திருச்சியில் திமுக வாக்குச் சாவடி முகவர்கள் பாசறை பயிற்சி பொதுக்கூட்டத்தில் திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர், எந்தக் கொம்பனும் குறை சொல்ல முடியாதபடி ஆட்சி நடத்தி வருகிறோம் என பேசினார். மேலும் அவர் பேசுகையில், திமுக வாக்குச்சாவடி முகவர்கள் கொண்டுவரும் தகுதியான கோரிக்கைகள் உடனடியாக நிறைவேற்றித் தரப்படும் என்றார். 


மேலும் பேசிய அவர், ”எந்த கொம்பனாலும் குறை சொல்ல முடியாத ஆட்சியை நடத்திக்கொண்டிருக்கிறோம் எனக் கூறும்போது, எங்களுக்குள் குறை இருக்கலாம், எங்களுக்குள் பிரச்சனை இருக்கலாம் ஆனால் ஆட்சியில் எந்தக் குறையும் யாராலும் கண்டு பிடிக்க முடியாது என்றார். மேலும், தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் ஏதோவொரு வகையில் பயன்பெறுமாறு திட்டங்களை பார்த்து பார்த்து செயல் படுத்தி வருகிறோம். ஆட்சி தொடங்கப்பட்ட காலத்தில் ஒரு இடத்திற்குச் செல்லும்போது ஆயிரக்கணக்கில் மனுக்கள் சேரும், தற்போது நூற்றுக்கணக்கில் தான் மனுக்கள் சேருகிறது, இதுவே எனக்கு பெருமை” என்றார். 


அதேபோல், தெரிந்தோ தெரியாமலோ அளுநர் நமக்கு பிராச்சாரம் செய்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று கூட நான் சொல்லவில்லை,  தேர்தல் வரை அவரே இருக்கட்டும், இதனால் நமக்கு தான் வாக்குகள் அதிகரிக்கும். திமுகவின் தொண்டர் பலத்திற்கும் கட்டமைப்பிற்கும் தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, உலகத்திலேயே எந்த கட்சியும் இல்லை. வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் யார் ஆட்சிக்கு வருகிறார்கள் என்பதைக் கடந்து யார் வரக்கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும். இந்தியாவின் கட்டமைப்பை பாஜக சிதைத்து விட்டது. 2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக வென்றால் தமிழ்நாடு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்தியாவையே சிதைத்து விடுவார்கள். பாஜக ஆட்சியைத் தொடர்ந்தால் சமூக நீதியை, அரசியல் அமைப்புச் சட்டத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகமே இருக்காது. ஏன், தமிழ்நாடு என்ற மாநிலமோ, சட்டமன்றமோ, முதலமைச்சரோ, அமைச்சர்களோ, சட்டமன்ற உறுப்பினர்களோ இருக்க மாட்டார்கள். அனைத்தையும் காலி செய்து விடுவார்கள், உள்ளாட்சி அமைப்புகள் இருக்காது. இதேநிலைதான் மற்ற மாநிலங்களுக்கும் ஏற்படும். 


இதிலிருந்து இந்தியாவைக் காப்பாற்றதான், 26 கட்சிகள் அடங்கிய கூட்டணிக்கு I.N.D.I.A என பெயரிடப்பட்டுள்ளது. இதனை பிரதமர் மோடியால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. இந்த நோக்கத்தைப் பற்றி இப்போது இல்லை கடந்த ஓராண்டுக்கு மேலாக கூறிவருகிறேன். அதனால் தான் அவர்களுக்கு என்மீது கோபம். மத்திய பிரதேசத்துக்குப் போனாலும், அந்தாமான் விமானநிலையத்தை திறந்து வைக்கச் சென்றாலும்  திமுகவைத் திட்டுகிறார் பிரதமர் மோடி. திமுகவை வாரிசுகளின் கட்சி என்கின்றனர். இதனைக் கேட்டு கேட்டு புளித்து விட்டது” என முதலமைச்சர் பேசினார்.