சசிகலா-தான் அதிமுக பொதுச்செயலாளர் என்ற தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு ஒபிஎஸ், எடப்பாடி பழனிசாமி, மதுசூதனன், செங்கோட்டையன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி என அத்தனை பேரும் அவரின் காலில் விழுந்து வணங்கி, கையெடுத்து கும்பிட்டபோது சசிகலா நினைத்திருப்பார், இனி சகலமும் நான் தான் என்று. ஆனால், காலம் வேறு ஒரு கணக்கை போட்டு அந்த சகலத்தையும் அப்படியே புரட்டி போட்டது.


தர்மயுத்தம் நடத்தி பிரிந்துபோனார் ஒபிஎஸ், சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைக்கு போனார் சசிகலா, சசிகலா யார் ? அவருக்கும் இந்த கட்சிக்கும் என்ன சம்பந்தம் என கேட்டார் எடப்பாடி. இப்படி காட்சிகள் மாறத் தொடங்கிய காலக்கட்டத்தில் ஒபிஎஸ் – ஈபிஎஸ் கரங்கள் ராஜ்பவனில் ஒன்றாக இணைந்தன. இணைத்து வைத்த வரலாற்று நிகழ்வை அரங்கேற்றினார் அப்போதைய ஆளுநர் வித்தியாசாகர் ராவ்.  அதன்பின்னர், அதிமுக-வின் ஒருங்கிணைப்பாளராக ஒபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளராக ஈபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட நிகழ்வுகள் எல்லாம் மக்கள் அறிந்தவைதான்.


தன்னுடைய சிறை தண்டனை முடிந்து சிறையில் இருந்து வெளியே வந்த சசிகலா, தொண்டர்கள் புடைசூழ, கார்கள் அணிவகுக்க தமிழகம் வந்த காட்சியை பார்த்தவர்கள் எல்லாம், அடுத்த நாளே கட்சியை கைப்பற்றி, ஆட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துவிடுவார் என பேசத்தொடங்கினர். சசிகலா கூட ஆன் த வே-யில் மைக்கை பிடித்து தீவிர அரசியலில் ஈடுபட போகிறேன் என அறிவித்தார். ஆனால், வந்ததும் அமைதி காத்தார், நாட்கள் சென்றன அப்போதும் அமைதி காத்தார், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது அப்போதும் அதே அமைதியை வெளிப்படுத்தினார்.



தான் வந்ததும் எடப்பாடி பழனிசாமியும் அவரது சகாக்களும் தன்னை வந்து பார்த்து சரணடைந்துவிடுவார்கள் என்று அவர் எதிர்ப்பார்த்திருக்கலாம், ஆனால், அப்படி ஏதும் நடக்கவில்லை. இரண்டாம் கட்ட, மூன்றாம் கட்ட நிர்வாகிகள் கூட அவரை சந்திக்க முன் வரவில்லை என்றபோது, அம்மா ஆட்சி அமைய அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறேன் என திடீரென அறிக்கை கொடுத்து டிடிவி தினகரனையே திணற வைத்தார். இனி, சசிகலா அவ்வளவுதான், அரசியலில் அவர் கதை முடிந்துவிட்டது என பேசத் தொடங்கினர்.


தேர்தலும் வந்தது, அவர் நினைத்தபடி அதிமுகவால் அம்மா ஆட்சியை அமைக்க முடியவில்லை. அதனால், அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த சசிகலா, ஆடியோ வெளியிடத் தொடங்கினார். தினம் தினம் தொண்டர்களுடன் பேசி, தான் மீண்டு வந்துவிடுவேன், அதிமுகவை கைப்பற்றிவிடுவேன் என ஆடியோக்களை அடுக்கினார். கொஞ்சம் அதிர்ந்துதான் போனது அதிமுக வட்டாரம். சசிகலாவுடன் பேசியவர்களை எல்லாம் கட்சியை விட்டு நீக்கியது. சசிகலாவிற்கு எதிராக எடப்பாடி பழனிசாமி தலைமையில் சேலம் மாவட்டத்தில் தொடங்கி பெரும்பாலான மாவட்டங்களில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.  ஆனால், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரான ஒ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் சசிகலாவிற்கு எதிராக எந்த தீர்மானமும் போடப்படவில்லை.


சசிகலா தொண்டர்களிடம் பேசி ஆடியோ வெளியிட்டாலும், தனக்கு நெருக்கமானவர்களிடம் மட்டுமே தனது திட்டத்தையும், வியூகத்தையும், வருத்தத்தையும் பகிர்ந்திருக்கிறார். அப்படி ஒருவரிடம் பேசும்போதுதான், அரசியலில் பதவிகளும், பொறுப்புகளும் வரும்போது நிலைமாறுபவர்கள், நிறம் மாறுபவர்கள் அதிகம் என்பது எனக்கு தெரிந்தாலும், நான் நம்பிச் சென்ற எடப்பாடி பழனிசாமி, தனக்கு இப்படி ஒரு துரோகத்தை செய்வார் என்று நான் எதிர்பார்க்கவில்லை என்று கலங்கியிருக்கிறார்.


இதையேதான், ஒரு தொலைக்காட்சிக்கு சமீபத்தில் அளித்துள்ள பேட்டியிலும் கொட்டியிருக்கிறார். இபிஎஸ்-சின் சுபாவத்தை தான் தவறாக கணித்துவிட்டதாகவும், பரோலில் வெளியே வந்தபோது, பரோல் நாட்களை குறைக்க வைத்தது, போயஸ் கார்டன் இல்லத்திற்கு செல்லாமல் தடுத்தது அனைத்தும் எடப்பாடி பழனிசாமியின் திட்டம்தான் என வருத்தப்பட்டிருக்கிறார் சசிகலா. கிட்டத்தட்ட மூன்றரை மணி நேரம் ரெக்கார்ட் செய்யப்பட்ட அந்த இண்டர்வியூ, விரைவில் வெளியாகவுள்ளது. ஆனாலும், அந்த நேர்காணலில் கூட மிகப் பொறுமையாக, நிதானமாக தான் ஜெயலலிதாவுடன் பயணைத்த 33 வருட கதையையும், பலருக்கு தெரியாத விஷயங்களையும் பகிர்ந்திருக்கிறார்.


அதில், ஒபிஎஸ் என்னை அதிமுக தலைமையாக ஏற்றுக்கொண்டு, என் பக்கம் வந்துவிடுவார் என்றும் அவரோடு சேர்ந்த பெரும்பாலான நிர்வாகிகளும் தன் பக்கம் வந்துவிடுவார்கள் என்றும் மிகத் தீர்க்கமாக  நம்புவதாக அந்த நேர்காணலில் சசிகலா சொல்லியிருப்பதாக கூறப்படுகிறது.


எல்லாவற்றையும், எல்லோரையும் எம்.ஜி.ஆர் போல மறந்து, மன்னித்து கட்சியை கைப்பற்றி வழிநடத்த வேண்டும் என்று நினைப்பதாகவும், ஜெயலலிதா போல கட்சியை கட்டுப்கோப்பாக ஒருமித்து தலைமையேற்று நடத்த திட்டமிட்டுக்கொண்டிருப்பதாகவும் அந்த நேர்காணலில் சொல்லியிருக்கும் சசிகலாவிடம், உங்களால் பதவி, பொறுப்புகள் பெற்றவர்களே உங்களுக்கு எதிராக திரும்பியதும், செயல்பட்டதும் கோபத்தை, ஆத்திரத்தை ஏற்படுத்தவில்லையா என நெறியாளர் கேட்கும்போது, எனக்கு அந்த பக்குவம் வந்துவிட்டது, ஜெயலலிதாவோடு நான் இருந்து எல்லாவற்றையும் பார்த்துவிட்டேன், தலைவர் எம்.ஜி.ஆரின்  அணுகுமுறை-தான் இதற்கு சரியாக இருக்கும் என தான் திடமாக நம்புவதாக கூறியிருக்கிறார்.


ஜெயலலிதா நினைவிடத்திற்கு விரைவில் செல்லும் சசிகலா, சேலம் மாவட்டம் எடப்பாடியில் இருந்து தன்னுடைய சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா அல்லது எம்.ஜி.ஆர் இறப்பிற்கு பின்னர் அதிமுக ஜா – ஜெ அணியாக பிரிந்தபோது, ஜெயலலிதா தனது சுற்றுப்பயணத்தை தஞ்சாவூரில் தொடங்கியதுபோல, தனக்கு பெருவாரியான ஆதரவு இருக்கும் தஞ்சை மாவட்டத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா என்றும் யோசித்துக்கொண்டிருக்கிறார்.


முதலில் மாவட்டத் தலைநகரங்கள் அல்லது திருச்சி, மதுரை, நெல்லை, கோவை போன்ற மண்டலங்களில் இருந்தும் தனது சுற்றுப்பயணத்தை தொடங்கலாமா எனவும் தனக்கு நெருக்கமானவர்களிடம் ஆலோசித்துக்கொண்டிருக்கிறார். என்னதான் தொண்டர்கள்-தான் கட்சியின் அடிநாதம், அவர்களால் தேர்வு செய்யப்படுபவர்கள்தான் கட்சியின் பொதுச்செயலாளர் என்று சசிகலா பேசினாலும், செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்களில் பெரும்பாலோனோர் யாருக்கு ஆதரவு தெரிவிக்கின்றார்களோ அவர்கள்தான் அதிமுகவின் பொதுச்செயலாளராக ஆக முடியும் என்பதும் சசிகலாவிற்கு நன்றாகவே தெரியும். அதனால், கட்சியின் பொதுக்குழு, செயற்குழு, வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை தன் பக்கம் இழுக்கும் திட்டத்தை அடுத்து செயல்படுத்த சசிகலா திட்டமிட்டிருக்கிறார்.


சசிகலா தொடங்கும் சுற்றுப்பயணத்திற்கு பிறகுதான், சசிகலா-வால் அதிமுகவை கைப்பற்ற முடியுமா அல்லது முடியவே முடியாதா என்பது தெரியும்..!