அரசு மருத்துவா் ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவப்படிப்பை நிறைவு செய்தவா்கள் அரசு மருத்துவமனைகளில் கட்டாயப் பணியாற்றும் காலம் 5 ஆண்டுகளாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதுநிலை மருத்துவ படிப்பு:
தமிழ்நட்டில் இயங்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளின் எண்ணிக்கை அடிப்படையில், எம்டி, எம்எஸ் ஆகிய முதுநிலை மருத்துவப் படிப்புகளுக்கு மொத்தம் 2,100 இடங்கள் உள்ளன. அவற்றில் 50 சதவீத இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் மத்திய அரசுக்கு வழங்கப்படுகின்றன. மீதம் மாநில ஒதுக்கீட்டின் கீழ் உள்ள 1050 இடங்களை மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்ககம் கலந்தாய்வு மூலம் நிரப்பி வருகிறது. அதிலும் குறிப்பாக, 525 இடங்கள் தமிழக அரசின் கீழ் செயல்படும் ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் அரசு மருத்துவமனைகளில் பணியாற்றும், எம்பிபிஎஸ் என்ப்படும் இளநிலை மருத்துவ படிப்பை பூர்த்தி செய்த மருத்துவா்களுக்கு 50 சதவீத உள்ஒதுக்கீட்டின் கீழ் வழங்கப்படுகிறது.
கட்டாய பணியாற்று காலம்:
தமிழக அரசின் உள் ஒதுக்கீட்டின் மூலம் முதுநிலை படிப்பை நிறைவு செய்த மருத்துவர்கள், இரண்டு ஆண்டுகள் அரசு மருத்துவ மையங்களில் சேவையாற்ற வே ண்டும் என்பது விதி. இதன் மூலம், அரசு மருத்துவமனைகளை நாடி வரும் நோயாளிகளுக்கும், உயர் அனுபவம் பெற்ற மருத்துவர்கள் மூலம் தரமான சிகிச்சை கிடைப்பதற்கான வழிவகை செய்யப்படுகிறது.
விதியில் மாற்றம்:
நீண்ட காலமாக உள்ள இந்த கட்டாய பணியாற்று கால விதியில் நடப்பாண்டில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, அரசு உள்ஒதுக்கீட்டின் மூலம் முதுநிலை மருத்துவம் படித்து முடித்தவர்கள், இனி அரசு மருத்துவ சேவைகளில் ஐந்தாண்டுகள் கட்டாயம் பணியாற்ற வேண்டும் என புதிய வரையறை வெளியிடப்பட்டுள்ளது.
ஏன் 5 ஆண்டுகள் கட்டாய பணிகாலம்?
கட்டாய பணிக்காலம் உயர்த்தப்பட்டது தொடர்பாக மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி இயக்கக அதிகாரிகளிடம் கேட்டபோது “ அரசு மருத்துவா்களுக்கான உள்ஒதுக்கீட்டின் கீழ் முதுநிலை மருத்துவம் படித்தவர்கள், தங்களது அரசு பணியிலிருந்து விலகி தனியாா் மருத்துவ பணிக்கோ அல்லது வெளிநாட்டுக்கோ சென்றால் அரசு மருத்துவமனைகளில் சிறப்பு மருத்துவா்களுக்கு பற்றாக்குறை ஏற்படும் வாய்ப்பு உள்ளது. அதை தவிா்க்கவே முதுநிலை படிப்புக்கு பின்னா் மருத்துவர்கள் அரசு மருத்துவமனைகளில் இரண்டு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும் என இதற்கு முன்பு விதிகள் வகுக்கப்பட்டிருந்தன. அது தற்போது ஐந்து ஆண்டுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. அவ்வாறு அரசு மருத்துவ மையங்களில் 5 ஆண்டுகள் பணியாற்ற விரும்பாத முதுநிலை பட்டயப்படிப்பு மாணவா்கள் மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு மாணவா்கள் முறையே 20 லட்ச ரூபாய் மற்றும் 40 லட்ச ரூபாயை ஈட்டுத் தொகையாக வழங்கி கட்டாய பணிக்காலத்தில் இருந்து தங்களை விடுவித்துக்கொள்ளலாம். தவறும் பட்சத்தில் முதுநிலை மருத்துவ படிப்பை பூர்த்தி செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்படா து என்று விளக்கமளித்தனர். இதனால், அரசு மருத்துவமையங்களில் மருத்துவர் பற்றாக்குறை எனும் பெரும் பிரச்னை தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.