சட்டப்பேரவையில் இன்று நெடுஞ்சாலை துறை மற்றும் பொதுப்பணித் துறையின் மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில், உறுப்பினர்கள் பேசியதற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு பதிலுரை அளித்தார்.
அப்போது அவர் பேசும்போது, தாய்மைக்கு இலக்கணமாகத் திகழ்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என நெகிழ்ந்தார். தமிழ் திரைப்பட உலகம் பட்டு போய்விடுமோ என்ற எண்ணம் இருந்தபோது திராவிட நடிகராக உதயமானவர் உதயநிதி என புகழாரம் சூட்டினார்.
பேரறிஞர் அண்ணாவின் ஆட்சியில் மராமத்து துறையாக இருந்ததை, பொதுப்பணித்துறை என மாற்றிய பின் அதில் முதலமைச்சராக இருந்தவர் கலைஞர். அந்த இடத்தில் இப்போது தான் இருப்பது பெருமையாக இருப்பதாக கண்கலங்கியபடி அமைச்சர் வேலு கூறினார்.
தொடர்ந்து பேசிய அமைச்சர், தமிழகத்தில் 11 ஆயிரம் கி.மீ தூரத்திற்கு மாநில நெடுஞ்சாலைகளும், தேசிய நெடுஞ்சாலைகள் 1,472 கி.மீ தூரத்திற்கும் NHAI கீழ் 5,123 கி.மீ சாலைகள் என மொத்தம் 70,566 கி.மீ சாலைகள் பராமரிப்பு மேற்கொள்வதாக கூறினார்.
சென்னையில் கத்திப்பாரா முதல் கோயம்பேடு திருமங்கலம் வரை புறவழிச்சாலை, தாம்பரம் - மதுரவாயல் - புழல் சாலை, வண்டலூர் - மீஞ்சூர் புறவழிச்சாலை என சென்னையில் அனைத்தும் திமுக ஆட்சியில் அமைக்கப்பட்டதாக கூறினார்.
எங்கள் ஆட்சியில் 2 வழிச்சாலைகள் 4 வழியாகவும், 4 வழிச்சாலைகள் 6 வழிச்சாலையாகவும், நகராட்சிகளின் புறவழிச் சாலைகள், ஊராட்சி மற்றும் ஒன்றிய நெடுஞ்சாலைகளை மேம்படுத்த வேண்டுமென முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளதாக அமைச்சர் கூறினார். அதேவேளையில் சாலை ஓரங்களில் மரங்களை நட்டு பசுமை மாறாமல் காக்க சட்டமன்ற உறுப்பினர்கள் ஒத்துழைக்க வேண்டும் எனவும் அமைச்சர் எ.வ.வேலு கேட்டுக் கொண்டார்.
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கும் விவேகானந்தர் பாறைக்கும் இடையே 140 மீட்டர் தூரம் கடலின் மேல், பாலம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது என அவர் தெரிவித்தார். இதுகுறித்து ஐஐடியுடன் ஆலோசனை மேற்கொண்டு வருவதாக கூறிய அமைச்சர், பாம்பன் பாலம் கட்டியது போல் நல்ல தரத்துடன் ரூ.37 கோடி மதிப்பீட்டில் கடல்சார் பாலம் அமைக்கப்படும் என்றும், பூம்புகார் நகரமும் சீரமைக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
சென்னை கிங் மருத்துவமனையில் பல்னோக்கு உயர் சிறப்பு மருத்துவமனை 4.89 ஏக்கர் பரப்பளவில் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும் கலைஞர் பெயரில் அமைய உள்ள நூலகம் 2 லட்சத்து 250 சதுர அடியில் ரூ.99 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட இருப்பதாகவும் அறிவித்து உள்ளார். நாட்டுப்புற இலக்கிய நாயகர் கி.ராஜநாராயணன் பெயரில் கோவில்பட்டியில் ரூ.1.81 கோடி மதிப்பீட்டில் நூலகத்துடன் கூடிய நினைவு மண்டபம் கட்டப்படும், என அமைச்சர் தெரிவித்தார்.
கீழடி அகழ்வாய்வில் கண்டறியப்பட்ட அரிய பொருட்களை கொண்ட ரூ.11 கோடியே 3 லட்சம் மதிப்பீட்டில் அருங்காட்சியகம் அமைக்கும் வேலை துரிதமாக நடைபெறுவதாகவும் அதை முதலமைச்சர் திறந்து வைப்பார் எனவும் கூறினார்.
தமிழ் கடவுள் வள்ளுவனுக்கு வள்ளுவர் கோட்டம் அமைத்தவர் கலைஞர் எனக்கூறிய அமைச்சர் எ.வ.வேலு, எதிர்கட்சியினருக்கு வள்ளுவர் மீது என்ன கசப்பு என தெரியவில்லை, வள்ளுவர் கோட்டத்தை பராமரிக்காமல், சீரழித்து விட்டனர் என குற்றம்சாட்டினார். வள்ளுவர் கோட்டம் ரூ.33.66 கோடி செலவில் கலைநயத்துடன் சீரமைக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் தெரிவித்தார்.
சென்னையில் உள்ள ஹூமாயூன் மஹால் அதன் கலைநயம் மாறாமல் சீரமைக்கப்படும் எனத்தெரிவித்த வேலு, இதுபோல் பொதுப்பணித்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அரண்மனை, தொண்மையான கட்டிடங்கள் அனைத்தும் அதன் பழமை மாறாமல் பாதுகாக்கப்படும் என உறுதியளித்தார்.