தலைமை செயலாளர் இறையன்பு அரசு துறை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், “மத்திய மாநில அரசுகளின் நலத்திட்ட விவரங்களை ஆளுநருக்கு சமர்ப்பிக்க அரசு துறை செயலாளர்கள் தயாராக இருக்க வேண்டும். அதற்கான காலம் பின்னர் அறிவிக்கப்படும்” என குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த விவகாரம் தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. கடந்த அதிமுக ஆட்சியில் அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மேற்கொண்ட ஆய்வுக்கு கடுமையான எதிர்ப்பை பதிவு செய்த திமுக தற்போது ஆளுநருக்கு அடிபணிந்துபோய்விட்டதா என பல்வேறு தரப்பினர் கேள்வி எழுப்புகின்றனர்.
இந்நிலையில், தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ். அழகிரி நலத்திட்ட விவரங்களை ஆளுநர் கேட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஆளுநரைப் பொறுத்தவரை அமைச்சரவையின் அறிவுரையின் படியும், ஆலோசனையின் பேரிலும்தான் செயல்பட முடியும். நேரடியாகச் செயல்பட முடியாது.
குடியரசுத் தலைவருக்கு வழங்கப்பட்டிருக்கிற அதிகாரங்களை போல, மாநில அளவில் ஆளுநருக்கான அதிகாரங்கள் குறித்தும் அரசமைப்புச் சட்டத்தால் தெளிவாகக் கூறப்பட்டுள்ளன.
தமிழக அரசின் திட்டங்கள், துறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பது பற்றிக் கண்காணிப்பதற்கோ, தலையிடுவதற்கோ ஆளுநருக்கு எந்த உரிமையும் இல்லை.
மாநில அரசு நிறைவேற்றும் திட்டங்கள் குறித்தும், செயல்பாடுகள் குறித்தும் அறிக்கை தருமாறு, தமிழக ஆளுநர் கேட்டிருப்பதாக வெளிவந்திருக்கும் செய்தி மிகுந்த அதிர்ச்சியைத் தருகிறது. இத்தகைய நடவடிக்கைகளின் மூலமாக தமிழகத்தில் பா.ஜ.க.வை காலூன்றச் செய்வதற்கான முயற்சியில் தமிழக ஆளுநர் ஈடுபடுகிறாரோ? என்ற சந்தேகம் வலுப்பெறுகிறது.
1968 நிர்வாகச் சீர்திருத்த ஆணையம், 1969 ராஜமன்னார் குழு, 1968 சர்காரியா ஆணையம் ஆகியவற்றின் பரிந்துரைகளுக்கு எதிராக தமிழக ஆளுநர் செயல்பட முற்படுவது வரம்பு மீறிய செயலாகும்.
ஏற்கெனவே, ஒட்டுமொத்த தமிழக மக்களால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க., தமிழக ஆளுநரின் நடவடிக்கையால் மேலும் கடுமையான பாதிப்பிற்கு உள்ளாக நேரிடும் என எச்சரிக்கிறேன். தமிழக ஆளுநர் திரு. ஆர்.என். ரவி அவர்கள் அரசமைப்புச் சட்டத்திற்கு உட்படாமல் தமது வரம்புகளை மீறி, உள்நோக்கத்தோடு செயல்படுவாரேயானால், அதன் விளைவுகளை சந்திக்க நேரிடும்” என பதிவிட்டுள்ளார்.
அழகிரியின் ட்வீட்டை ரீ ட்வீட் செய்திருக்கும் பாஜக பிரமுகர் நாராயணன் திருப்பதி, “ஏன் அதிர்ச்சி? திட்டங்களும் இல்லை செயல்பாடுகளும் இல்லை என்ற அச்சமா?
ஆளுநர் என்றாலே அரசை கலைப்பதற்கான உரிமையை பெற்றவர்தான் என்ற காங்கிரஸ் கட்சியின் கொள்கையில் இன்னும் மாற்றம் ஏற்படவில்லையே? என்று விமர்சித்துள்ளார்.