திருப்பத்தூரில் சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக 10 க்கும் மேற்பட்ட நாதக நிர்வாகிகள் கட்சியை விட்டு விலகிய நிலையில், அவர்களுடன் மற்றொரு நாதக நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த அம்பலூர் பகுதியை சேர்ந்தவர் தேவேந்திரன். இவர் கடந்த 2017 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியின் திருப்பத்தூர் வடக்கு மாவட்ட செயலாளராக பொறுப்பு வகித்து வருகிறார். இந்நிலையில் தேவேந்திரன் மற்றும் நாம் தமிழர் கட்சியினர் 10க்கும் மேற்பட்டோர், கட்சியில் இருந்து விலகுவதாக அதிரடியாக அறிவித்துள்ளனர். இதுதொடர்பாக வாணியம்பாடியில் செய்தியாளர்களை சந்தித்த போது, நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதுள்ள அதிருப்தி காரணமாக அவர்கள் கட்சியை விட்டு விலகுவதாக தெரிவித்துள்ளனர்.
மேலும் நாம் தமிழர் கட்சி நம்பிக்கை தன்மையை இழந்து விட்டதாகவும், யாரிடம் கூட்டு வைக்கவில்லை எனவும்,தமிழ் தேசியத்தை ஏற்றுக்கொண்டு பயணிக்கவில்லை எனவும், படித்தவர்களை வேட்பாளராக முன்நிறுத்திய போது, அதை சீமான் மறுத்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர், இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் குறுக்கிட்ட நாம் தமிழர் கட்சி வாணியம்பாடி தொகுதி குருதி பாசறை பொறுப்பாளர் நாகராஜ் மாவட்ட செயலாளர் தேவேந்திரனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே வார்த்தைப்போர் தொடங்கிய நிலையில், சற்று நேரத்தில் அது கைகலப்பாக மாறியது. நாதகவில் இருந்து விலகிய மாவட்ட செயலாளர் தேவேந்திரனும், மற்றொரு நாதக நிர்வாகியும் மாறி மாறி ஒருவரை தாக்கிக்கொண்டனர்.
இதனால் இருதரப்பினருக்கும் இடையே கடும் மோதல் வெடித்துள்ளது. இச்சம்பவம் குறித்து வாணியம்பாடி நகர காவல்துறையினர் விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.
நாம் தமிழர் கட்சியினரிடையே கடும் மோதல் ஏற்பட்ட நிகழ்வு வாணியம்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது..