விஜய்க்கு துணிவு இருக்கிறதா? திரள்நிதியை கையில் எடுத்த தவெகவுக்கு நாதக பதிலடி! பரபரப்பில் தமிழக அரசியல் களம்!

தமிழ் தேசியம் வேறு என சீமான் சொல்லும்போது விஜய் தமிழ்தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என சொன்னதே சீமானின் இந்த மனமாற்றத்திற்கான காரணம் என தகவல் வெளியானது

Continues below advertisement

தமிழக அரசியலில் ஆளுங்கட்சியான திமுகவுக்கும் எதிர்க்கட்சியான அதிமுகவுக்கும் பனிப்போர் நிலவி வருகிறது. இதற்கு சற்றும் குறைச்சல் இல்லாமல் ஆளுங்கட்சியாக மாறப்போகிறோம் என சொல்லிக்கொள்ளும் தவெகவுக்கும் நாம் தமிழர் கட்சிக்குமான போட்டா போட்டி நிலவி வருகிறது.

Continues below advertisement

விஜய் கட்சி ஆரம்பிக்கும் முன்பு வரை அன்புத்தம்பி என அடிக்கடி சந்திப்பு நடத்தி ஆதரவை கோரி வந்த சீமான், கட்சி ஆரம்பித்ததும் வழக்கம்போல் தனக்கே உரிய பாணியான தனித்துதான் போட்டி என கூவ ஆரம்பித்துவிட்டார்.

தமிழ் தேசியம் வேறு என சீமான் சொல்லும்போது விஜய் தமிழ்தேசியமும் திராவிடமும் இரண்டு கண்கள் என சொன்னதே சீமானின் இந்த மனமாற்றத்திற்கான காரணம் என தகவல் வெளியானது. அதுமட்டுமல்லாமல் தனது கட்சி கொள்கை தலைவர்களில் பெரியாரும் ஒருவர் என விஜய் கூறியுள்ளார்.

அதன்பின் என்ன நடந்ததோ ஏது நடந்ததோ சீமான் பெரியாரை சகட்டு மேனிக்கு விளாசி வருகிறார். ஆனால் சீமானுக்கு அரசியல் செய்ய இன்னுமும் எப்போதோ இறந்து போன பெரியார் தேவைப்படுகிறார் என அரசியல் கட்சி தலைவர் சாடி வருகின்றனர்.

இது ஒரு பக்கம் இருக்க தவெக தனது கட்சியின் முன்னேற்றத்தின் பக்கம் கவனத்தை திருப்பியுள்ளது. அதாவது வரும் 2026ஆம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெறுவதற்கான வியூகங்களை விஜய் வகித்து வருகிறார்.

தனது கட்சியில் பல்வேறு அணிகளை பிரித்து பொறுப்பாளர்களை நியமித்துள்ளார். அதன் தொடர்ச்சியாக தனது கட்சியில் வியூகங்களை வகுக்க ஆட்சியை பிடிக்க பிரசாந்த் கிஷோருடன் விஜய் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் தகவல் வெளியானது. இரண்டு முறை நடைபெற்ற சந்திப்புகளில் ஏராளமான விஷயங்கள் பேசப்பட்டதாக தெரிகிறது.

கிட்டத்தட்ட தேர்தலை எதிர்கொள்ள வியூகங்களை வகுக்க தவெகவுக்கு பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் அளித்துவிட்டதாக தெரிகிறது. இதுகுறித்து சீமானிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த சீமான் வியூக வகுப்பாளர்களை வைப்பது பணக்கொழுப்பு எனவும் பிரசாந்த் கிஷோருக்கு தமிழ்நாட்டை பற்றி என்ன தெரியும் எனவும் கேள்வி எழுப்பினார். இது தவெகவினரை சீண்டியுள்ளது.

தவெக உறுப்பினர்களும் விஜய் ரசிகர்களும் சமூக வலைதளத்தில் கொந்தளித்து விட்டனர். திரள்நிதி வார்த்தையை கையில் எடுத்த தவெக நிர்வாகிகள் கடுமையாக நாம் தமிழர் கட்சியையும் சீமானையும் சாடி வருகின்றனர்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த சாட்டை துரைமுருகன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “மக்களிடம் செல். மக்களுடன் வாழு. மக்களிடம் கற்றுக்கொள். மக்களுக்கு சேவையாற்று என்றார் அறிஞர் அண்ணா.

அரசியலில் ஆடம்பரமும், பட்டோபமும் கூடாது என்றும் அறிவுறுத்தினார். ஆனால், அண்ணாவின் வழித்தோன்றல்களே இன்றைக்கு அரசியலை ஆடம்பரமானதாக்கி, கட்சிகளை நிறுவனமயமாக்கிவிட்டார்கள். அந்த அடிப்படையிலேயே, தேர்தல் நிபுணர்கள், வியூக வகுப்பாளர்களைக் கொண்டு தேர்தலையும், அரசியலையும் எதிர்கொள்ளும் அபத்தமான முறை இங்கு கையாளப்படுகிறது. அதனை ஒருபோதும் நாம் தமிழர் கட்சி ஏற்கவில்லை என்று செய்தியாளர்கள் சந்திப்பில் சீமான் வலியுறுத்தினார். அந்த நடவடிக்கைகளை, 'பணக்கொழுப்பு' என மொத்தமாகத்தான் வர்ணித்தார்.

அந்த விமர்சனம் எல்லாக் கட்சிகளையும்தான் குறிக்கும். பொதுவாகச் சொல்லப்பட்ட விமர்சனத்திற்கு தவெக எதற்குக் குறுக்கே வந்து விழுகிறது? திருப்பரங்குன்றம் மலை சிக்கல் குறித்து வாய்திறக்காத தவெகவினர் இப்போது பொங்குவது ஏன்? தர்க்கரீதியாக விடையளிக்க வக்கற்றவர்கள், திரள்நிதியென ஏளனம் செய்வது பணக்கொழுப்பு மட்டுமல்ல; வாய்க்கொழுப்பும்கூட. பன்னாட்டு நிறுவனங்களிடமும், தனிப்பெரு முதலாளிகளிடமும்தான் கையேந்தக்கூடாதே ஒழிய, மக்களைப் பொருளாதரத்திற்காகச் சார்ந்திருப்பது ஒரு தவறும் இல்லை.

தாங்கள் நம்புகிற அரசியல் வெல்ல வேண்டுமென எண்ணுகிற பொதுமக்கள், தாங்களே விரும்பி அளிக்கிற நன்கொடைதான் திரள்நிதி.

அதேசமயம், லாட்டரி விற்பதும், இணையச் சூதாட்டத்தில் கல்லா கட்டுவதும், திரைப்படத்தின் டிக்கெட்டை பலமடங்கு ஏற்றி விற்றுப்பிழைப்பதும் பெருங்குற்றம் என்பதை தவெகவின் தலைவர் விஜய்க்கும், அவரது கட்சியைச் சேர்ந்த உறவுகளுக்கும் நினைவூட்டுகிறோம்.

மக்கள் மன்றத்திலேயே பேசத் துணிவற்ற விஜய் சட்டமன்றத்திற்குப் போய் என்னப் பேசப் போகிறார்? முதலில் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்துப் பேசட்டும். அதற்குத் துணிவு இருக்கிறதா? உளறிக் கொட்டுவதைப் பற்றி யார் பேசுவது? "சாதிய ஆதிக்கத்தை நிலைநிறுத்தப் போராடினார் அம்பேத்கர்" என மாநாட்டு மேடையில் உளறிக் கொட்டிய சகோதரர் விஜய்யின் தொண்டர்களா? எழுதிக் கொடுத்ததைக்கூட பிழையின்றி பேசாதவர், சட்டமன்றத்திற்குப் போய் பேசி, அரசியல் மாற்றத்தை சாத்தியப்படுத்தப் போகிறாரா? வெட்கக்கேடு!

ஊழலை ஒழிப்போமெனக் கூறிவிட்டு அதிமுகவோடு உள்ளிட்ட எந்தக் கட்சியோடும் பேச்சு வார்த்தை நடத்தவும் மாட்டோம். குடும்ப அரசியலை ஒழிப்போமெனவும் கூறிவிட்டு, காங்கிரசின் மீது ஒருதலைக் காதல் கொள்ளவும் மாட்டோம். நிறைவாக, தவெகவுக்குச் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான். எங்களுக்கு எதிரி நீங்கள் இல்லை. தேவையில்லாமல் குறுக்கே வந்து விழாதீர்கள். விழுந்தால், வரும் விளைவுகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” எனத் தெரிவித்துள்ளார்.

 

Continues below advertisement
Sponsored Links by Taboola