சென்னை வடபழனியில், நாம் தமிழர் கட்சியின் மாநில நிர்வாகக் குழு கலந்தாயுவுக் கூட்டம், கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது. அதற்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அவர், விஜயகாந்த் செய்த தவறை தான் செய்யமாட்டேன் என்றும், மக்களுக்கு கசாயம் கொடுத்து வருவதாகவும் கூறினார். அவர் கூறியது எதைப் பற்றி தெரியுமா.? இப்போது பார்க்கலாம்.
“மக்களுக்கு கசாயம் கொடுக்கிறேன், அது மெதுவாகத் தான் வேலை செய்யும்“
சீமான் தலைமையில் நடந்த நிர்வாகக் குழு கூட்டத்தில், தமிழ்நாடு முழுவதிலும் இருந்தும், அதாவது 234 தொகுதிகளில் இருந்தும் கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். அவர்களிடையே, சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்து பல்வேறு கருத்துக்களை அவர் எடுத்துக் கூறினார்.
இந்த கூட்டம் தொடங்குவதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது, கூட்டணிக்காக காத்திருக்காமல், 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டியிடுவதாக அவர் தெரிவித்தார். மேலும், களத்தை மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து வருவதாகவும், நல்ல அரசியல் உருவாக வேண்டும் என்ற எண்ணத்தோட செயல்பட உள்ளதாகவும் அவர் கூறினார்.
அதோடு, வாக்குக்கு பணம் கொடுக்கும் கட்சிகளுக்கு மத்தியில், பணம் வாங்காமலும், எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமலும் 35 லட்சம் பேர் தனக்கு வாக்களித்துள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், அது 60 லட்சமாக உயர்ந்து, ஒரு கோடியை எட்டும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதாகவும் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், கொஞ்சம் கொஞ்சமாகத் தான் மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்றும், அவசரம் காட்டக் கூடாது என்றும் கூறிய சீமான், தற்போது மக்களுக்கு கசாயம் கொடுத்து வருவதாகவும், அது மெதுவாகத் தான் வேலை செய்யும் என்றும் தெரிவித்தார்.
“தேர்தல் கூட்டணி - விஜயகாந்த் செய்த தவறை செய்ய மாட்டேன்“
மேலும், கூட்டணி விஷயத்தில், விஜயகாந்த் செய்த தவறை தான் நிச்சயம் செய்ய மாட்டேன் என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்தார். அரசியல் கட்சிகளுக்கு மாற்று என்று கூறிவிட்டு, அந்த கட்சிகளோடு கூட்டணி வைத்தால், எப்படி மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.
10 சதவீத வாக்குகளை தனித்து நின்று பெற்ற விஜயகாந்த், கூட்டணி அமைத்த பின் என்ன ஆனார் என்பது அனைவருக்குமே தெரியும் என்றும், அதன் பிறகு தான் அவருக்கு வாக்கு சதவீதம் குறைந்தது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
அதனால், எந்த தேர்தலிலும் யாருடனும் எப்போதும் கூட்டணி கிடையாது என அவர் உறுதிபடக் கூறினார். தனித்து நின்று நிச்சயம் வலிமை பெறுவோம் என்றும், ஆட்சி அதிகாரத்தில் அமர்வோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் சீமான் தெரிவித்தார்.