நீலகிரிக்கு, நாளை அதிக கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. இதனால், அம்மாவட்டத்தில் நாளை ஒரு நாள் பள்ளிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வானிலை மைய எச்சரிக்கைகள் குறித்து தற்போது பார்க்கலாம்.
“நீலகிரிக்கு ரெட் அலெர்ட் - பள்ளிகள், சுற்றுலாத் தலங்கள் மூடல்“
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமான கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி மாவட்டங்களில் இன்று ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், நீலகிரியில் நாளை அதி கனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.
இதன் காரணமாக, மாவட்டத்தில் உள்ள அனைத்த பள்ளிகளுக்கும் நாளை ஒருநாள் விடுமுறை அளித்து மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. அதேபோல், பொதுமக்களின் பாதுகாப்பிற்காக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, நீலகிரியில் உள்ள சுற்றுலாத் தலங்கள் அனைத்தும் நாளை மூடப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதோடு, மழை, பேரிடர் பாதிப்புகள் குறித்த தகவல்களை தெரிவிக்க, மாவட்ட நிர்வாகம் சார்பில் உதவி எண்களும் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, பொதுமக்கள் 1077 என்ற கட்டணமில்லா தொலைபேசி மற்றும் 0423-2450034, 0423-24500335 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 9488700588 என்ற வாட்ஸ்அப் எண்ணிற்கும், மழை பாதிப்புகள் குறித்து பொதுமக்கள் தெரியப்படுத்தலாம் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், கோட்ட வாரியாக, ஊட்டிக்கு - 0423-2445577, 2442433, குன்னூருக்கு - 2206002 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு என்ன.?
தென் இந்திய பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமான, நாளை தமிழ்நாட்டின் ஒருசில இங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில், இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நீலகிரி மாவட்டம் மற்றும் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகளில் கன முதல் அதி கனமழையும், தேனி, தென்காசி மாவட்டங்களின் ஒருசில இடங்களில் மிக கனமழையும் பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.
அதேபோல், திண்டுக்கல், திருப்பூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு மற்றும் சேலம் மாவட்டங்களில் ஒருசில இடங்களிலும், கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.