணிக்குள் சீமான் ஆஜராகவில்லை என்றால் பிடிவாரண்ட் பிறப்பித்து விடுவேன் என நீதிபதி கடுமையாக சாடினார். 

திருச்சி எஸ்பியாக இருந்த வருண்குமாருக்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு இடையே போட்டா போட்டி நிலவி வருகிறது. நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த சாட்டை துரைமுருகனை கைது செய்த வருண்குமார் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் குறிப்பிட்ட சாதியினரை வன்மத்துடன் நடத்துவதாகவும் சீமான் புகார் தெரிவித்திருந்தார்.

இதனிடையே வருண்குமார் ஒரு நிகழ்ச்சியில் நாம் தமிழர் கட்சியை கடுமையாக சாடியிருந்தார்.

இதையடுத்து திருச்சி மாவட்ட எஸ்பி வருண்குமார், புதுக்கோட்டை எஸ்பியும் வருண்குமாரின் மனைவியுமான வந்திதா பாண்டே ஆகியோரை சில எக்ஸ் கணக்குகளில் இருந்து ஆபாசமாகவும் தரக்குறைவாகவும் விமர்சித்து சமூக வலைதளங்களில் பதிவுகள் வெளியிடப்பட்டன.

இதற்காக சீமானுக்கு வருண்குமார் தரப்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இதற்கு சீமான் விளக்கம் அளித்திருந்தாலும் கேள்விகளுக்கு பதில் அளிக்கவில்லை எனக்கூறி வருண்குமார் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இதனிடையே வருண்குமார் மற்றும் அவரது மனைவி வந்திதா பாண்டே ஆகியோர் டிஐஜியாக பதவி உயர்வு பெற்றனர். தற்போது வருண்குமார் திருச்சி ஐஜியாகவும், வந்திதா பாண்டே திண்டுக்கல் டிஐஜி ஆகவும் உள்ளனர்.

மேலும் நீதிமன்றத்தில் ஆஜராஜ வருண்குமார் தனது தரப்பு விளக்கத்தை அளித்தார். ஆனால் சீமான் இன்று ஆஜராக வேண்டும் என உத்தரவிட்ட நிலையில் ஆஜராகவில்லை.

இந்நிலையில் தான் நீதிபதி இந்த கடுமையான உத்தரவை பிறப்பித்துள்ளார்.