எம்.ஜி.ஆர், ஜெயலலிதா என அசைக்கமுடியாத ஆளுமைகளை தமிழ் மக்களுக்குத் தந்த தமிழ் சினிமா பின்னாளில் தமிழ்நாட்டுக்குச் சில விநோத அரசியல் சக்திகளையும் அறிமுகப்படுத்தியிருக்கிறது. தானும் அரசியல் செய்கிறேன் எனக் களமிறங்கிய செவாலியர் தொடங்கி, கருப்பு எம்.ஜி.ஆர் ஆன கேப்டன் விஜயகாந்த், எதை மாற்றமுடியவில்லை என்றாலும் கட்சிப் பெயரையாவது அவ்வப்போது மாற்றும் லட்சிய டி.ராஜேந்தர், கட்சிக்குள்ளேயே அறிக்கைகளை ஏவிக்கொண்டிருக்கும் மய்யம் கமலஹாசன்வரை இந்த விநோதங்களுக்குப் பஞ்சமில்லை.
இவர்கள் வரிசையில்தான் சீமான். சிறுவயது தொடங்கியே திராவிட இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவர். நடிகர் இயக்குநர் எனப் பலமுகங்கள் இருந்தாலும் ஈழத்தமிழர்களுக்கான இவரது நெருப்புக்குரல்தான் இவரது அடையாளம்.’சீமான் வந்திருக்கு’ எனக் கருணாநிதியே மகிழ்ச்சியுறும் அளவுக்கு கோபாலபுரத்து வீட்டில் நேரம் கிடைக்கும்போதெல்லாம் முகாமிட்டவர். 2009-ஆம் ஆண்டு ஈழப்போர் உச்சம் இந்தப் பாசத்துக்குச் சோதனைக்காலமானது. நாம் தமிழர் கட்சியும் உருவானது. திராவிட இயக்கப் பாசம் தமிழ்த்தேசியப் பாசமாக மருவி, தற்போது அந்தத் தமிழ்த்தேசியமே தாம்தான் எனச் சீமானைச் சொல்ல வைத்திருக்கிறது.
’தமிழ்நாடு, ஒன்றியம் எனத் தொடங்கியதே நான்தானே’ எனச் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியிருக்கிறார் சீமான். புதிதாகத் தலைமையேற்ற தமிழ்நாடு அரசு திரும்பிய பக்கமெல்லாம் ‘ஒன்றிய அரசு’ என்றே குறிப்பிட்டு வருவதையொட்டி அவரது இந்தக் கருத்து இருந்தது.
சுதந்திரத்துக்கு முன்பு தொடங்கி ஒலித்து வரும் ஒன்றியக்குரலைச் சீமான் தன்குரலாகக் குறிப்பிடுவது ஏன்? ஈ.வே.ராமசாமியை தன் குலசாமி எனக் குறிப்பிட்டுப் பேசிய சீமான் குலசாமியின் வாக்கையே மறந்தாரா? 1947-களுக்குப் பிறகான ம.பொ.சி.யின் மாநில சுயாட்சிக் கோரிக்கையை மறந்தாரா? அல்லது பெரியார் வழி வந்த பேரறிஞர் அண்ணா தனது கட்சியின் முதல் தேர்தல் அறிக்கையிலேயே ‘இந்திய யூனியன்’ எனக் குறிப்பிட்டதை மறந்தாரா?
தமிழ்நாடு என்பதும் ஒன்றியம் என்பதும் இனவாரி, மொழிவாரி ஆட்சிக்கோரும் குமரிக்கண்டத்தவர்களின் நெடுங்கால உரிமைக்குரல். பெரியார் ‘குடி அரசு’ கொண்டுவந்தததும் அதன் பொருட்டுதான். தேசம் தேசியம் என்பதிலிருந்து சுயமாக தன்னை அரசாக அறிவித்துக் கொள்வது அதிகாரமல்ல அது குடிமையை மையப்படுத்தியது என்றார். குடிமையை மையப்படுத்திதான் தமிழ்நாடு முன்மொழியப்பட்டது.
1963-இல் நாடாளுமன்றத்தில் பேசிய அண்ணாவோ, சட்டம் சார்ந்த அதிகாரமானது, கூட்டாட்சி ஒன்றியத்துக்கும், அதன் அங்கங்களுக்குமிடையே பிரித்துத் தரப்பட்டுள்ளது’ என்றார்.
’கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத்தரவேண்டும்’ என முதலமைச்சர் அண்ணா தன் தம்பிக்கு 1969-ஆம் ஆண்டில் இறுதியாக கடிதமொன்றை எழுதினார். அண்ணாவின் சொல்கேட்ட தம்பியாக அவர் மறைந்த சில மாதங்களுக்குள்ளேயே மாநில சுய அதிகாரத்தை ஆய்வு செய்வதற்கென ராஜமன்னார் கமிட்டியை நிறுவினார் கருணாநிதி. அயலுறவு, ராணுவம், மத்திய வங்கிகள் தவிர மற்ற அதிகாரத்தை மாநிலங்களுக்குத் தரவேண்டும் என்றது அந்தக் குழு. தீர்மானம் நிறைவேற்றி ஒன்றியத்துக்குப் அனுப்பப்பட்ட பரிந்துரை ஓரமாய் போடப்பட்டது.
பின்னர் திமுக ஆட்சிக்கு வந்த காலமெல்லாம் இந்த சுயாட்சிக் கோரிக்கைகளும் தொடர்ந்து வலுத்து வந்தன. தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ’ஒன்றியம்’ எனச் சொல்வது இந்த நெடுங்காலக் குரல்களின் நீட்சி. ஆளுங்கட்சியானாலும் எதிர்கட்சியானாலும் சுயாட்சி என்பது பேரறிஞர் அண்ணா வழி வந்த திராவிட முன்னேற்றக் கழகத்தின் தார்மீகக் கொள்கை. அது பெரியார் பற்றவைத்த தீ!. எரிமலைப் பிழம்பை பற்றவைத்தது நான்தான் என இரட்டை மெழுகுவர்த்திகள் சொந்தம் கொண்டாடுவது முழுப் பூசணியை மறைக்கும் அபத்தம். இது சீமான் பேச்சுக்கும் பொருந்தும்.