தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தை சேர்ந்த வணிகர்களான தந்தை மகனான ஜெயராஜ் - பென்னிக்கிஸ் கடந்த கடந்த 2020ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதி காவல்துறை விசாரணைக்கு அழைத்துசெல்லப்பட்ட நிலையில் விசாரணையின் போது காவல்துறையினர் தாக்கியதில் இருவரும் உயிரிழந்தனர். 

 

இருவர் உயிரிழந்தது தொடர்பாக எழுந்த குற்றச்சாட்டின் கீழ் தொடரடப்பட்ட வழக்கில் சாத்தான்குளம் காவல்நிலைய ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், ரகுகணேஷ் உள்ளிட்ட 9 பேரின் மீது சிபிஐ தரப்பில் குற்றபத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்நிலையில் இந்த வழக்கு விசாரணையானது மதுரை மாவட்ட முதலாவது கூடுதல் நீதிமன்றத்தில் நீதிபதி நாகலட்சுமி முன்பாக விசாரணைக்கு வந்தது. அப்போது காவலர் முருகன் தரப்பில் ஜாமின் கோரப்பட்டது தொடர்பாக விசாரணை நடைபெற்றது.  இதனை அடுத்து இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை மே -6ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.



 

உணவு பாதுகாப்பு கிடங்குகளுக்கு பொருள்களை கொண்டு செல்வதற்கான டெண்டர் குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு

 

நெல்லை மகாராஜா நகரைச் சேர்ந்த நட்டாத்தி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், "நான் தமிழ்நாடு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகத்தில் உணவு பொருள்கள், உரங்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை பாதுகாப்பு கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்காக போக்குவரத்து ஒப்பந்தத்தை பெற்று அதற்கான பணிகளை செய்து வருகிறேன். கடந்த மார்ச் 24ஆம் தேதி கொள்முதல் நிலையங்களில் இருந்து தானியங்கள், சர்க்கரை, சிமெண்ட், உரங்கள் போன்றவற்றை பாதுகாப்புக் கிடங்குகளுக்கு எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து பணி நியமன ஒப்பந்த டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டது. 

 



 

கடந்த 2021 ஆம் ஆண்டு தமிழ்நாடு சேமிப்பு கிடங்கு கழகம் சார்பில் வெளியிடப்பட்ட 2 இ-டெண்டர்கள் முறையான விதிகள் இன்றியும்; வெளிப்படைத்தன்மை இன்றியும் நடத்தப்பட்டதால் அவற்றை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் அதே விதிகள் மார்ச் மாதம் வெளியிடப்பட்ட இ-டெண்டரிலும் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஒரு சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சாதகமாக செயல்படும் நோக்கில் இந்த டெண்டர்கள் உள்ளது. அதோடு வெளிப்படைத்தன்மை ஏதுமின்றி டெண்டர் முடிவடைந்துள்ளது. கடந்த 9ஆம் தேதி டெண்டர்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாளாக குறிப்பிடப்பட்ட நிலையில் டெண்டர் முடிந்த ஒரு மணி நேரத்திற்குள்ளாக டெண்டரில் பங்கேற்றவர்கள் யார் என்பது குறித்த விவரங்கள் சேகரிக்கப்பட வேண்டும். ஆனால் இந்த டெண்டரில் 11ஆம் தேதி அந்த விபரங்கள் சேகரிக்கப்பட்டுள்ளது. இந்த தாமதம் முறைகேடு நிகழ்வதற்கான வாய்ப்பாக கருதப்படுகிறது இதுவும் டெண்டர் வெளிப்படை சட்டத்திற்கு புறம்பானது.

 

எனவே விதிகளை மீறி வெளிப்படைத்தன்மை இன்றி நடைபெற்ற இந்த டெண்டரை ரத்து செய்து விதிகளின் அடிப்படையில் புதிய டெண்டரை நடத்த உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி அப்துல் குத்தூஸ், கொள்முதல் நிலையங்களில் இருந்து உணவு பாதுகாப்பு கிடங்குகளுக்கு உணவு தானியங்கள், சர்க்கரை உள்ளிட்ட பொருள்களை கொண்டு செல்வதற்கான டெண்டர் குறித்து இறுதி முடிவு எடுக்கக் கூடாது என உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.



ஹிஜாப்  தீர்ப்பு எதிரான போராட்டத்தை ஒருங்கிணைத்த 2 பேரின் ஜாமீன் மனு தீர்ப்பு ஒத்திவைப்பு

  


தஞ்சையைச் சேர்ந்த ரஜிக்முகமது, நவாப்ஷா ஆகியோர் முன்ஜாமீன் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்திருந்தனர். அதில், "கடந்த மார்ச் 18ஆம் தேதி அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகே ஹிஜாப் விவகாரத்தில் கர்நாடக நீதிமன்றம் வழங்கிய உத்தரவை எதிர்க்கும் விதமாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது இந்நிகழ்வில் கலந்து கொண்டு பேசிய ஜமால் முஹம்மது மத்திய அரசிற்கு எதிராக பேசியதாக அதிராம்பட்டினம் கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின் அடிப்படையில் அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் எங்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

 

கர்நாடக நீதிமன்றத்தில் தீர்ப்பை எதிர்த்து விதமாகவே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்வு ஒருங்கிணைத்தோம் என்ற அடிப்படையிலும் எங்கள் மீது முன்விரோதம் காரணமாக இந்த வழக்கு பதியப்பட்டுள்ளது.  காவல் துறையினர் விசாரணை என்னும் பெயரில் தொடர்ச்சியாக தொந்தரவு செய்து வருகின்றனர். எனவே, இந்த வழக்கில் இருவருக்கும் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தனர். இந்த மனு நீதிபதி முரளிஷங்கர் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில், மனுதாரர் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு மட்டுமே செய்துள்ளனர். மேலும் ரம்ஜான் பண்டிகை வருவதால் முன்ஜாமீன் வழங்க வேண்டும். என தெரிவிக்கப்பட்டது. இதனை அடுத்து நீதிபதி வழக்கினை தீர்ப்பிற்காக ஒத்திவைத்தார்.