வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி இல்லை என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
விஜயுடன் கூட்டணி அமைக்கிறாரா சீமான்? தமிழ்நாடு அரசியலில் அடுத்தடுத்த திருப்பங்கள் அரங்கேறி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய், கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். வரும் 2026ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் அறிவித்தார்.
இதற்காக தமிழ்நாடு முழுவதும் தமிழக வெற்றிக்கழக கட்சியினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர். கடந்த வாரம் தமிழக வெற்றிக் கழகத்தில் கட்சிக்கொடி மற்றும் கட்சிப்பாடல் வெளியிடப்பட்டது. ஏற்கனவே, ஆளுங்கட்சியாக உள்ள திமுக, பிரதான எதிர்க்கட்சியாக உள்ள அதிமுக, பாஜக தலைமையிலான கூட்டணி, நாம் தமிழர் என நான்கு முனை அரசியல் இருந்து வருகிறது.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் விஜயின் அரசியல் நுழைவு பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2026ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் விஜய், யாருடன் கூட்டணி அமைக்கப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியாக எழுந்துள்ளது.
நாம் தமிழர் எடுத்த நிலைபாடு என்ன? சீமானின் நாம் தமிழர் கட்சியுடன் அவர் கூட்டணி அமைக்கலாம் என அரசியல் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விஜயுடன் கூட்டணி அமைக்கப்போவதில்லை என சீமான் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தூத்துக்குடியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "234 தொகுதிகளிலும் நாம் தமிழர் தனித்து போட்டியிடுகிறது. தற்போதே, 60 வேட்பாளர்களை தேர்வு செய்துவிட்டேன். 2026 தேர்தலில் விஜயின் தவெகவுடன் நாம் தமிழர் கூட்டணி அமைக்காது" என்றார்.
இதற்கிடையே, தவெகாவின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்தனர்.
இதையடுத்து, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் கட்சியின் முதல் மாநாட்டை நடத்த விஜய் தேர்வு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகின. மாநாட்டை நடத்த அனுமதி கேட்டு தவெக சார்பில் அனுமதி கோரப்பட்டது. ஆனால், இன்னும் அனுமதி கொடுக்கப்படவில்லை என்றும் அதில் தொடர் இழுபறி நீடித்து வருவதாகக் கூறப்படுகிறது.