தமிழ் தேசியத்தை விட்டு வந்தால் இணைந்து செயல்படலாம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா சொன்ன கருத்துக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார். 


2024 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் இப்போதே தேர்தல் பணிகளில் தீவிர கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அந்த வகையில் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கட்சியை பலப்படுத்தும் நோக்கில்  மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அந்த வகையில் புதுக்கோட்டைக்கு அவர் சென்றுள்ளார். 


அங்கு பத்திரிக்கையாளர் சந்திப்பில் சீமானிடம் கேட்கப்பட்ட கேள்விகளும், அவர் அளித்துள்ள பதிலும் பின்வருமாறு: 


கேள்வி: சீமான் அவர்கள் தமிழ் தேசிய கொள்கையை விட்டு வர வேண்டும். அப்படி வந்தால் இணைந்து செயல்பட தயாராக இருக்கிறோம் என பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜாவும்,  தமிழ் தேசிய சித்தாந்தம் தோல்வியடைந்த ஒன்று. அது வீண் முயற்சி, என்றைக்கும் வெற்றி பெறாது என திருமாவளவனும் தெரிவித்துள்ளார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன? என கேள்வியெழுப்பப்பட்டது. 


அதற்கு சீமான், ‘ஹெச்.ராஜாவுக்கு ஒரே பதில் தான். உங்க கூட வர்றதுக்கு ‘வாய்ப்பில்லை ராஜா’என்பது தான் பதிலாகும். அதேசமயம் எங்க அண்ணன் திருமாவளவன் பொறுத்திருந்து பாருங்கள். அவர் தோற்றுவிட்டார் என சொல்லலாமே தவிர, யாரும் ஜெயிக்க முடியாது என சொல்வதற்கான உரிமை அவருக்கு கிடையாது. இந்த அரசியலை முதல்முறையாக கற்றுக் கொடுத்தது அவர் தான். பயிற்சி கொடுத்த ஆசிரியர் யாரும் ஓடி பதக்கம் வென்றதில்லை. பயிற்சி எடுத்த மாணவன் தான் வெல்கிறான்.


திருமாவளவன் பொறுத்திருந்து பார்க்க வேண்டும். தோற்று தான் போய் விட்டது என்றால் பேசாமல் செல்லுங்கள். நான் தோற்றுப்போவேன் என்றால் ஏன் என்னைப் பார்த்து பயப்படுகிறீர்கள். நான் தோற்றால் உங்களுக்கு என்ன?, இப்ப தான் தமிழ் தேசியம் வருது. பொறுத்திருந்து பாருங்கள்’ என தெரிவித்தார். 


தொடர்ந்து ஹெச்.ராஜா பாசமாக கூப்பிடுகிறாரே? என கேட்ட கேள்விக்கு, ‘நானும் பாசமாக தான் கூப்பிடுகிறேன். என்னுடைய வீட்டுக்கு வாங்க. என் மனைவி நல்லா மாட்டுக்கறி சமைப்பாங்க. சாப்பிட்டு பேசிகிட்டு இருப்போம். நட்பு வேறு.. உறவு வேறு..  அரசியல் கோட்பாடு என்பது வேறு’ என சீமான் கூறினார்.


மேலும், ‘ஹெச்.ராஜா இத்தனை நாட்களாக உங்களை எதிர்த்து பேசினார். தேசத்துரோகி என சொன்னார். திடீரென பாசத்தை காட்ட காரணம் என்ன? என கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு, ‘நான் வளர்கிறனே மண்ணில்’ என காமெடியாக சீமான் பதில் அளித்தார்.