Sasikala in poes Garden : ஜெயலலிதா மறைவுக்கு பின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் சசிகலா வசித்து வந்தார். அதன் பின் சொத்து குவிப்பு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டார். சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை முடிந்து கடந்த 2020-ஆம் ஆண்டு பெங்களூரு சிறையில் இருந்து வெளிவந்த சசிகலா தியாகராய நகரில் உள்ள அவரது உறவினர் வீட்டில் வசித்து வருகிறார்.


இந்த நிலையில் போயஸ் கார்டன் வேதா இல்லம்., அதாவது முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா வாழ்ந்த வீட்டின் எதிரே  மூன்று தளம் கொண்ட பிரம்மாண்ட பங்களாவை கட்டி முடித்துள்ளார் சசிகலா. இன்று அதிகாலை புதிதாக கட்டப்பட்ட பங்களாவின் புதுமனை புகுவிழா நடைபெற்றது. நெருங்கிய உறவினர்கள் மட்டுமே இந்த விழாவில் பங்கேற்றனர். போயஸ் கார்டனில் உள்ள முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தில்  30 ஆண்டுகளுக்கு மேலாக தங்கி நிழல் அரசாங்கமாகவே செயல்பட்டு வந்தார் என கூறப்படுகிறது. இந்த நிலையில் ஜெயலலிதா மறைந்த பிறகு அவரது வேதா இல்லம் ரத்த சொந்தமான தீபா, மாதவனுக்கு நீதிமன்ற உத்தரவுப்படி கைமாறியது குறிப்பிடத்தக்கது. மேலும், போயஸ் கார்டன் தனக்கு ராசியான இடம் என சசிகலா கருதுவதால், நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் குடியேறியுள்ளார். இந்த சூழலில் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில், தீவிரமாக இறங்குவார் என  ஆதரவாளர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.