செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் சேர்ந்தவர் அசோக் குமார், இவர் செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நிலம் வாங்கி அவற்றை வீட்டு மனைகளாக மாற்றி விற்பனை செய்யும் தொழிலாக செய்து வருகிறார். இந்நிலையில் சென்னையை சார்ந்த மதன்பிரபு மற்றும் அவரது மனைவி நித்யா ஆகியோருடன் இணைந்து அசோக்குமார் கடந்த சில ஆண்டுகளுக்கு முன், செங்கல்பட்டு அடுத்துள்ள மதுராந்தகம் மற்றும் கருங்குழி ஆகிய பகுதிகளில் நிலம் வாங்கி அவற்றை வீட்டுமனை பிரிவுகளாக மாற்றி அவற்றை விற்பதற்கான முயற்சிகளை செய்து வந்துள்ளனர்.


 

கொரோனா வைரஸ் தொற்றால்  ஏற்பட்ட பொதுமுடக்கம் காரணமாக ரியல் எஸ்டேட் தொழில் பாதிக்கப்பட்டது  , இதன் எதிரொலியாக மதுராந்தகம் மற்றும் கருங்குழி பகுதிகளில் மூவரும் இணைந்து போடப்பட்ட வீட்டு மனை பிரிவுகள் அனைத்தும் விற்காமல் இருந்ததால் மூவருக்கும் இடையே கருத்து வேறுபாடு உருவாகியுள்ளது. இதனால்  சென்னையை சார்ந்த மதன்பிரபு மற்றும் நித்தியா இருவரும் தங்களுடைய பங்கு தொகையான ஒரு கோடி ரூபாய்க்கு இடத்தின் மதிப்புடன் சேர்த்து நான்கு கோடி ரூபாயாக கொடுத்து விடுமாறு அசோக்குமாரிடம் கேட்டுள்ளார். ஆனால் அசோக்குமார் இடத்தை விற்று முடிக்காமல் எவ்வாறு தங்களுக்கு பணத்தை தரமுடியும், இடம் விற்ற பிறகு அதில் வரும் லாபத்தை பிரித்துக் கொள்ளலாம் என கூறியுள்ளார். ஆனால் அசோக் குமாரை விடாமல் தொடர்ந்து பணத்தை கேட்டு வந்துள்ளனர்.




 

இந்நிலையில்  மதன்பிரபு மற்றும் நித்யா ஆகியோர் தங்களுடைய பணத்தை பெற்றுத் தருமாறு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செங்கல்பட்டு தெற்கு மாவட்ட செயலாளரான ஆனந்த் என்பவரை அணுகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்த், அசோக்குமாரிடம் பலமுறை, இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் மதுராந்தகம் பகுதியில் குடியிருந்த அசோக்குமார், செங்கல்பட்டு அடுத்துள்ள சிங்கபெருமாள் கோவில் பகுதிக்கு குடியேறியுள்ளார்.



 

இந்நிலையில் நேற்று முன்தினம் அசோக்குமாரிடம் பேசிய மதன்பிரபு  இந்த விடயத்திற்கு சுமூகமாக பேசி சீக்கிரம் தீர்வு காணலாம் என கூறியுள்ளார். எனவே ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள ஒரு தோப்பிற்கு  வருமாறு கூறியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஆத்தூர் சுங்கச்சாவடி அருகே உள்ள தோப்பிற்கு, அசோக்குமார் சென்றுள்ளார். அப்பொழுது விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த் மற்றும் அவருடைய கூட்டாளிகள் 30 பேர் அங்கிருந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து ஆனந்த் அசோக் குமாரிடம் பணத்தை கொடுத்து விடும்படி கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்டுள்ளார். இல்லையென்றால் உன்னை கொன்று விடுவோம், எனவும் மிரட்டியதாக கூறப்படுகிறது.



 

இதனால் பயந்து போன அசோக்குமார் காவல்துறை அவசர உதவி எண் 100-க்கு அழைத்துள்ளார். தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்த நிலையில் அதற்குள் அவர்கள் தப்பி ஓடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அசோக்குமார் அளித்த புகாரின் அடிப்படையில், விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் ஆனந்த், மதன்பிரபு அவரது மனைவி நித்யா உட்பட 30 பேர் மீது அச்சரப்பாக்கம் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆள் கடத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட ஐந்து பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். மேலும் தலைமறைவான நபர்களை காவல்துறையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.