ரெம்டெசிவிர் மருந்து கொரோனா சிகிச்சையில் குறிப்பிட்ட அளவில் உதவுகிறது என்ற தகவலையடுத்து அம்மருந்தினை பெறுவதற்கு மக்கள் அலைமோதிவருகின்றனர். இதன் காரணமாக இம்மருந்தின் தட்டுப்பாடு நாளுக்கு நாள் அதிகரிக்கும் நிலையில், கள்ளச்சந்தையில் விற்பனையும் நடைபெற்றுவருகிறது. இம்மருந்தினால் கொரோனா நோய்கள் முழுமையாக குணமடையாது என்று தெரிந்தும் ஏதோ ஒரு நம்பிக்கையில் இம்மருந்தினை மக்கள் வாங்க முன்வருகின்றனர்.
இதனை பெறுவதற்கு மருத்துவரிடம் பெறப்பட்ட மருந்து சீட்டு, ஆதார் அட்டை, ஆர்டிபிசிர் பரிசோதனை செய்த நகல், ஆதார் அட்டை போன்றவற்றை காண்பித்த பிறகு தான் மருந்தினை பெறமுடியும் என அரசு அறிவித்துள்ளது. இதனையடுத்து அனைத்து ஆவணங்களுடன் மருத்துவனையின் வாசலில் நின்றாலும் மருந்தின் தட்டுப்பாட்டினால் இதனை பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக தமிழகத்தில் சென்னையில் மட்டும் விற்பனை செய்யப்பட்டுவந்த ரெம்டெசிவிர் தற்போது அனைத்து மாவட்ட தலைமை மருத்துவமனைகளிலும் விற்பனை செய்யப்படுகிறது. இதே போன்று நாடு முழுவதும் வழங்கப்பட்டுவரும் நிலையில், இம்மருந்திற்கான பற்றாக்குறையும் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த இம்மருந்திற்கான பற்றாக்குறையை எதிர்கொள்ளும் விதமாக, 61 வைரஸ் தடுப்பு மருந்துகளை ஆராய்ந்து, விஞ்ஞானிகள் SARS-CoV-2 ஆற்றலைக் கொண்ட மருந்தினை கண்டறிந்துள்ளனர்.
இதனை உயிர்வேதியியல் அறிவியல் பிரிவு, சி.எஸ்.ஐ.ஆர், தேசிய வேதியியல் ஆய்வகம், அறிவியல் மற்றும் புத்தாய்வுக்கழகம் மற்றும் (ஏ.சி.எஸ்.ஐ.ஆர்), பண்டிட் பகவத் தயால் சர்மா முதுகலை மருத்துவ அறிவியல் நிறுவனம், மற்றும் புனேவின் இன்டாக்ஸ் பிரைவேட் லிமிடெட் ஆகியவற்றின் விஞ்ஞானிகள் குழு இணைந்து செயல்பட்டு, கொரோனாவிற்கு சிகிச்சை அளிப்பதற்கான மாற்று மருந்தினை தயார் செய்துள்ளனர். இதில் கொரோனாவிற்கு சிகிச்சையளிக்கக்கூடிய லெடிபாஸ்விர் மற்றும் டக்லடாஸ்வீருடன் இணைந்து சோஃபோஸ்புவீர் ஆகியவை பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது ரெம்டெசிவிர் மற்றும் பிற மருந்துகளை விட சிறந்த SARS-CoV-2 திறனைக் கொண்டுள்ளதாக ஆய்வறிக்கையில் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் கொரோனாவிற்கான எதிர்ப்பு நடவடிக்கையிலும் இது சிறந்து விளங்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே தற்போது நாடு முழுவதும் ரெம்டெசிவிர் மருந்திற்கு ஏற்பட்டுள்ள இந்த தட்டுப்பாட்டினை சமாளிக்கவும், நோயாளிகளின் உயிரினைக்காப்பாற்றவும் இந்த மாற்று மருந்தினை பயன்படுத்தலாம் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். மேலும் 61 வைரஸ் தடுப்பு மருந்துகள் சேர்ந்துள்ள இந்த புதிய மருந்து மக்களுக்கு பயனுள்ளதாக இருப்பதோடு கொரோனாவிற்கு எதிராக போராடும் என்ற நம்பிக்கை உள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கண்டுபிடிப்பில், சோஃபோஸ்புவீருடன் இணைந்து லெடிபாஸ்விர் மற்றும் டக்லடாஸ்வீரைப் பயன்படுத்தியுள்ளதன் காரணமாக ரெம்டெசிவருக்கான மாற்று மருந்தாக பார்க்கப்படுவதாக விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.