Seeman: அதிமுகவின் சொத்து பட்டியலை மட்டும் அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


அதிமுக சொத்து பட்டியலை வெளியிடாதது ஏன்?


மதுரையில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது  அவர் பேசியதாவது, ”அதிமுக கட்சியில் 7 அமைச்சர்கள் மீது சிபிஐ வழக்கு இருக்கிறது. அவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டு உள்ளது. அந்த குற்றச்சாட்டுகளை மட்டும் நீங்கள் ஏன் பேச முன்வருவதில்லை.  அதிமுகவின் சொத்து பட்டியலை மட்டும் அண்ணாமலை ஏன் வெளியிடவில்லை. நடுநிலையோடு இருந்து இரண்டு தரப்பு பட்டியலையும் வெளியிட வேண்டும். அது செய்யாமல் அதிமுகவில் உள்ளவர்களை புனிதராக்கும் வேலையை செய்து கொண்டிருக்கிறார். நீங்கள் கூட்டணி வைத்திருப்பதால் அதிமுக  அமைச்சர்கள் மீது இருக்கும் குற்றச்சாட்டுகளை சொல்வதில்லை. அரசியல் லாபத்திற்காக இதுபோன்று செய்து வருகிறார் அண்ணாமலை” என்றார். 


மேலும் பேசிய அவர், ”ஒருநாளும், கோடநாடு கொலை வழக்கை பற்றி பேசியது உண்டா? 24 மணி நேரத்தில் ஒரு நிமிடம் கூட மின்சாரம் துண்டிக்கப்படாத கோடநாட்டில் ஒரு மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. எப்படி? 6 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர். அதை பற்றி மட்டும் ஏன் பேசவில்லை. நடைபயணம் மேற்கொண்டால் ஏதாவது தாக்கம் ஏற்படும் என்று பாஜக நினைக்கிறது. எல்லா தலைவர்களும் இப்படி நடைபயணம் மேற்கொள்வது வழக்கமாகி விட்டது. திராவிட மாடல், குஜராத்  மாடல் போல் நடைபயணம் என்பது ஓல்டு மாடல். இதற்கு முன்பு வைகோ குறுக்க மறுக்க நடந்து முடித்துவிட்டார். ராகுல் காந்தியும் நடந்து முடித்துவிட்டார். இதனால், அண்ணாமலை பாதயாத்திரை மேற்கொள்வது தேவையில்லாதது. உடற்பயிற்சிக்காக வேண்டுமானாலும் நடக்கலாம். வாக்கிங் போனும் னா பீச்ல, பார்க்-ல போங்க...ஏன் ரோட்ல் போகுறீங்க?” என்று சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.


"இந்தியாவில் யாரும் வாழ முடியாது”


தொடர்ந்து பேசிய அவர், ”குஜராத் கலவரத்தை பற்றி நியாயப்படுத்தி அப்போதைய கருணாநிதி தலைமையிலான திமுகவினர் பேசினர். இப்போது எதிராக பேசுகின்றனர். தற்போது, மணிப்பூர் கலவரத்தை வைத்து காங்கிரஸ் புனிதம் வேடம் போடுகிறது. மணிப்பூரில் நடைபெறும் கலவரத்தை ஆளும் பாஜக அரசு விரும்புகிறது.


 தென் மாநிலங்களான தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா போன்ற மாநிலங்களில் பாஜகவால் வளர முடியவில்லை. அதனால் வரும் நாடாளுமன்ற தேர்தலில் பிரதமர் மோடி தமிழ்நாட்டை குறி வைக்கிறார். இதனால் தான், தொடர்ந்து தமிழை பற்றி பேசி வருகிறார். சந்திரயான் விண்கலம் பற்றி மோடி பாராட்டி பேசி வருகிறார். அங்கே குடியேற நினைத்தால் முதலில் பிரதமர் மோடி யாரை அனுமதிப்பார். கிறிஸ்தவர்களா? முஸ்லீம்களையா? இந்துக்களையா? என்று பிரதமர் மோடி கூற வேண்டும். மீண்டும் பிரதமராக மோடி வந்தால், இந்தியாவில் யாரும் வாழ முடியாது. சந்திர மண்டலத்தில் தான் நாம் எல்லாம் குடியேற வேண்டும்” என்று தெரிவித்தார்.