தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். சமீபத்தில் இவர் நடித்த அண்ணாத்த திரைப்படம் வெளியாகியது. நடிகர் ரஜினிகாந்த் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். இந்த நிலையில், அவரை நேற்று மாலை சென்னை, போயஸ் கார்டனில் உள்ள அவரது இல்லத்தில் சசிகலா நேரில் சந்தித்தார்.


இந்த சந்திப்பின்போது, நடிகர் ரஜினிகாந்திற்கு பூங்கொத்து அளித்த சசிகலா சமீபத்தில் அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை குறித்து கேட்டறிந்து, ரஜினிகாந்தின் உடல்நிலை குறித்து நலம் விசாரித்தார். பின்னர், சமீபத்தில் அவருக்கு டெல்லியில் மத்திய அரசின் சார்பில் தாதாசோகேப் பால்கே விருதுக்கும் வாழ்த்து தெரிவித்தார். இந்த சந்திப்பின்போது, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.




இதுதொடர்பாக, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் முகாம் அலுவலகம் என்று சசிகலா தரப்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சசிகலா நேற்று மாலை சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்தின் இல்லத்திற்கு நேரில் சென்று மரியாதை நிமித்தமாக சந்தித்து பேசினார். இந்த சந்திப்பின்போது, அவருடைய மனைவி லதா ரஜினிகாந்தும் உடனிருந்தார்.


ரஜினிகாந்த் அண்மையில் உடல்நலம் பாதிக்கப்பட்டு, தற்போது முற்றிலுமாக குணமடைந்து வந்துள்ளதை அறிந்து, நேரில் சென்று சந்தித்து அவருடைய உடல்நலனைப் பற்றி கேட்டறிந்தார். மேலும், ரஜினிகாந்த்தின் கலையுலகின் உயரிய விருதான தாதாசாகேப் பால்கே விருது பெற்றதற்கும் தனது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொண்டார் என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


நடிகர் ரஜினிகாந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்து, பின்னர் உடல்நலக்குறைவாக கட்சி தொடங்கப்படாது என்றும், அரசியலில் ஈடுபடப்போவதில்லை என்றும் கடந்தாண்டு இறுதியில் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.




முன்னதாக, ஜெயலலிதாவின் நினைவு நாளான நேற்று சசிகலா மெரினா கடற்கரையில் உள்ள ஜெயலலிதாவின் நினைவு இடத்தில் நேரில் அஞ்சலி செலுத்தினார். சட்டசபை தேர்தல் நிறைவு பெற்ற பிறகு, சசிகலா கடந்த சில மாதங்களாக அரசியல் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்.


அ.தி.மு.க.வை மீட்பேன் என்றும், தலைமை பொறுப்பை மீண்டும் கைப்பற்றுவேன் என்றும் அவ்வப்போது கூறி வருகிறார். அதேசமயத்தில், அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.



ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்


பேஸ்புக் பக்கத்தில் தொடர


ட்விட்டர் பக்கத்தில் தொடர


யூட்யூபில் வீடியோக்களை காண