திருச்சி விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார் சீமான். அப்போது, பல்வேறு விஷயங்கள் குறித்து பேசிய அவர், கரூர் விவகாரத்தில், தான் சொன்னதையே தான் அஜித்தும் கூறியிருப்பதாக தெரிவித்தார். அவரது பேட்டி குறித்த விவரங்களை பார்க்கலாம்.
“நான் சொன்ன அதே கருத்த தான் நடிகர் அஜித்தும் சொல்லியிருக்கார்“
செய்தியாளர்களிடம் பேசும்போது, கரூர் கூட்ட நெரிசல் சம்பவம் தொடர்பாக பேசிய அவர், தான் சொன்ன அதே கருத்தை தான் நடிகர் அஜித்தும் தெரிவித்துள்ளதாக கூறினார்.
இந்த முறையே தவறு என்றும், இது போன்ற கலாச்சாரமே தவறு என்று தான் அஜித் கூறுவதாக தெரிவித்த சீமான், அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொதுவான இடம் ஒன்றை ஒதுக்கி, அங்கு வந்த அவர்கள் பேசிவிட்டு செல்லட்டும் என்றும் மக்கள் அதை பார்த்துவிட்டு ஓட்டு போடட்டும் என்று கூறிய அவர், இதையேதான் அஜித்தும் சொல்லியிருக்கிறார் என கூறியுள்ளார்.
மேலும், மற்ற நாடுகளில், இங்கு செய்வது போன்ற பிரசார முறை இல்லை என்றும் சீமான் தெரிவித்தார். வரும் தேர்தலில், தமிழ்நாட்டில் கட்சிகளுக்கு போட்டி இல்லை என்றும், கருத்துகளுக்கு தான் போட்டி என்றும் அவர் தெரிவித்தார்.
“கடும் சட்டங்கள் இருந்தால் தான் பாலியல் சம்பவங்களை தடுக்க முடியும்“
கோவை பாலியல் சம்பவம் குறித்து பேசிய சீமான், கோவையில் பெண்களுக்கு எதிரான பாலியல் நிகழ்வு போல், பல நிகழ்வுகள் வெளியே தெரியாமல் இருப்பதாக கூறினார். மேலும், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துவிட்டதாக கூறிய அவர், ஒரு பாதுகாப்பற்ற சூழலில் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோமோ என்ற நடுக்கத்தை ஏற்படுத்துவதாக தெரிவித்தார்.
மேலும், கடும் சட்டங்கள் இருந்தால் தான், இது போன்ற சம்பவங்களை தடுத்து நிறுத்த முடியும் என்று அவர் தெரிவித்தார். பொள்ளாச்சியில் இதே போன்ற ஒரு சம்பவம் நடைபெற்றுள்ளது என்றும், அண்ணா பல்கலைக்கழகத்தில் நடந்துள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
“SIR ஒரு தேவையற்ற வேலை“
தொடர்ந்து, வாக்காளர் பட்டியல் திருத்த விவகாரத்தில், பாஜக தேவையற்ற வேலையை செய்வதாக சீமான் விமர்சித்தார். மக்களை எப்போதும் பதற்றத்தோடு வைத்திருக்க அவர்கள் முயல்வதாகவும், அப்போதுதான் செய்யும் தவறு வெளியே தெரியாமல் இருக்கும் என்றும் அவர் சாடினார்.
ஆவணங்கள் கொடுக்கவில்லை என்றால் பெயரை நீக்குவோம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது, 2 மாதத்தில் தேர்தலை வைத்துக்கொண்டு என்ன ஆவணங்களை கொடுக்க முடியும் என்று அவர் கேள்வி எழுப்பினார். மேலும், பீகார் போன்ற வட மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்தவர்களுக்கு வாக்குரிமை வழங்க இந்த வேலையை செயவதாகவும் குற்றம்சாட்டினார். அப்படி வழங்கும்போது, தமிழ்நாடு மற்றொரு பீகாராக மாறிவிடும் என்று சீமான் கருத்து தெரிவித்தார்.