Seeman: தமிழக வங்கிகளில் தமிழ் தெரியாத வடமாநிலத்தவரைப் பணி நியமனம் செய்யும் போக்கினை இந்திய ஒன்றிய அரசு கைவிட வேண்டும் என சீமான் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாட்டிலுள்ள பெரும்பாலான வங்கிகளில் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரை அதிக அளவில் பணியமர்த்தும் போக்கு அண்மைக்காலமாக அதிகரித்து வருவது மிகுந்த கவலை அளிக்கிறது. மக்கள் சேவைத்துறைகளில் தமிழ் தெரியாதவர்களை வேண்டுமென்றே பணி நியமனம் செய்யும் இந்திய ஒன்றிய அரசின் எதேச்சதிகாரப்போக்கு வன்மையான கண்டனத்திற்குரியது.
சென்னை அசோக் நகரில், காவலர் பயற்சிக்கல்லூரி எதிரேயுள்ள ‘இந்தியன் ஓவர்சீஸ்’ பொதுத்துறை வங்கியில் தொடர்ந்து தமிழ் தெரியாத பிற மாநில அதிகாரிகளே மேலாளர்களாக நியமிக்கப்படுவதால் வங்கி சேவையைப் பெறுவதில் அடித்தட்டு, ஏழை மக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகின்றனர். இந்தி தெரியாத பாமர தமிழர்களை, வடநாட்டு அதிகாரிகள் ஆணவத்தோடு, அவமதிக்கும் நிகழ்வுகள் தொடர்வதாக பொதுமக்கள் தெரிவிக்கும் புகார்கள் மிகுந்த ஆத்திரத்தையும், கோவத்தையும் ஏற்படுத்துகிறது.
தமிழ்நாட்டில் உள்ள சிறுகடைகள் முதல் பெரிய வணிக நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் அனைத்து வகையான கூலித்தொழில்கள் என எல்லா பணிவாய்ப்புகளும் இலட்சக்கணக்கில் வடமாநிலத்தவரால் ஆக்கிரமிக்கப்படுகிறது. அதுமட்டுமின்றி தமிழ்நாட்டிலுள்ள என்.எல்.சி, எல்.ஐ.சி, பி.எச்.இ.எல் உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனங்களிலும் வட மாநிலத்தவரே பல்லாயிரக்கணக்கில் பணி வாய்ப்புகளைப் பெறுகின்றனர். மேலும் வருமானவரித்துறை, அமலாக்கத்துறை உள்ளிட்ட இந்திய ஒன்றிய அரசின் நிர்வாகத் துறைகளிலும் அனைத்து நிலைகளிலும் வடமாநிலத்தவரே நியமிக்கப்படுகின்றனர்.
இதனால் தமிழ் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய வேலைவாய்ப்புகள் பறிபோவதோடு, தமிழர்களின் பல்லாயிரம் கோடி ரூபாய் பொருளாதாரமும் கொள்ளைபோகிறது. மேலும் தமிழகத் தொழிலாளர்கள் போராடிப்பெற்ற குறைந்தபட்ச ஊதிய உரிமையும் பறிபோய் வர்க்க பாகுபாட்டில் தமிழ்நாடு பல ஆண்டுகள் பின்னோக்கி செல்லும் அவலச்சூழலும் ஏற்படுகிறது. வடமாநிலத்தவர் நிரந்தரமாகக் குடியேறுவதால் தமிழர்களின் பண்பாடு, வழிபாடு என அனைத்தும் பேரழிவை நோக்கிச் செல்கிறது. அதுமட்டுமின்றி, குடியேறிய சில மாதங்களிலேயே குடும்ப அட்டை முதல் வாக்காளர் அட்டை வரை அனைத்தையும் பெறுவதால் தமிழர்களின் அரசியல் அதிகாரமும் முற்றாக வடவரிடம் பறிபோகும் பேராபத்தும் ஏற்படுகிறது. இதனால் பணிநிமித்தமாக தமிழ்நாட்டில் நாள்தோறும் நிகழும் வடவர் குடியேற்றத்தைத் தமிழர்கள் மீது தொடுக்கப்படும் அரசியல் மற்றும் பண்பாட்டுப் படையெடுப்பாகவே பார்க்க வேண்டியுள்ளது.
நூற்றாண்டு காலமாக இந்தியைத் திணிக்கும் இந்திய ஆட்சியாளர்களின் முயற்சிகளை தமிழ்நாடு கடுமையாக எதிர்ப்பதால், தற்போது இந்திக்காரர்களை வலிந்து குடியேற்றி அதன் மூலம் மறைமுகமாக இந்தியைத் திணிக்க முயல்கின்றனர் என்பது வெட்டவெளிச்சமாகிறது. குறிப்பாக வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட மக்கள் தொடர்புத்துறைகளில் தமிழ் தெரியாத வடமாநில அதிகாரிகளை வேண்டுமென்றே நியமிப்பதன் மூலம் தமிழ்நாட்டிலுள்ள ஏழை, எளிய மக்களை மறைமுகமாக இந்தி கற்க வேண்டிய நெருக்கடி நிலைக்கு ஆளாக்குகின்றனர். குறிப்பாக இந்திய ஒன்றியத்தில் மோடி தலைமையிலான பாஜக அரசு பதவியேற்ற கடந்த 8 ஆண்டுகளில் இத்தகைய வடவர் திணிப்பு இலட்சக்கணக்கில் பலமடங்கு வீரியமாக அதிகரித்துள்ளது. இது, எதிர்காலத்தில் இந்துத்துவத்தைத் தமிழ் மண்ணில் விதைப்பதற்கான வலுவான அடித்தளமேயன்றி வேறில்லை. இதனை இனியும் தொடர அனுமதித்தால் ஈழத்தைப் போல் தமிழ்நாட்டிலும், தமிழர்கள் தங்கள் சொந்த தாயகத்தில் அதிகாரம் ஏதுமற்ற அகதியாகும் அவலநிலை ஏற்படும்.
ஆகவே, வங்கி, அஞ்சலகம் உள்ளிட்ட ஒன்றிய அரசின் அனைத்து மக்கள் சேவைத் துறைகளிலும் பணிபுரியும் தமிழ் தெரியாத பிறமாநிலத்தவரைக் கணக்கெடுத்து அவர்களை உடனடியாகப் பணியிடமாற்றம் செய்ய வேண்டுமெனவும், தமிழ்நாட்டில் பணிபுரிய தமிழ் எழுத, படிக்க, பேச தெரிந்திருப்பது கட்டாயம் என்பதை உறுதி செய்ய வேண்டுமெனவும், இந்திய ஒன்றியத்தை ஆளும் பாஜக அரசினை வலியுறுத்துகிறேன். மேலும், தமிழ்நாட்டின் தன்னாட்சி, இறையாண்மை மற்றும் தமிழர்களின் வாழ்வுரிமையை அழித்தொழிக்கும் வடவர் திணிப்பைக் கட்டுப்படுத்த நுழைவுச் சீட்டு உள்ளிட்ட தீவிர நடவடிக்கைகளை முழுவீச்சில் எடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு அரசினையும் கேட்டுக்கொள்கிறேன்.